தேடுதல்

பெண்களுக்கு சமமாண்பும், மரியாதையும் கிடைக்கப்பெற..

தங்களது வாழ்க்கை மற்றும் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கை நலனுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு உதவவேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

பெண்களுக்கு உறுதியான சமமாண்பும் மரியாதையும் கிடைக்கப்பெற நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றும், மனித மாண்பினை உறுதிப்படுத்துதல், பாதுகாத்தல், கொடையாம் வாழ்க்கையை வரவேற்றல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சமூக அரசியல் நிறுவனங்கள் பெண்களுக்கும் இதனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின் இறுதியில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் மாதம் 8ஆம் நாள் சிறப்பிக்கப்பட்ட  அகில உலக பெண்கள் தினத்தைக் குறிப்பிட்டு பெண்களின் மாண்பு மதிக்கப்பட வேண்டும், சம மாண்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தங்களது வாழ்க்கை மற்றும் தங்களது பிள்ளைகளின் வாழ்க்கை நலனுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஹெய்ட்டி பகுதியில் அண்மையில் ஏற்பட்டு வரும் வன்முறை நிகழ்வுகள் குறித்து வருத்தம் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், பல ஆண்டுகளாகத் துன்பங்களை அனுபவித்து வரும் அத்தகைய மக்களுடன் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.

அனைத்து வகையான வன்முறைகளும் நிறுத்தப்படவும், பன்னாட்டு சமூகத்தின் புதுப்பிக்கப்பட்ட ஆதரவுடன் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அதிகரிக்கவும் வேண்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இதற்கானத் தங்கள் பங்களிப்பை அனைவரும் வழங்குவதற்காக, அன்னை மரியின் பரிந்துரையின் வழியாக செபிக்க அழைப்பதாகவும் கூறினார்.

மேலும் மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ரமலான் நோன்பினைத் தொடங்க இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனது செபத்தையும் உடனிருப்பையும் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருக்கும் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

குறிப்பாக, பாம்ப்லோனாவில் உள்ள இராபியா-இசாகா கல்லூரி மாணவர்கள், மாட்ரிட், முர்சியா, மலகா மற்றும் நியூ ஜெர்சியில் இருந்து வரும் தூய மரியா ப்ளைன்ஃபீல்ட் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

உரோமில் உள்ள குவாதலூப்பே அன்னை மற்றும் மறைசாட்சியாளரான தூய பிலிப்பு பங்குத்தள மக்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ரெஜ்ஜோ கலாபிரியா, கஸ்டல்மோந்தே தூய ஏலெனா குவார்து பகுதித் திருப்பயணிகளையும் வாழ்த்தினார்.

உரோமில் வாழும் காங்கோ குடியரசின் கத்தோலிக்க சமூகத்தாரை அன்புடன் வரவேற்றத் திருத்தந்தை அவர்கள், துன்புறும் உக்ரைன், புனித பூமி, பகுதிகளில் அமைதி நிலவ செபிக்கவேண்டும் என்றும், பொதுமக்களிடையே அதிகமான துன்பங்களை ஏற்படுத்தும் பகைமை விரைவில் நிறுத்தப்பட செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 March 2024, 13:18

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >