தேடுதல்

தாழ்ச்சி மற்றும் அமைதியின் அரசராக எருசலேம் நுழைந்த இயேசு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரையின்போது, அண்மையில் கொலம்பியாவில் இறந்தவர்கள், மாஸ்கோ, உக்ரைன், காசா பகுதியில் போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து செபித்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசு தாழ்ச்சியுள்ள மற்றும் அமைதியுள்ள அரசராக, எருசலேமிற்குள் நுழைந்தார் என்றும், இரக்கமுள்ள அவரே நம் பாவங்களை மன்னிக்க வல்லவர், எனவே அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புனித வாரத்தின் துவக்கமான குருத்து ஞாயிறு திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நமது பகைமை, வெறுப்பு, வன்முறை போன்றவற்றிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவர் இயேசு என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் இறந்தவர்கள், மாஸ்கோ, உக்ரைன், காசா பகுதியில் போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து செபித்தார்.

சில நாட்களுக்கு முன்பு கொலம்பியாவில் உள்ள San Josè de Apartado குழுமத்தில் இருந்த ஓர் இளம் பெண்ணும் சிறுவனும் கொலை செய்யப்பட்டதை எடுத்துரைத்து அதற்காக தன் ஆழ்ந்த இரங்கலையும் உடனிருப்பையும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், கடந்த 2018- ஆம் ஆண்டு, ஒருங்கிணைந்தப் பொருளாதாரம், அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான அர்ப்பணிப்புக்காக அக்குழுமம் விருது பெற்றது என்றும் எடுத்துரைத்தார்.

அண்மையில் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனது செபத்தினை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இறந்தவர்கள் அனைவரையும் இறைவன் அவரது இல்லத்திற்கு அமைதியுடன் வரவேற்கவும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கவும் செபிப்போம் என்றும் கூறினார். இத்தகைய கொடிய செயல்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் அனைத்தும் கொலை செய்யாதே என்று கட்டளைப் பிறப்பித்தக் கடவுளைப் புண்படுத்துகின்றன என்றும், இத்தகைய செயல்களை செய்பவர்களின் இதயங்களை இறைவன் மாற்றட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

உரோம் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் குருத்து ஞாயிறு வழிபாட்டிற்காக பனை ஓலைக்குருத்துக்களை வழங்கிய இத்தாலியின் சன்ரேமோ நகர மக்கள் அனைவருக்கும் தன் நன்றியினைத் தெரிவித்தார். நான்கு நூற்றாண்டு அளவாக, பாரம்பரியம் மிக்க இந்த குருத்து ஞாயிறு பவனி வழிபாட்டிற்குத் தொடர்ந்து உதவி வரும் அம்மக்களுக்கு இறைவன் ஆசீர் அளிப்பாராக என்றும் கூறினார் திருத்தந்தை.

போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்காகவும் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், துன்புறுத்தப்பட்ட உக்ரைன் மக்களுக்காகவும், வாழ்விடங்கள் தாக்கப்பட்டு மின்சார வசதியின்றி துன்புறும் மக்களுக்காகவும் சிறப்பாக செபிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.   

மோதல்களானது மரணம் மற்றும் துன்பத்தை ஏற்படுத்துவதோடு, பெரிய அளவில் மனிதாபிமானப் பேரழிவையும் ஏற்படுத்துகின்றது என்றும், போரினால் துன்புறும் உக்ரைன் மற்றும் காசா பகுதி மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை.

புனித வாரத்தின் இந்நாட்களில் இயேசுவோடு மிக நெருக்கமாக இருக்கவும், உயிர்ப்பின் மகிழ்வை நாம் பெறவும், அன்னை மரியாவிடம் அருள்வேண்டுவோம் என்று கூறி மூவேளை செபத்தைத் தொடர்ந்து தனது சிறப்பு ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2024, 14:30

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >