தேடுதல்

நம் துன்பங்களால் தொடப்பட அனுமதிக்கும் இயேசு

திருத்தந்தை : அன்பின்றி வாழ்வதும், அன்புகூர வாய்ப்பின்றி வாழ்வதும் வாழ்வின் மிகப்பெரும் நோய்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்தகாலத் தவறுகள், மற்றும் காயங்களிலிருந்து நம் இதயங்களை குணப்படுத்த, நம் பாவங்கள், மற்றும், தவறான முற்சார்பு எண்ணங்களையும் தாண்டிச்சென்று நமக்கு உதவுகிறார் இயேசு என  எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 27, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற் 5:21-42) மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின் குறைபாட்டால் காயப்பட்டிருக்கும் இதயங்களை, இயேசு குணப்படுத்துவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என விளக்கமளித்தார்.

இரு புதுமைகள், அதாவது நோய், மற்றும் மரணம் குறித்துப் பேசும் இந்த நற்செய்தி பகுதி, இயேசு நம் துன்பங்களாலும் மரணத்தாலும் தான் தொடப்பட அனுமதிக்கிறார் என்பதையும், துயரமோ, மரணமோ ஒருநாளும் வெற்றி கொள்ளாது என்பதையும் காண்பிக்கிறார் என்று எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெருந்தொற்றின் பாதிப்புக்கள் இன்னும் உலகில் இருந்துவரும் நிலையில், ஞாயிறு நற்செய்தியின் இரு புதுமைகளுள், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் குணம்பெற்ற புதுமையை, தன் மூவேளை செப உரையில் மையப்படுத்தினார், திருத்தந்தை.

இரத்தப்போக்கு நோயுடைய இப்பெண், சமுதாயத்தில் தீட்டுப்பட்டவராக கருதப்பட்டதால், கணவரோடும், குடும்பத்தோடும் வாழ வாய்ப்பின்றி, தனிமையில், காயம்பட்ட இதயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின்றி வாழ்வதும், அன்புகூர வாய்ப்பின்றி வாழ்வதும், வாழ்வின் மிகப்பெரும் நோய் என எடுத்துரைத்தார்.

இறைவனுடன் கொள்ளும் தொடர்பினால் நாம் குணம்பெறுகிறோம் என்பதை, இப்புதுமையில் பங்கேற்கும் பெண்ணிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம், என்றுரைத்தத் திருத்தந்தை, நம்மைச் சந்திக்கவும், நம் இதயங்கள் திறக்கப்படவும் இறைவன் காத்திருக்கிறார், அவரோடு நெருக்கத்தை அதிகரிக்கும்போது, குறையுள்ள நம் அன்பு குணப்படுத்தப்படுகின்றது என, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கு நோயினால் வருந்திய பெண், மற்றவர்களால் ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில், அவரை அனைவருக்கும் முன்னே தன்னருகே வரவழைத்தது மட்டுமல்ல, 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று', எனவும் ஊக்கமளித்த இயேசு, நம்மையும் உற்றுநோக்கி குணப்படுத்துகிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் அன்புப் பார்வையை, உற்றுநோக்கலை ஏற்கனவே அனுபவித்தவர்கள், தங்களைச் சுற்றியிருப்பவர்களை, காயமுற்றதாக உணர்பவர்களை,  அதே அன்புப் பார்வையுடன் உற்று நோக்கி, அவர்களைத் தீர்ப்பிடாமல், அவர்களை வரவேற்பவர்களாக செயல்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2021, 13:00

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >