தேடுதல்

இதயத்தை தூய்மையாக்கும்போது, உலகமும் தூய்மையாகும்

வெளிப்புற சடங்கு முறைகளை முன்னிறுத்தி, இதயத்தையும் விசுவாசத்தையும் பின்னே தள்ளிவைப்பது, மதவாதத்தின் ஆபத்தான வெளிப்பாடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் வாழ்வின் துயர்களுக்கும், நம் குறைகளின் விளைவுகளுக்கும் பிறரை குற்றம்கூறும் மனநிலையிலிருந்து நாம் வெளிவர வேண்டும் என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதைக் கண்ட பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவிடம் அதுபற்றி குறைகூறியதையும், அதற்கு இயேசு அளித்த பதிலையும் மையப்படுத்தி வழங்கப்பட்ட இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றி தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரையில் விளக்கமளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதனுக்கு உள்ளிருந்து வருபவையே அவனை அதிகம் மாசுபடுத்துகின்றன என்று கூறிய இயேசுவின் கருத்தை வலியுறுத்தி, தன் உரையைத் தொடர்ந்தார்.

பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றாமல் உணவருந்திய சீடர்களின் செயல்களால் இடறல்பட்ட பரிசேயரும், மறைநூல் அறிஞரும், இவ்வாறு செய்வது பாரம்பரிய மதநடைமுறைகளுக்கு முரணானது (மாற் 7: 2-5) என உள்ளத்தில் எண்ணி, இயேசுவிடம் புகார் செய்வதை காணும் நாம், இயேசுவும் அவருடைய சீடர்களும், ஏன் இந்த மரபுகளை புறக்கணிக்கிறார்கள்? என்ற கேள்வியை, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் என தொடர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் எடுத்தரைத்தது நல்லதொரு  பழக்கமே, ஆனால் இயேசுவோ, எல்லா நடைமுறைகளுக்கும் மையமாக விசுவாசத்தை சுட்டிக்காட்ட முயல்வதால், அவரின் பதில் வித்தியாசமாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்புற சடங்கு முறைகளை முன்னிறுத்தி, இதயத்தையும் விசுவாசத்தையும் பின்னே தள்ளிவைப்பது, மதவாதத்தின் ஆபத்தான வெளிப்பாடு என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார் என மேலும் விளக்கினார்.

வெளிபுறத் தோற்றங்களால் அல்ல, மாறாக, இதயத்தைத் தொடும் விசுவாசத்தையே விரும்பும் இயேசு, மக்களை நோக்கி,"ஒரு மனிதனுக்கு உள்ளே செல்லும் விடயங்களால் அவனைத் தீட்டுப்படுத்த முடியாது; ஆனால் ஒரு மனிதனிடமிருந்து வெளியே வரும் விடயங்களே அவனைத் தீட்டுப்படுத்துகின்றன” (மாற் 7:15).

அத்துடன், "உள்ளிருந்து, அதாவது, இதயத்திலிருந்து" (மாற் 7:21) தீய விடயங்கள் பிறக்கின்றன, என இயேசு கூறும் வார்த்தைகள், புரட்சிகரமானவை, மற்றும், பழைய மரபுகளை தலைகீழாகப் புரட்டிப்போடுகின்றன என எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தீமை எப்போதும் வெளியிலிருந்தே வருகிறது என எண்ணிக்கொண்டு, மற்றவர்களை, சமுதாயத்தை, உலகத்தை குற்றஞ்சாட்டுவதில் நேரத்தை வீணடிக்கும்போது, நம் கோபத்தாலும், கசப்புணர்வுகளாலும் கடவுளை நாம் நம் இதயத்திலிருந்து விலக்கி வைக்கிறோம் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, கோபம், மனக்கசப்பு, சோகம் என்பவை இதயத்தில் எழும்போது, கடவுளை நோக்கி திறக்கப்படவேண்டிய நம் மனக்கதவுகள் மூடப்படுகின்றன என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

மற்றவர்களை குறைகூறுவதிலிருந்தும், புகார்களால் உலகை மாசுபடுத்தி நேரத்தை வீணாக்குவதிலிருந்தும் நம்மை விடுவிக்குமாறு இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்வோம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இதயத்தை உற்றுநோக்கும்போது, நாம் இவ்வுலகில் வெறுக்கின்ற அனைத்தையும், அங்கேயேக் காணலாம் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயத்தை தூய்மையாக்கத் துவங்குவதன் வழியாக இவ்வுலகை தூய்மையாக்க நாம் உதவலாம் என எடுத்துரைத்து, மனத்தூய்மையின் வழியாக, வரலாற்றையே மாற்றிய அன்னைமரியாவை, அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் முன்வைத்து, தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2021, 12:39

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >