தேடுதல்

உயிர்ப்பு ஞாயிறு போர் நிறுத்தத்திற்கு மீண்டும் அழைப்பு

அரசியல் தலைவர்கள், அமைதிக்காக ஏங்கும் மக்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பார்களாக - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஏப்ரல் 24, இஞ்ஞாயிறன்று, இரஷ்யாவின் பெரும்பான்மையான ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், உக்ரைன் நாட்டின் ஆர்த்தடாக்ஸ் மற்றும், கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்தவேளை, அந்நாளில்  போர் நிறுத்தம் இடம்பெறவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 24, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின்னர் இவ்வாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதியிழந்து நடத்தப்பட்டுவரும் இந்தப் போரில் காயமடைந்தவர்களுக்கு இயேசு அமைதியை அருள்வாராக என்று கூறினார்.

இரஷ்யா, உக்ரைனில் போரைத் துவக்கி இஞ்ஞாயிறோடு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்தப் போரில் நாளுக்குநாள் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்றுரைத்த திருத்தந்தை, மரணத்தை வருவிக்கும் ஆயுதங்களின் சப்தங்கள் அடங்கி, உயிர்ப்பை அறிவிக்கும் ஆலயமணிகளின் சப்தங்களை நாம் கேட்போம் என்று கூறினார். அரசியல் தலைவர்கள், அமைதிக்காக ஏங்கும் மக்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பார்களாக என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி இயலக்கூடியதே, அமைதிக்காக கடவுளை வேண்டுங்கள் என்றும், வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம் கூறினார்.

உக்ரைனில் 136க்கும் மேற்பட்ட நலவாழ்வு மையங்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மற்றும், ஒரு நாளைக்கு 22 பள்ளிகள் என்ற முறையில், அவை குண்டுவீச்சுக்களால் சேதமடைந்து வருகின்றன..

காமரூனில் அமைதிக்காக செபம்

மேலும், ஆப்ரிக்க நாடான காமரூனை மீண்டும் அனைனை மரியாவுக்கு அர்ப்பணித்து, அந்நாட்டில் அமைதி நிலவுவதற்காக, Marienberg அன்னை மரியா திருத்தலத்திற்கு இஞ்ஞாயிறன்று திருப்பயணம் மேற்கொண்ட அந்நாட்டு ஆயர்கள் மற்றும், கத்தோலிக்கருக்கு, தன் ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு, அந்நாட்டில் விரைவில் அமைதி இடம்பெறவும் இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அல்லேலூயா வாழ்த்தொலி உரை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், உயிர்த்த இயேசு, நம் அச்சங்கள், மற்றும், அவநம்பிக்கைகளை அகற்றுகிறார் என்று கூறினார்.

உயிர்த்த இயேசு நம்மோடு தங்கியிருக்க விரும்புகிறார், நாம் அவரைத் தேடவேண்டும் என்பதற்காக காத்திருக்கிறார், ஏனெனில், நம் பயங்கள், மற்றும், அவநம்பிக்கைகளை நம்மைவிட்டு விரட்டுவதற்கு, நமக்கு உதவ அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் எனவும் திருத்தந்தை கூறினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 April 2022, 13:33

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >