தேடுதல்

Vatican News
மூவேளை செபவுரையின்போது - 280221 மூவேளை செபவுரையின்போது - 280221  (ANSA)

அரிதான நோய்கள் குறித்த ஆய்வுகளை நடத்துவோருக்கு நன்றி

உலகில் 6000 அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், இதில் 72 விழுக்காடு நோய்கள் பாரம்பரியமாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் மிகவும் அரிதான நோய்களால் துன்புறும் மக்களுக்காக, குறிப்பாக குழந்தைகளுக்காக சிறப்பான முறையில் இறைவேண்டல் செய்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 28, இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளன்று கடைபிடிக்கப்படும் அரிதான நோய்கள் நாள், இவ்வாண்டு, 16வது முறையாக, பிப்ரவரி 28, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, தன் ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரிதான நோய்கள் குறித்த ஆய்வுகளை நடத்திவருவோருக்கும், இந்நோய்களைக் களையும் சிகிச்சை முறைகளை செயல்படுத்திவருவோருக்கும் தன் நன்றியை வெளியிடுவதாகவும் கூறினார்.

அரிதான நோய்களால் துன்புறும் மக்கள் தாங்கள் தனிமையில் உணர்வதை தவிர்க்கவும், தங்கள் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் மற்றவர்களுடன் பகிரவும் உதவும் வகையில், ஒருமைப்பாட்டுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அரிதான நோய்களால் துன்புறும் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகள், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் அருகாமையில் தான் இருப்பதாக உரைத்த திருத்தந்தை, ஒவ்வொருவரும் இக்குழந்தைகளுக்கு அருகில் இருப்பதுடன், இறைவனின் மென்மையான வருடலை அவர்கள் அனுபவிக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, அரிதான நோய்கள் குறித்து இஞ்ஞாயிற்றுக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், அரிதான நோய்களால் பாதிக்கப்படும் மக்கள் பாதுக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை அதில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய உலகில் 6000 அரிய வகை நோய்கள் இருப்பதாகவும், இதில் 72 விழுக்காடு நோய்கள் பாரம்பரியமாக வருவதாகவும், 70 விழுக்காடு நோய்கள் குழந்தை பருவத்திலேயே வருவதாகவும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார், கர்தினால் டர்க்சன்.

28 February 2021, 13:07