தேடுதல்

விசுவாசத்தை சுய தேவைகளுக்காக வளைப்பது குறித்து கவனம்

வெளிப்புறத் தோற்றத்திற்கும், தன்னைப்பற்றிய அதிக அக்கறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கமுயலும் வெளிவேடக்காரர்போல் இல்லாமல் இருப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்களுக்கு மிகுதியாக இருப்பதை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கி, பக்திமான்களைப்போல் நடிக்கும் மறைநூல் அறிஞர்களையும், தன்னிடம் இருப்பது அனைத்தையும் பிறருக்கு தெரியாமல் காணிக்கைப் பெட்டியில் போட்ட விதவைப்பெண்ணையும் ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுவதை விவரிக்கும் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 7ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேம் கோவிலுக்குள் அமர்ந்திருந்த இயேசு, தொங்கல் ஆடை அணிந்து, மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்வதை எதிர்பார்க்கும் மறைநூல் அறிஞர்கள், தொழுகைக்கூடங்களிலும், விருந்துகளிலும் முதன்மையான இடத்தை பெற விரும்புவதையும், கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்வதையும், நீண்டநேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல் நடிப்பதையும் பற்றி குறிப்பிட்டு, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் கேட்பதை காண்கிறோம் என்றார்.

அதேவேளை, காணிக்கைப் பெட்டியில் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்ட கைம்பெண்ணே, அனைவரையும்விட மிகுதியாகப் போட்டார், ஏனெனில், இவர் தனக்கு இருந்தது அனைத்தையும் போட்டுவிட்டார் என இயேசு அப்பெண்ணைப் புகழ்வதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இன்றைய நற்செய்தியில், ‘கோவிலில் காணிக்கைப் பெட்டியருகே அமர்ந்து இயேசு 'உற்று நோக்கிக் கொண்டிருந்தார்' என்ற வாக்கியத்தை மையமாக வைத்து தன் மூவேளை செப உரையை வழங்கினார்.

உற்று நோக்குதல், என்ற சொற்றொடரை நற்செய்தி வாசகத்திலிருந்து எடுத்துக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைநூல் அறிஞர்களைப்போல் வெளிவேடக்காரர்களாக, தங்கள் விசுவாசத்தை வாழ்பவர்களை, கூர்ந்து கவனித்து கவனமுடன்  செயல்படுமாறு அழைப்புவிடுத்தார். 

அனைத்திற்கும் மேலாக, வெளிப்புறத் தோற்றத்திற்கும், தன்னைப் பற்றிய அதிக அக்கறைக்கும் முக்கியத்துவம் கொடுக்க முயலும் வெளிவேடக்காரர்கள்போல் இல்லாமல் இருப்பதில் கவனமாக இருப்போம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் விசுவாசத்தை நம் சுய தேவைகளுக்காக வளைப்பது குறித்து அதிக கவனமுடன் செயல்படுவோம் எனக் கூறியதுடன், அக்கால மறைநூல் அறிஞர்கள், மதத்தையும், தங்கள் அதிகாரத்தையும், தவறாக பயன்படுத்தி, ஏழைகளைச் சுரண்டியதை சுட்டிக்காட்டினார்.

மற்றவர்களை நசுக்கவும், ஏழைகளின் பணத்தைப் பறிக்கவும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் எவருக்கும், இயேசுவின் கூற்றுகள் ஒரு சிறந்த பாடம் மற்றும் எச்சரிக்கை என உரைத்த திருத்தந்தை, நாம் பிறரால் புகழப்படவேண்டும் என செயல்களை ஆற்றுகிறோமா, அல்லது, கடவுளுக்கும் நமக்கு அடுத்திருப்போருக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும் ஆற்றும் பணியாக நம் செயல்கள் இருக்கின்றனவா என நமக்குளேயே கேட்டுப்பார்ப்போம், என அழைப்புவிடுத்தார்.

ஆன்மாவின் ஆபத்தான நோயாக இருக்கும் வெளிவேடத்தைக் குணப்படுத்த, இன்றைய நற்செய்தியில் ஏழைக் கைம்பெண்ணை நமக்கு எடுத்துக்காட்டாக இயேசு காட்டுகிறார் எனவும் உரைத்த திருத்தந்தை, தன்னிடம் இருந்த அனைத்தையும், காணிக்கைப் பெட்டியில் போட்டுவிட்டு, வாழ்வில் தனக்குத் தேவையான அனைத்தையும், இறைவனில் கண்டுகொள்ளும் இந்தக் கைம்பெண், நமக்கு நல்ல எடுத்துக்காட்டு என உரைத்தார்.

தனக்கிருந்த அனைத்தையும் வழங்கிவிட்டு, இறைவனின் பெரும்வளத்தில் முன்நிபந்தனையற்ற நம்பிக்கை கொண்டு, அதில் நிறைவைக் கண்ட இந்த கைம்பெண்போல், நாமும், கடவுளையும் நமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர்வது எவ்வாறு என கற்றுக்கொள்வோம் என விண்ணப்பித்து, தன் நண்பகல் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2021, 13:00

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >