தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - பொறுமை என்னும் நல்லொழுக்கம்

மார்ச் 27 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தொடர் மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக பொறுமை என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளவேனிற்காலத்தின் ஆரம்பமும் தவக்காலத்தின் இறுதி வாரமுமாகிய இப்புனித புதனன்று மழையின் காரணமாக இன்றைய புதன் மறைக்கல்வி உரையானது வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த திருப்பயணிகள் அனைவரும் அரங்கத்தில் கூடியிருக்க புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கரவொலி எழுப்பி திருத்தந்தையை திருப்பயணிகள் வரவேற்க சிலுவை அடையாளம் வரைந்து புதன் மறைக்கல்வி உரையினை ஆரம்பித்தார் திருத்தந்தை. அதன்பின் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய அன்பு என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

1 கொரிந்தியர் 13 4,5,7

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தொடர்மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக பொறுமை என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இன்றைய புதன் மறைக்கல்வி உரையானது வத்திக்கான் தூய பேதுருபெருங்கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் மழையின் காரணமாக தூய ஆறாம் பவுல் அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்து திருப்பயணிகளின் பொறுமைக்கு தன் நன்றியினைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாம் இயேசுவின் பாடுகள் பற்றிய நற்செய்தி வாசகத்திற்கு செவிசாய்த்தோம். அவரது பாடுகளில், துன்பங்களில் அவர் மிக, மிக முக்கியமான நல்லொழுக்கமான பொறுமையுடன் அனைத்திற்கும் பதிலளிக்கின்றார். தனக்கு ஏற்படும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ளுதல் பொறுமையாகும். பொறுமை என்னும் நல்லொழுக்கத்திற்கும் பாடுகளுக்கும் ஒரே மாதிரியான அடிப்படை வேர் இருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல. கிறிஸ்துவின் பாடுகளில் அவரது பொறுமை வெளிப்படுகிறது, அவர் மிகுந்த சாந்தத்துடனும் அமைதியுடனும் தான் கைது செய்யப்படுவதை ஏற்கின்றார். படைவீரர்களால் அறையப்படுவதையும், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறார். பிலாத்து முன் யாரையும் அவர் குற்றஞ்சாட்டவில்லை. படைவீர்களின் அவமரியாதை, ஏளனம், காரித்துப்புதல், கட்டுண்டு அடிக்கப்படுதல் என எல்லாவற்றையும் ஏற்கின்றார். கடினமான சிலுவையை சுமக்கின்றார். அவரோடு ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களை மன்னிக்கின்றார். அவருக்கு எதிராகக் கூறப்படுபவைக்கு அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. மாறாக இரக்கத்தையே வழங்குகின்றார். இதுவே இயேசுவின் பொறுமை. இயேசுவின் பொறுமையானது துன்பத்தை எதிர்க்கும் சக்தியைக் கொண்டிருக்கவில்லை, மாறாக ஒரு மேலான அன்பின் மிகப்பெரிய பலன் என்பதை இவை அனைத்தும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

திருத்தூதர் பவுலின் அன்பின் பாடல் என்று அழைக்கப்படும் இன்றைய இறைவார்த்தைகளில் அன்பையும் பொறுமையையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கின்றார். அன்பு என்பதை விவரிப்பதில் பெருந்தன்மை அல்லது பொறுமை என்று விவரிக்கின்றார் தூய பவுல். இது ஓர் ஆச்சர்யமான கருத்தை வெளிப்படுத்துகின்றது. விவிலியத்தில் கூறப்படுவது போல ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்.(வி.ப 34: 6) ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; (எண்: 14:18) மனிதனின் தீமை மற்றும் பாவத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு முறையும் எல்லையற்ற பொறுமையை வெளிப்படுத்துகின்றார் கடவுள்.

திருத்தூதர் பவுலைப் பொருத்தவரையில் இறைவன் முன் மன்னிப்பைக் கேட்கும் பாவிக்கு வழங்கப்படுவது கடவுளின் முதன்மையான அன்பு. ஒவ்வொரு முறையும் கடவுளின் முதன்மையான அன்பை வழங்குவதோடு தீமைக்கு நன்மையால் பதிலளிக்கின்றது. கோபம் மற்றும் விரக்தியினால் தன்னை மூடிக்கொள்ளாமல் விடாமுயற்சிடன் மீண்டும் தன் வாழ்வைத் தொடங்க வழிவகுக்கின்றது. இதிலிருந்து பொறுமையின் அடிப்படை வேரானது அன்பில் நிலைத்திருக்கின்றது என்பது உறுதியாகின்றது. இதனையே தூய அகுஸ்தீன் கடவுளின் உயர்ந்த அன்பு ஒருவனில் இருக்கும்போது மிகவும் கடினமான மற்றும் வலிமையான துயரங்களை ஒருவனால் தாங்க முடியும் என்று கூறுகின்றார்.  

பொறுமையுள்ள கிறிஸ்தவரை சந்திப்பதை விட கிறிஸ்தவ அன்பின் சிறந்த சாட்சி இல்லை என்றே கூறலாம். எத்தனை தந்தையர்கள், அன்னையர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் ஒவ்வொரு நாளும் தங்களது தூய்மையான பொறுமையால் மறைவாக நாம் வாழும் இவ்வுலகினை அழகுபடுத்துகின்றார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இதனையே நீதிமொழிகள் புத்தகம், வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிற வரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர் என்று எடுத்துரைக்கின்றது. நாம் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும். பல நேரங்களில் பொறுமையற்றவர்களாக நாம் இருக்கின்றோம். நமது வாழ்வில் நாம் முன்னோக்கிச்செல்ல நமக்கு அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் தேவை. பொறுமையற்றவர்களாக நாம் இருக்க ஏராளமான தூண்டுதல்கள் நமக்கு ஏற்படும். அந்த நேரங்களில் அமைதியுடன் இருப்பது கடினம் நமது உள்ளுணர்வுகளை நாம் கையாளவேண்டும். தேவையற்ற மோசமான பதில்கள், சண்டைகள், குடும்பம், பணித்தளம், கிறிஸ்தவ சமூகத்தில் ஏற்படும் மோதல்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக பதில்அளிக்க நமக்கு தோன்றும்பொழுதில் எல்லாம் பொறுமையாக இருப்பது அவசியம்.     

பொறுமை என்பது ஒரு தேவை மட்டுமல்ல, மாறாக அது ஓர் அழைப்பு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கிறிஸ்து பொறுமையாக இருந்தால், கிறிஸ்தவர்களாகிய நாமும் பொறுமையாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம். எல்லாமும் உடனடியாக என்ற அவசரம் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய பரவலான மனநிலை கொண்ட உலகில் பொறுமையுடன் இருக்க நாம் அழைக்கப்படுகின்றோம். தகுந்த சூழ்நிலைகள் வரும் வரை பொறுமையுடன் காத்திருப்பதற்குப் பதிலாக, மக்கள் உடனடியாக மாறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவசரமும் பொறுமையும் ஆன்மிக வாழ்வின் எதிரிகள் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் கடவுள் அன்பானவர், நம்மை அன்பு செய்வதில் ஒருபோதும் சோர்வடையாதவர். குறுகிய மனப்பான்மை கொண்டவர் அல்ல, இறுதி எச்சரிக்கைகளைக் கொடுப்பவரல்ல, மாறாக கடவுள் பொறுமையுள்ளவர், நமக்காகக் காத்திருக்கக் கடவுளுக்குத் தெரியும். வீட்டை விட்டு வெளியேறிய மகனுக்காகக் காத்திருக்கும்  ஊதாரி மைந்தனின் இரக்கமுள்ள தந்தையின் நிகழ்வை நாம் நினைத்துப் பார்ப்போம். அவர் பொறுமையுடன் துன்பத்தை ஏற்கின்றார், தன் மகன் திரும்பி வருவதைக் கண்டவுடன் அவரைத் தழுவுவதற்கு மட்டுமே பொறுமையற்றவராக இருந்தார் என்று நற்செய்தி எடுத்துரைக்கின்றது. வயலில் தோன்றிய களைகள் உவமையில் களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். எனவே அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள் என்று எடுத்துரைக்கின்றார் இயேசு. பொறுமை அனைத்தையும் மீட்கும் வல்லமை கொண்டது.

அன்பான சகோதர சகோதரிகளே பொறுமையை வளர்த்தெடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? திருத்தூதர் தூய பவுல் குறிப்பிடுவது போல, தூய ஆவியின் கனிகளுள் ஒன்றான பொறுமையினை நாம் கிறிஸ்துவிடம் கேட்கவேண்டும். அவர் நமக்கு வலிமையான ஆற்றல் கொண்ட அந்த பொறுமையினை அளிப்பார். ஏனெனில் கிறிஸ்தவ நல்லொழுக்கம் என்பது வெறும் நல்லதை செய்வது மட்டுமல்ல துன்பத்தைத் தாங்குவதையும் உள்ளடக்கியது. புனித வாரத்தின் இந்நாட்கள் பொறுமையுடன் தனது துன்பங்களை ஏற்ற இயேசுவைப் பற்றி நன்கு தியானிக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது. நமக்கு துன்பங்களைத் தரும் நபர்களை அவர் முன் வைத்து அவரது அருளிற்காகவும் இரக்கத்திற்காகவும் செபிப்பது நல்ல பயிற்சியாகும். நமக்கு தீமை செய்யும் நபர்களை பொறுத்துக்கொள்வது என்பது எளிதானதல்ல. ஆனால் நாம் அதனை செய்ய வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகளிலிருந்து அவர்களை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை அறிந்து, இரக்கத்துடனும், கடவுளின் பார்வையுடனும் அவர்களைப் பார்க்கவேண்டும். மக்கள் செய்யும் தவறுகளை பட்டியலிடும் பழக்கம் நம்மிடம் இயல்பாக உள்ளது. இது நல்லதல்ல. நாம் மக்களை அவர்களின் முகங்களுக்காகவும் இதயங்களுக்காகவும் தேடுகிறோம், அவர்களின் தவறுகளுக்காக அல்ல.

பொறுமை என்னும் நல்லொழுக்கப் பண்பை நம்மில் அதிகரிக்க, வாழ்விற்கு உயிர்தரும் நற்பண்பில் வளர, நமது பார்வையை நாம் விரிவுபடுத்த வேண்டும். நமது பிரச்சனைகளால் உலகை நெருக்காமல் கிறிஸ்துவை நம்மில் பிரதிபலிக்கச் செய்பவர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம். பிறரது பெரிய துன்பங்களை கவனிப்பதன் வழியாக நமது சிறிய பிரச்சனைகளை எப்படித் தாங்குவது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். யோபு கற்பிப்பது போல், சோதனையின் பிடியில் நாம் உணரும்போது, ​​​​கடவுளின் புதிய தன்மைக்கு நம்பிக்கையுடன் நம்மைத் திறப்பது நல்லது, அவர் நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றமடைய விடமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழவேண்டும். பொறுமையையும் துன்பங்களை எப்படி பொறுத்துக்கொள்ளுதல் என்பதையும் நாம் அறிந்திருத்தல் வேண்டும்.

இன்று இந்த புதன் மறைக்கல்வி உரையில் இரண்டு தந்தையர்கள் பங்கேற்கிறார்கள். ஒருவர் இஸ்ரயேலர் மற்றொருவர் அரேபியர். நண்பர்களான இவ்விருவரும் போரினால் தங்களது மகள்களை இழந்தவர்கள். போரினால் விளைந்த பகைமையைப் பார்க்கவில்லை மாறாக ஒருவரை ஒருவர் அன்புசெய்து ஒரே சிலுவையை சுமக்கின்றனர். புனித பூமியில் ஏற்பட்ட போரினால் தங்களது மகள்களை இழந்து துன்புற்ற, இவர்கள் இருவரின் அழகான சான்று வாழ்வைக்குறித்து சிந்திப்போம். அவர்களது சான்று வாழ்விற்கு நன்றி கூறுகின்றேன்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவுசெய்த பின்னர் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ், பிரான்ஸ், இஸ்பானியம், இத்தாலி என உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது  செப விண்ணப்பங்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கொர்கொன்சோலாவின் மர்கோனி பள்ளி மாணவர்கள், அஃப்ராகோலா தலத்திருஅவையின் கார்லோ அல்பெர்தோ பள்ளி மாணவர்கள், பங்குத்தளமக்கள், அமைப்புகள் மற்றும் பள்ளிகளைச் சார்ந்தவர்கள் என அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், புனித வாரத்தின் தீவிர ஆன்மிக சூழலில் இருக்கும். இந்நாட்களில் செபத்தில் வாழவும், மகிழ்ச்சி மற்றும் அருளின் அடிப்படையாக இருக்கும், மீட்பராகிய கிறிஸ்துவின் அருளிற்கு நம் மனங்களைத் திறக்கவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும் அமைதிக்காக செபிப்போம். குண்டுவெடிப்புகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள துன்புறும் உக்ரைன் மக்களுக்கு இறைவன் அமைதியைத் தர செபிப்போம். இஸ்ரேல் பாலஸ்தீனம், புனித பூமியில் அமைதி நிலவட்டும். இறைவன் தனது உயிர்ப்பின் பரிசாக அனைவருக்கும் அமைதியை வழங்குவாராக என்று கூறினார் திருத்தந்தை அதன்பின் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 March 2024, 08:56

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >