தேடுதல்

மூவேளை செபவுரையின்போது வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில்(071121) மூவேளை செபவுரையின்போது வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில்(071121) 

எத்தியோப்பியாவில் அமைதி திரும்ப செபம்

திருத்தந்தை: உடன்பிறந்த உணர்வுடன்கூடிய நல்லிணக்கம், மற்றும் உரையாடலின் அமைதிப்பாதை எத்தியோப்பியாவில் இடம்பெறவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்கக் கண்டத்தின் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த ஓராண்டிற்கு மேலாக, குறிப்பாக, எத்தியோப்பியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள், மற்றும் உயிரிழப்புகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆப்ரிக்காவின் மத்தியக்கிழக்கில் கொம்புபோல் அமைந்து, Djibouti, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை உள்ளடக்கி, சொமாலிய தீபகற்பம் என அறியப்படும் இப்பகுதியில், குறிப்பாக எத்தியோப்பியாவில் கடந்த ஓராண்டிற்கு மேலாக இடம்பெற்றுவரும் மோதல்கள் குறித்து, நவம்பர் 7ம் தேதி வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பகுதியின் மோதல்களால் இடம்பெறுவரும் உயிரிழப்புகள் மற்றும் மனிதகுல நெருக்கடி குறித்து மக்களின் கவனத்திற்கு அழைப்பு விடுத்தார்.

வாழ்வதற்கான மிகப்பெரும் போராட்டங்களைச் சந்தித்துவரும் எத்தியோப்பிய மக்களுக்காக அனைவரும் செபிக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வுடன்கூடிய  நல்லிணக்கம், மற்றும் உரையாடலின் அமைதிப்பாதை இப்பகுதியில் இடம்பெறவேண்டும் என தான் மீண்டும் விண்ணப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து, சியேரா லியோன் நாட்டின் தலைநகர் Freetownல் எரிசக்தி எண்ணெயை ஏற்றிச்சென்ற வாகனம் தீப்பற்றி வெடித்ததில் உயிரிழந்தோருக்கு தன் செபங்களை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை Freetownல் இடம்பெற்ற இந்த விபத்தில் குறைந்த்து, 98 பேர் உயிரிழந்தனர்.

மூவேளை செப உரையின் இறுதியில், நவம்பர் 6ம் தேதி, சனிக்கிழமையன்று இஸ்பெயின் நாட்டின் Manresa எனுமிடத்தில் மூன்று இறையடியார்கள் அருளாளர்களாக அறிவிக்கப்பட்டதைப் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1930ம் ஆண்டுகளில் இஸ்பெயினின் உள்நாட்டுப் போர் காலத்து மத சித்ரவதைகளின்போது மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட கப்புச்சின் துறவறத்தார் Benet de Santa Coloma de Gramenet, Josep Oriol de Barcelona, Domènech de Sant Pere de Riudebitlles ஆகியோரின் எளிமையான வாழ்வும், துணிவுமிக்க எடுத்துக்காட்டும், அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் முன்னுதாரணமாகட்டும் என மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2021, 13:19