தேடுதல்

கொடை மற்றும் மன்னிப்பின் வழியில் பயணிப்போம்

கொடை மற்றும் மன்னிப்பு இரண்டும் கடவுள் மாட்சிமையின் முக்கியமான சாராம்சம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளின் மாட்சிமை என்பது தனது உயிரைக் கொடுக்கும் அளவிற்கு மக்களை அன்பு செய்வது என்றும், அவரை மாட்சிமைப்படுத்துவது என்பது, நாம் அவருக்காக நம்மையே கையளிப்பது, அணுகக்கூடிய வகையில் மாற்றுவது, அவரது அன்பைப் பிறருக்கு வழங்குவது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை அவர்கள், தவக்காலத்தின் ஐந்தாம் வார நற்செய்தி வாசகமான மானிடமகன் உயர்த்தப்பட வேண்டும் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார்.

கடவுளுக்கான மாட்சிமை என்பது மனிதர்கள் விரும்பும் வெற்றி, புகழ், அல்லது பகட்டைப் போன்றதோ, பொதுவெளியில் மக்களிடத்தில் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்திப் பெறக்கூடிய கைதட்டலோ அல்ல மாறாக இறைவனுக்காக நம்மையே அர்ப்பணிப்பது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசு தனது சிலுவை மரணத்தின் வழியாக தனது மாட்சிமையையும் தந்தைக் கடவுளின் மாட்சிமையையும் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், தனது உச்சகட்ட அன்பை சிலுவையில் வெளிப்படுத்திய இயேசு, தனது இரக்கமுள்ள முகத்தை முழுமையாக வெளிப்படுத்தி, சிலுவையில் தன்னுடன் அறையப்பட்டவர்களை மன்னித்து முழுமையான வாழ்க்கையை வழங்கினார் என்றும் கூறினார்.

கடவுளின் இருப்பிடமும் ஆலயமாகிய அச்சிலுவையில் இருந்து, ஒருபோதும் மறையாத, கொடை மற்றும் மன்னிப்பினால் உருவான மகிழ்ச்சியைத் தருகின்ற உண்மையான மாட்சிமையை உலகிற்கு கற்பித்தார் என்றும், கொடை மற்றும் மன்னிப்பு இரண்டும் கடவுள் மாட்சிமையின் முக்கியமான சாராம்சம் என்றும் கூறினார் திருத்தந்தை.

இவையே நம் வாழ்விற்கான வழிகள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நாம் நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் பார்ப்பதிலிருந்து மிகவும் மாறுபட்ட அளவுகோல்கள் என்றும், மகிமையைக் கொடுப்பதற்குப் பதிலாக அதனைப் பெறுவது என்றும் கூறினார்.

கொடை மன்னிப்பு என்னும் இரண்டு பற்றிய வேறுபட்ட கருத்துக்கள் நம்மைச்சுற்றிலும் நமக்குள்ளும் இருக்கின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உலக மகிமை நமது இதயத்திற்கு மகிழ்ச்சியைத் தராது, நன்மைக்கு வழிவகுக்காது, மாறாக, பிரிவினை, கருத்துவேறுபாடு மற்றும் பொறாமைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறினார்.

நான் எத்தகைய மகிமையை மாட்சிமையை  எனது எதிர்கால வாழ்விற்காகக் கனவு காண்கின்றேன்? என்னுடைய திறமை, அல்லது எனக்குச் சொந்தமான விஷயங்கள் வழியாக மற்றவர்களைக் கவர விரும்புகின்றேனா? அல்லது கொடை மற்றும் மன்னிப்பு வழியில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் வழியில், அன்பில் சோர்வடையாதவர்களின் வழியில் வாழ விரும்புகின்றேனா? என்று சிந்தித்துப்பார்க்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

நாம் பிறருக்குக் கொடுக்கும்போதும் மன்னிக்கும்போதும், கடவுளின் மகிமை நம்மில் பிரகாசிக்கிறது என்பதை நினைவில் கொள்வோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நம்பிக்கையுடன் உடன்நடந்து அவரைப் பின்பற்றிய கன்னி மரியா இயேசுவினது அன்பின் உயிருள்ள பிரதிபலிப்புக்களாக நாம் இருக்க உதவுவாராக என்று கூறி கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2024, 12:19

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >