தேடுதல்

மூவேளை செபவுரை ய 060621 மூவேளை செபவுரை ய 060621 

வாழ்வின் நோக்கம் என்பது தன்னையே வழங்குவதில் உள்ளது

திருத்தந்தை : நாம் பாவிகளாக இருந்தாலும், நம்மோடு தன்னை இணைத்துக்கொள்ள இறைவன் மறுப்பதில்லை, ஏனெனில், திருநற்கருணை என்பது புனிதர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியல்ல, மாறாக, பாவிகளுக்குரிய அப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வழங்குதல், பகிர்தல் என்ற இரு எளிமையான செயல்பாடுகள் வழியாக, மிகப்பெரும் அருளடையாளத்தை இயேசு நமக்கு வழங்கினார் என ஜூன் 6ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் திருவிழாவையொட்டி வழங்கிய மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறுதி இரவு உணவின்போது, இயேசு கூறிய வார்த்தைகளும், அவர் செயல்பாடுகளும் (மாற் 14:12-16, 22-26) நம் இதயத்தைத் தொடுபவைகளாக உள்ளன என்றுரைத்த திருத்தந்தை, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்ற எளிய வார்த்தைங்களில் மிகப்பெரிய அருளடையாளத்தை உருவாக்கினார், என்று கூறினார்.

இயேசு அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, தன் சீடர்களுக்குக் கொடுத்தது, பெருங்கூட்டத்திற்கு அப்பத்தை வழங்கிய புதுமையைப் போன்றது அல்ல, மாறாக, தன்னைப் பிட்டு சீடர்களுக்கு வழங்கியதாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வின் நோக்கம் என்பது தன்னையே வழங்குவதில் உள்ளது, அதேவேளை வாழ்வின் மிகப்பெரும் செயல் என்பது பணிபுரிவதாகும் என்பதை இயேசு இறுதி இரவு உணவின்போது காண்பிக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, ஒரு சிறு துண்டு அப்பத்தில், அதுவும் அது பிட்கப்படும்போது பீறிட்டுவரும் அன்பு மற்றும் பகிர்தலில் இறைவனின் மகத்துவத்தைக் காண்கிறோம் என மேலும் எடுத்துரைத்தார்.

அப்பத்தைப்போல் பிட்கப்படும் நிலைக்குள்ளேயே நம் ஒவ்வொருவரின் பலமும் அடங்கியுள்ளது, ஏனெனில், அன்பின் சக்தி உடைக்கப்பட்டு பகிரப்படும்போதே அது வாழ்வுக்கு பலத்தை வழங்கி உரமூட்டுகிறது, மற்றும், அது பிட்கப்படும்போது, நம்மை ஒன்றிப்பில் கொணர்கிறது, என்றுரைத்தார் திருத்தந்தை.

திருநற்கருகருணையின் நொறுங்குபடும், அல்லது, உடைபடும் நிலை என்பது, தவறு செய்வோரை மன்னிக்கும் வலிமையுடையது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னால் அன்புகூரப்பட்ட சீடர் யூதாஸ், தன்னைக் காட்டிக்கொடுக்கவுள்ளார் என்பதை அறிந்திருந்தும், அவரைத் தண்டிக்காமல், அவருக்காகவும் தன் உயிரை வழங்குகிறார் இயேசு என்பதை சுட்டிக்காட்டினார்.

நாம் பாவிகளாக இருந்தாலும், நம்மோடு தன்னை இணைத்துக்கொள்ள இறைவன் மறுப்பதில்லை, ஏனெனில், திருநற்கருணை என்பது புனிதர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியல்ல, மாறாக, பாவிகளுக்குரிய அப்பம் என்று, மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வின் அப்பத்தை ஒவ்வொருமுறை நாம் பெறும்போதும், நம் உடைபடும் நிலைக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறார் இயேசு, அதுமட்டுமல்ல நம் உடைபடும் நிலைகளை அவரோடு பகிரும்போது, அவர் மகிழ்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுபோல், மற்றவர்களின் உடைபடும் நிலையையும் நம் அன்பின் துணையுடன் பகிர்ந்துகொள்வதற்குரிய பலத்தை இறைவன் நமக்கு வழங்குகிறார், என மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2021, 13:19

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >