தேடுதல்

தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல்மாடியிலிருந்து 'வானக அரசியே' உரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தின் மேல்மாடியிலிருந்து 'வானக அரசியே' உரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  

கட்டளைகளை கடைப்பிடித்து, இறையன்பில் நிலைத்திருத்தல்

திருத்தந்தை : கிறிஸ்துவைப்போல் நாம் அன்புகூரவேண்டுமெனில், இவ்வுலகம் காட்டும், பணம், வெற்றி, அதிகாரம் போன்றவைகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றை விட்டொழிக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் வானொலி

இறைவனின் அன்பில் நிலைத்திருப்பது என்பது, பிறருக்காக நம்மையே வழங்கி பணியாற்றுவதில் சிறப்பான விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 9ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு 'வானக அரசியே' என்ற நண்பகல் வாழ்த்தொலி உரையை, ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (யோவா 15:9-17), மையமாகக் கொண்டு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இறைவனின் அன்பில் நிலைத்திருக்கும்போது, அவரின் மகிழ்வு நம்மில் வருவதுடன், நம் மகிழ்வும் முழுமையடையும் என்றார்

அன்பின் வடிவமாக இருக்கும் இறைத்தந்தையிடம் தன் ஆதாரத்தைக் கொண்டுள்ள அன்பு, கிறிஸ்துவழியாக ஒரு நதி போன்று ஓடி, நம்மை வந்தடைகிறது என்றார் திருத்தந்தை.

எந்த அன்பால் இறைத்தந்தை தன் ஒரே மகனை அன்புகூர்கிறாரோ, அதே தூய அன்பை, எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி இலவசமாக நமக்கு இயேசு தருகிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு இறையன்பை நமக்கு வழங்குவதன் வழியாக நம்மை நண்பர்களாக நடத்தி, தந்தையை அறிய நமக்கு உதவுவது மட்டுமல்ல, உலகிற்காக மறைப்பணியாற்ற நம்மையும் இயேசு ஈடுபடுத்துகிறார் என்றார்.

இயேசுவின் கட்டளைகளை நாம் கடைப்பிடித்து வாழும்போது, அவர் அன்பில் நாம் நிலைத்திருக்கிறோம் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'நான் உங்களிடம் அன்புகொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை', என இயேசு இதே பகுதியில் கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இயேசுவைப் போல் அன்புகூர்வது என்பது, நம்  உதவித் தேவைப்படுவோருக்கு, நம் சுயநலன்களையும் தாண்டி, அவர்களை அன்புகூர்வதை எதிர்பார்க்கின்றது, என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியதை நினைவுகூரும் நாம், நம் வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல்களாலும் நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, கிறிஸ்துவைப்போல் நாம் அன்புகூரவேண்டுமெனில், இவ்வுலகம் காட்டும், பணம், வெற்றி, அதிகாரம் போன்றவைகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றை விட்டொழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

உலகப்பொருட்களின் மீது நாம் கொண்டுள்ள மட்டற்ற ஆசையால், அன்பின் மதிப்பு குறைவதற்கும், நமக்கு அடுத்திருப்போரின் உரிமைகள் மீறப்படுவதற்கும், நம் அன்புக்குரியவர்கள் துன்புறவும் காரணமாகிறோம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப்போல் நாம் பிறரை அன்புகூர்வது என்பது, அவர்களை பாராட்டி, அவர்கள் சுதந்திரத்தை மதித்து, அவர்களின் இயல்புநிலைகளை ஏற்று, அப்படியே அவர்களை அன்புகூர்வதாகும் என மேலும் எடுத்துரைத்தார்.

இயேசுவைபோல் அன்புகூர்வது என்பது, பிறரை அடக்கியாள விரும்பும் நம் ஆசையை வெற்றிகண்டு, நம்மையே பிறருக்கு வழங்குவதைக் குறிக்கிறது எனக் கூறி, தன் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2021, 12:40

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >