தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - உளத்துணிவு எனும் நல்லொழுக்கம்

ஏப்ரல் 10 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு உளத்துணிவு என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இனிமையான தென்றல் காற்றும் குளிர்காற்றும் வீசி இதமான தட்பவெப்ப நிலையை உருவாக்க வத்திக்கான் வளாகத்தில் ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்கக் கூடியிருந்தனர். நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் தொடர் மறைக்கல்வி உரையினை வழங்கி வரும் திருத்தந்தை அவர்கள், அதன் 14ஆவது தலைப்பாக மூன்றாவது நல்லொழுக்கமாக உளத்துணிவு என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

திறந்த காரில் வலம்வந்தபடி கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வழக்கமாக புதன் மறைக்கல்வி உரையினை வழங்கும் இடத்தினை வந்தடைந்தார். இன்னிசையுடன் கூடிய இசைக்கருவிகளை மீட்டி பாடல்கள்பாடி திருப்பயணிகளின் குழுக்கள் திருத்தந்தையை வரவேற்றனர். அதன்பின் சிலுவை அடையாளம் வரைந்து  கூட்டத்தை துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதனைத்தொடர்ந்து  திருப்பாடல் எண் 31 உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

திருப்பாடல் 31 2,4,24

ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; உம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும்; எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும். ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே, நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உளத்துணிவு என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்கத் தொடங்கினார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை இதோ.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

இன்றைய நம் மறைக்கல்வியில் மூன்றாவது நல்லொழுக்கமான உளத்துணிவு என்பது குறித்து நாம் காண்போம். கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியானது “உளத்துணிவு என்பது நமது வாழ்வின் இடர்ப்பாடுகளில் நிலைத்த தன்மையையும் நன்மையைத் தேடுவதில் உறுதியையும் நமக்கு அளிக்கின்றது” என்று எடுத்துரைக்கின்றது. நமது வாழ்வில் ஏற்படும் சோதனைகளை எதிர்ப்பதற்கும் தடைகளைக் கடப்பதற்குமான முடிவுகளை உளத்துணிவு பலப்படுத்துகிறது. மரணத்தைப் பற்றிய பயத்தையும், சோதனைகள் மற்றும் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் திறனையும் உளத்துணிவு உருவாக்குகிறது.

நல்லொழுக்கங்களில் மிகவும் துணிச்சல் மிக்கதாக உளத்துணிவு விளங்குகின்றது. நல்லொழுக்கங்களில் முதலாவதாக நாம் அறிந்துகொண்ட விவேகம் என்னும் நல்லொழுக்கம், மனிதனின் பகுத்தறிவுடன் தொடர்புடையது. இரண்டாவதாக நாம் அறிந்து கொண்ட நீதி என்னும் நல்லொழுக்கம் மனிதனின் விருப்பத்தில் தனது இருப்பை நாடுகின்றது. மூன்றாவது நல்லொழுக்கமானது கல்வியியல் ஆசிரியர்களால் அடிக்கடி வலியுறுத்துப்படுவதோடு பண்டைய காலத்தவர்களால் "கொடிய பசி" என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைய காலத்தவர்களின் இச்சிந்தனை, உணர்ச்சிகள் இல்லாத ஒரு மனிதனை, கல் போன்ற ஒரு மனிதனைக் கற்பனை செய்யவில்லை. மேலும் உணர்ச்சிகள் பாவத்தின் விளைவுகள் என்றும் கூறவில்லை; மாறாக கல்வி, வழிகாட்டுதல், திருமுழுக்கு அருள்டையாளத் தண்ணீரால் அல்லது தூய ஆவியாரின் நெருப்பால் நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். துணிச்சல் அற்ற, தனது ஆற்றலை நன்மை செய்வதற்குப் பயன்படுத்தாத கிறிஸ்தவன் பயனற்ற கிறிஸ்தவன். இயேசு மனித உணர்வுகளை அறியாத கடவுள் அல்ல. அதற்கு நேர்மாறாக அவரது நண்பர் இலாசரஸின் மரணத்தைக் கண்டு கண்ணீர் விட்டு அழுகின்றார். “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். என்ற இறைவார்த்தை வழியாகவும், கோவிலுக்குள்ளேயே, விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தி, நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டதில் தனது உளத்துணிவை வெளிப்படுத்துகின்றார். அவரது உணர்ச்சிமிக்க ஆன்மா அவருடைய இத்தகையச் செயல்களில் ஒளிவீசுகின்றது.

உளத்துணிவு என்னும் நல்லொழுக்கம் நமது வாழ்க்கைக்கு மிக முக்கியமான நற்பலனை தருகின்ற வழிகளைத் தேடுவோம். நமது பண்டையகால தந்தையர்கள், கிரேக்க தத்துவஇயலாளர்கள், கிறிஸ்தவ தத்துவ இயலாளர்கள் உளத்துணிவு என்னும் நல்லொழுக்கத்தின் இரண்டு வகைகளை அறிந்துள்ளனர். அவை, செய்யப்படுதல், செயல்படுதல்.

முதலாவது, நமக்குள்ளேயே இருப்பது. அதாவது கவலை, துன்பம், பயம், குற்ற உணர்வு என்ற பெயரால் அழைக்கப்படும் நமக்குள் இருக்கும் எதிர்மறை உணர்வுகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இவை அனைத்தின் ஆற்றல்களும் நமக்குள்ளிருந்து நம்மை இயக்கி நமது இக்கட்டான சூழல்களில் நம்மை முடக்கிவிடுகின்றன. இதனால் சவாலைத் தொடங்குவதற்கு முன்பே கிழே விழுந்த மனிதர்கள் எத்தனையோ பேர். உளத்துணிவு என்பது வெற்றி. நமது எதிர்மறை உணர்வுகளுக்கு எதிரான வெற்றி. நம்மில் எழும் பெரும்பாலான அச்சங்கள் உண்மைக்கு மாறானவை, அவை அனைத்தும் உண்மை இல்லை. தூய ஆவியாரின் துணையை நாடி பொறுமையுடன் கூடிய உளத்துணிவுடன் அனைத்தையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரச்சனையாக நம்மால் இயன்றவரை நாம் எதிர்கொள்ள வேண்டும், நாம் தனியாக இல்லை இறைவன் நம்முடன் இருக்கின்றார். அவரில் நாம் நம்பிக்கைக் கொண்டால், நல்லவற்றை உண்மையாகக் கண்டறிவோம். நமது ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமது கேடயமாகவும் கவசமாகவும் செயல்படும் கடவுளின் பாதுகாப்பை நம்மால் நம்ப முடியும். உணர்ந்துகொள்ள முடியும்.

உளத்துணிவு எனும் நல்லொழுக்கத்தின் இரண்டாவது பிரிவான செயல்படுதல் மிகுந்த ஆற்றலுடன் நம்முள் செயல்படுகின்றது. நமது உள்புறத்தில் ஏற்படும் சோதனைகளைத் தவிர, வெளிப்புற எதிரிகளான வாழ்க்கையின் சோதனைகள், துன்புறுத்தல்கள், நாம் எதிர்பார்க்காத சிரமங்கள் போன்றவை நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. உண்மையில், நமக்கு என்ன நடக்கும் என்பதை நாம் கணிக்க முயற்சி செய்யலாம், ஆனால் உண்மை என்பது பெரும்பாலும் நம்பமுடியாத நிகழ்வுகளால் ஆனது. வாழ்க்கைக் கடலில் நமது படகுகள் சில நேரங்களில் அலைகளால் தூக்கி எறியப்படுகின்றன. நாம் கொண்டுள்ள உளத்துணிவு, பயம் கொள்ளாத சோர்வடையாத கப்பல் மாலுமிகள் போன்று நம்மை மாற்றுகின்றது.

உளத்துணிவு என்பது ஓர் அடிப்படையான நற்பண்பு, ஏனெனில் அது உலகில் உள்ள தீமைக்கு எதிராக தீவிரமாக சவால் விடுகின்றது. ஆனால், அது அப்படி இல்லை எல்லாம் நன்றாக இருக்கின்றது என்ற குருட்டுத்தனத்தில் வாழும் மனிதன், மரணத்தை கொண்டுவரும் இருண்ட சக்திகள் போன்றவற்றிற்கு எதிராக வலிமை வரலாற்றில் போராடவில்லை என்று சிலர் கூறுகின்றனர். போர்கள், வன்முறை, அடிமைத்தனம், ஏழைகள் மீதான அடக்குமுறை, இரத்தம் வழியும் காயங்கள், ஆறாத காயங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கதையை புத்தகத்திலோ பத்திரிக்கையிலோ படித்தோமென்றால் நம்மையும் அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக முக்கியமான ஒரு நபராக நாம் நினைக்கின்றோம். உளத்துணிவு என்னும் நல்லொழுக்கமானது இத்தகைய கொடுமைகளுக்கு "இல்லை" என உறுதியாக குரல் கொடுக்க நம்மைத் தூண்டுகின்றது. எல்லா தீமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போகச் செய்து, நாம் எல்லாரும் சமமானவர்கள், ஒன்றிணைந்த வளர்ச்சி பெற்றவர்கள் என்ற இறைவாக்கினர்களின் ஆரோக்கியமான விருப்பத்தை அடையச்செய்கின்றது. வசதியான மற்றும் இலகுவான இடத்திலிருந்து நம்மைத் துண்டித்து, தீமைக்கும் அலட்சியத்திற்கும் நம்மை இட்டுச் செல்லும் அனைத்திற்கும் "இல்லை" என உறுதியுடன் திரும்பத் திரும்பச் சொல்லவைக்கின்றது. ஆம் நாம் அனைவரும், தீமை மற்றும் அலட்சியத்திற்கு "இல்லை என்றும், வாழ்வின் முன்னேற்றப் பாதைகளுக்கு ஆம் என்றும் பதிலளிக்கவேண்டும். இதற்காக நாம் போராட வேண்டும்.

நற்செய்தியில் காட்டப்படும் இயேசுவின் உளத்துணிவினை மீண்டும் கண்டறிய முயல்வோம். திருஅவையின் தூய்மையான ஆண் பெண் புனிதர்களின் சான்றுள்ள வாழ்விலிருந்து அதனை நாம் கற்றுக்கொள்வோம்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென்இத்தாலியின் சர்தீனியா பகுதி அருள்பணியாளர்கள். குருத்துவ மாணவர்கள், இறைமக்கள் அனைவரையும், திருத்தந்தையுடனான அத் லிமினா சந்திப்பிற்காக உரோம் வந்திருக்கும் அம்மறைமாவட்ட ஆயர்களையும் வாழ்த்தினார். தூய வின்சென்சோ பல்லோட்டி அவர்களால் உருவாக்கப்பட்ட  பல்லோட்டின் சபையினர், அருளாளர் Clelia Merloni அவர்களால் உருவாக்கப்பட்ட திருஇருதய சபையைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், தூய நிக்கோலா தே டோலண்டினோவின் ஆண்டை நினைவுகூரும் மொந்தோரோ திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

Cultori dell’Etica”  இயக்கத்தார், லிவோர்ணொவின் ஃபோல்கொரி அமைப்பாளர்கள், அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உரோம், சுல்மோனா மற்றும் ஆக்குயிலா மறைப்பள்ளி மாணவர்களையும் வாழ்த்தினார்.

இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து செபித்த திருத்தந்தை அவர்கள், உயிர்ப்பை அறிவித்த சிலுவையின் ஒளியில் ஆறுதல் பெறவும், உயிர்த்த இயேசுவி மீதான நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கை இதயத்தில் வளர்க்கவும் வாழ்த்தினார்.

இறுதியாக, போரினால் துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளை நினைவுகூர்ந்து செபித்த திருத்தந்தை அவர்கள், எங்கும் போரினால் நிறைந்திருக்கும் இவ்வுலகிற்கு இறைவன் நமக்கு அமைதி தருவாராக என்றும், போரினால் துன்புறும் மியான்மார் மக்களை மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

போரினால் துன்புறும் சகோதர சகோதரிகளை மறந்துவிட வேண்டாம் அவர்களுக்காகவும் உலக அமைதிக்காகவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.   

இவ்வாறு தனது விண்ணப்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2024, 08:45

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >