தேடுதல்

Vatican News
நூலக அறையிலிருந்து அல்லேலூயா வாழ்த்துரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நூலக அறையிலிருந்து அல்லேலூயா வாழ்த்துரையை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

‘வானதூதரின் திங்கள்’ - திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்துரை

உயிர்த்த கிறிஸ்துவைத் தேடுவதில் நாம் சலிப்படையாமல் முயற்சி செய்தால், அவர் நிறைவாழ்வை வழங்க, நம்மைச் சந்திக்க வருவார் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உயிர்ப்புப் பெருவிழா ஞாயிறைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமையை, ‘வானதூதரின் திங்கள்’ என்று கூறுகிறோம், ஏனெனில், கல்லறையைக் காணச்சென்ற பெண்களுக்கும், விண்ணகத் தூதருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பை இன்று நினைவுகூர்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 5ம் தேதி சிறப்பிக்கப்பட்ட வானதூதரின் திங்களன்று, நண்பகலில், தன் நூலக அறையிலிருந்து அல்லேலூயா வாழ்த்துரையை, நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கிய திருத்தந்தை, கல்லறைக்குச் சென்ற பெண்களுக்கும் வானதூதருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

'அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' என்ற பேருண்மை

இயேசுவின் புதைக்கப்பட்ட உடலைத் தேடிவந்த பெண்களிடம், "சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்" (மத்தேயு 28:5-6) என்று வானதூதர் கூறியதை நினைவுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' என்ற பேருண்மையை, வானதூதர் மட்டுமே கூறமுடிந்தது என்பதை சுட்டிக்காட்டினார்.

அப்பெண்களைப் பொருத்தவரை, இயேசு கல்லறையில் இல்லை என்பதை மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது என்றும், வானதூதர் மட்டுமே, அவர் உயிருடன் எழுப்பப்பட்ட உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது என்றும் கூறிய திருத்தந்தை, ஆண்டவரின் பிறப்பு அறிவிப்பின் போதும், மரியாவுக்கு புரியாத மறையுண்மையை, வானதூதரான கபிரியேல் அறிவித்தார் என்பதையும் நினைவுறுத்தினார்.

கல்லறையை மூடிய கல், காலடியில்...

"திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்" (மத்தேயு 28:2) என்று நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ள சொற்களைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை, சாவு ஆகியவற்றின் வெற்றியாக, கல்லறையின்மீது வைக்கப்பட்ட கல், இப்போது காலடியில் கிடக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இருவகை எதிர்வினைகள்

இறைவனின் இந்த அற்புதச் செயல், இருவகை எதிர்வினைகளை கொணர்ந்தது என்று கூறிய திருத்தந்தை, கல்லறையில் காவல் காத்த வீரர்கள், நடந்தவற்றைக் கண்டு அச்சத்தால் ஓடிச்சென்றனர் என்றும், அவர்கள் உண்மையை அறிந்திருந்தாலும், பணத்தைக் கொடுத்து, அந்த உண்மையை மாற்ற முயற்சிகள் நடைபெற்றன என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

வறிய நிலையிலிருந்த வீரர்கள் பணத்தினால் விலை பேசப்பட்டனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்பிலும், அதை மறுத்துச் சொல்வதற்கு பணம் என்ற 'கடவுள்' முயற்சிகளை மேற்கொண்டது என்பதை தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டார்.

இதற்கு மறுபக்கம் நிகழ்ந்த எதிர்வினை, பெண்களைச் சார்ந்தது என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, அப்பெண்கள், அச்சம் கொண்டிருந்தாலும், வானதூதர் அவர்களிடம் "அஞ்சாதீர்கள்" (28:5) என்ற ஆறுதல் மொழிகளை வழங்குகிறார் என்றும் கூறினார்.

சலிப்படையாமல் தேடுவோருக்கு நிறைவாழ்வு

உயிர்த்த கிறிஸ்துவைத் தேடுவதில் நாம் சலிப்படையாமல் முயற்சி செய்தால், அவர் நிறைவாழ்வை வழங்க, நம்மைச் சந்திக்க வருவார் என்பதை, வானதூதரின் செய்தி நமக்கு உணர்த்துகிறது என்று, தன் அல்லேலூயா வாழ்த்துரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"உயிர்த்த இறைவன் இனி ஒருபோதும் இறக்கமாட்டார், அவர் மீது சாவுக்கு எந்த சக்தியும் இல்லை" என்ற உயிர்ப்பின் நற்செய்தி, அனைவரையும் அடைய வாழ்த்துகிறேன் என்ற சொற்களுடன் திருத்தந்தை, தன் அல்லேலூயா வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

அன்னை மரியாவை வானதூதர் கபிரியேல் முதல்முறை சந்தித்த வேளையில், "அருள்மிகப் பெற்றவரே மகிழ்வீர்!" (லூக். 1:28) என்று வாழ்த்தியதுபோல், இன்றும், உயிர்ப்பு காலம் முழுவதும், நமதன்னையை வாழ்த்தும்வண்ணம், "விண்ணக அரசியே மகிழ்வீர்" என்ற செபத்தை சொல்வோம் என்று அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த செபத்தை கூறி, ஆசீரை வழங்கினார்.

05 April 2021, 12:34