தேடுதல்

Vatican News
மறைக்கல்வியுரை - 020621 மறைக்கல்வியுரை - 020621  (ANSA)

மறைக்கல்வியுரை: இறைவேண்டலின் எடுத்துக்காட்டும், ஆன்மாவும் இயேசு

இயேசுவின் சீடர்களைப்போல் நாமும் நம் விசுவாசம், மற்றும் சீடத்துவப் பயணத்தில், நம்மை உறுதிப்படுத்தும் இயேசுவின் இறைவேண்டலை நம்பிச் செல்லலாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கோவிட்-19 பெருந்தொற்றினால் பல்வேறு தீவிரக்கட்டுப்பாடுகளைக் கண்டுவந்த இத்தாலி நாடு, அண்மைய சில வாரங்களாகத்தான் அக்கட்டுப்பாடுகளில் ஓரளவு தளர்வை அனுபவித்து வருகிறது. முகக்கவசங்கள் அணிந்தே வெளியில் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், இத்தாலிய அரசின் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஜூன் 02, இப்புதன் மறைக்கல்வியுரை, கடந்த சில வாரங்களைப்போல், வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில் இடம்பெற்றது. முதலில், புனித லூக்கா நற்செய்தியின் 22ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தை, 'அனைத்து இறைவேண்டல்களின் எடுத்துக்காட்டும் ஆன்மாவும் இயேசு' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இயேசு தன் சீடர்களை நோக்கி, “நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பது போல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். [...] சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத்தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால், நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து” என்றார். (லூக் 22:28-29.31-32)

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, இயேசு எவ்வாறு இறைவேண்டல் செய்வதில் தன் சீடர்களுக்கு எடுத்துக்காட்டாக, வழிகாட்டுதலாக இருந்தார் என்பது குறித்து சிந்திப்போம். ஓர் இரவின் ஆழ்ந்த இறைவேண்டலுக்குப் பின்னரே, இயேசு தன் சீடர்களைத் தேர்ந்துகொண்டார் என, நற்செய்திகளில் நாம் காண்கிறோம். தன் வாழ்வின் முக்கியமான தருணங்களில், அவர் இறைவேண்டல் செய்ய தனியாகச் சென்றார். மிக நீண்ட இறைவேண்டலில் ஈடுபட்டுத் திரும்பிய பின்னரே, தன் சீடர்களின் விசுவாசம் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்டு, தனக்கு வரவிருக்கும் பாடுகள், மரணம், மற்றும், உயிர்ப்பு குறித்து அறிவிக்கிறார் இயேசு. தோற்றமாற்ற நிகழ்வின்போது, இறைவேண்டலில் இருந்த இயேசு, இறைத்தந்தையின் மகனாக மகிமைப்படுத்தப்பட்டதை, திருத்தூதர்கள் பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான் கண்டனர். இறுதி இரவு உணவின்போது, இயேசு பேதுருவை நோக்கி, அவரின் மனமாற்றத்திற்காகவும், அவரின் வருங்காலப் பணிக்காகவும், தான் இறைவேண்டல் செய்ததாக எடுத்துரைக்கிறார். இயேசுவின் சீடர்களைப்போல் நாமும் நம் விசுவாசம் மற்றும் சீடத்துவப் பயணத்தில், நம்மை உறுதிப்படுத்தும் இயேசுவின் இறைவேண்டலை நம்பிச் செல்லலாம். உயிர்த்த இயேசு இறைத்தந்தையின் வலப்பக்கம் அமர்ந்தவராக, நமக்காக அவர் முன்னிலையில் தொடர்ந்து பரிந்துரைத்துக்கொண்டே இருக்கிறார் என, திருஅவையின் மறைக்கல்வி ஏடு நமக்கு நினைவூட்டுகிறது. இறைவேண்டலில் நிலைத்திருக்க முயலும் நாம், நம் இறைவேண்டல்கள் கழுகுகளின் சிறகுகளில் வானுலகை எட்டும் என்பதிலும், இயேசுவோடும், இயேசுவுக்குள்ளும் நம் இறைவேண்டல்கள், இறைத்தந்தையின் அரியணை முன்பு செவிமடுக்கப்படும் என்பதிலும் உறுதியான நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 03, இவ்வியாழனன்று வத்திக்கானிலும், ஜூன் 06, ஞாயிற்றுக்கிழமையன்று, உலகம் முழுவதும் தலத்திருஅவைகளிலும் சிறப்பிக்கப்படும், இயேசுவின் திருவுடல், திருஇரத்தத் திருவிழா குறித்து எடுத்துரைத்தார். நோயாளிகள், முதியோர், இளையோர், மற்றும் புதுமணத் தம்பதியர் குறித்து தன் எண்ணங்கள் செல்வதாக எடுத்துரைத்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

02 June 2021, 11:30

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >