தேடுதல்

மூவேளை செப உரை - 'நான் உங்களுக்கு யார்?' எனக் கேட்கும் இயேசு

புனிதர்களான பேதுருவும் பவுலும் வெறும் பார்வையாளர்களாகச் செயல்படவில்லை, மாறாக, செயல்வீரர்களாக இருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'நீங்கள் என்னை யார் எனச் சொல்கிறீர்கள்?' (மத் 6:15) என இயேசு தன் சீடர்களை நோக்கிக் கேட்டக் கேள்வியை இன்றும் நம்மை நோக்கிக் கேட்கிறார், நம் இதயத்திலிருந்து அதற்கு பதிலளிப்போம் என, செவ்வாய்க்கிழமை நண்பகல் மூவேளை செப உரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 29, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட புனிதர்கள் பேதுரு, மற்றும் பவுலின் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபின், அப்பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நாம் இறைவனுடன் கொண்டிருந்த முதல் அன்பை இழந்து விட்டோமா, அவரின் வார்த்தையை எடுத்துச்செல்ல நாம் தயங்குவதேன், என்ற கேள்வியை இன்று நம்மை நோக்கி இயேசு கேட்கிறார் என உரைத்தார்.

மக்கள் தன்னைப்பற்றி என்னச் சொல்கிறார்கள் என்பது இறைவனுக்கு முக்கியமல்ல, மாறாக, அவரிடம் தங்கள் வாழ்வையே எடுத்துச்சென்று அவருடன் உரையாடி, முக்கிய முடிவை எடுப்பவர்களே அவருக்கு முக்கியத்துவம் நிறைந்தவர்கள் எனவும் தன் மூவேளை செபவுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்று நாம் கொண்டாடும் புனிதர்கள் பேதுருவும் பவுலும் வெறும் பார்வையாளர்களாகச் செயல்படவில்லை, மாறாக, செயல்வீரர்களாக இருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாமும் வார்த்தைகளால் அல்ல, அந்த வார்த்தைகளின் கனிகளான நற்செயல்களால் சான்று பகரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த இரு மாபெரும் புனிதர்களும் தங்கள் தவறுகளை, பலவீனங்களை மறைக்காமல் செயல்பட்டதுபோல், நாமும் நம் குறைகளுடன் இறைவனிடம் வரும்போது, நம் வழியாக இயேசு அரும்பெரும் செயல்களை ஆற்றுவார் என மேலும் ஊக்கமூட்டும் வார்த்தைகளை எடுத்துரைத்தார், திருத்தந்தை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2021, 13:23

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >