தேடுதல்

திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 280221 திருத்தந்தையின் மூவேளை செபவுரை - 280221 

இயேசுவின் அருகாமை தரும் மகிழ்வு நமக்கு மட்டுமானதல்ல

திருத்தந்தை : பிறருக்கு உதவும் வண்ணம், ஆன்மீக சோம்பல் நிலையிலிருந்து நம்மை மேலே உயர்த்த, இறைவேண்டல் உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் இறைவேண்டல் அனுபவங்களின் வழியே உலகிற்கு நம்பிக்கையைக் கொணரும் ஆவல் நம்மில் உருவாகவேண்டும் என இஞ்ஞாயிற்றுக்கிழமை மூவேளை செபஉரையின்போது அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு, இயேசு தோற்றம் மாறியதைப்பற்றிப் பேசும் இஞ்ஞாயிற்றுக்கிழமையின் நற்செய்தி வாசகத்தை (மாற். 9:2-10) மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறருக்கு உதவும் வண்ணம், ஆன்மீக சோம்பல் நிலையிலிருந்து நம்மை மேலே உயர்த்த, இறைவேண்டல் உதவுகிறது என்று கூறினார்

இயேசு தன் சீடர்களை மலைமேல் அழைத்துச் செல்வதற்கு முன்னர், தன் பாடுகள், மரணம், மற்றும் உயிர்ப்பு குறித்து எடுத்துரைத்ததைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு வெற்றிவாகைச் சூடும் மெசியாவாக இயேசுவைக் குறித்த எண்ணம் கொண்டிருந்த சீடர்கள், தங்களின் போதகர் குற்றவாளியாக மரணதண்டனைத் தீர்ப்பிடப்பட்டு கொல்லப்படப் போகிறார் என்ற மனவேதனையுடனேயே அவரைப் பின்தொடர்ந்து மலைமேல் ஏறினர் எனக் கூறினார்.

இத்தகைய ஒரு மனநிலையுடன் சென்ற சீடர்களுக்கு இயேசுவின் தோற்ற மாற்றம், அவர் உயிர்ப்பை முன்னுரைப்பதாகவும், அவர்களுள் புதிய நம்பிக்கைகளை விதைப்பதாகவும் இருந்தன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த தோற்றமாற்ற நிகழ்வின்போது, பேதுரு இயேசுவை நோக்கி, 'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது', என கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வார்த்தைகள், இருள் வெற்றியடைய இறைவன் ஒருநாளும் அனுமதிக்கமாட்டார் என்பதையும், இயேசுவின் வெற்றியில் பங்குகொள்ள நாமும் அவரோடு மலைமீது ஏறிச்  செல்ல வேண்டும் என்பதையும் குறித்து நிற்கின்றன என்றார்.

இயேசுவின் தோற்றமாற்றத்திலிருந்து நாம் பெறும் மகிழ்வு, ஆன்மீகச் சோம்பேறித்தனத்திற்கு நம்மை இட்டுச் செல்லக்கூடாது என்பதைக் குறித்த எச்சரிக்கையையும் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மலைமேல் நாம் அனுபவித்த மகிழ்வை நமக்கென மட்டும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பதாலேயே இயேசு தன் சீடர்களை சமவெளி நோக்கி மக்களிடையே அழைத்துச் சென்றார் என்றார்.

ஆன்மீகச் சோம்பல் நிலை என்பது, மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து கவலைக் கொள்ளாமல், நம் நலன் குறித்த திருப்தியிலேயே வாழ்வதாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மலைமேல் ஏறிச் செல்வது என்பது, உண்மை நிலைகளை மறப்பதையோ, இறைவேண்டல் என்பது வாழ்வில் சிரமங்களை புறக்கணிப்பதையோ குறிக்கவில்லை, என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு, மற்றும் நம்பிக்கையை வழங்கும் நற்செய்தி எனும் விளக்கை, மற்றவர் உள்ளங்களில் ஏற்றி வைப்பது, ஒவ்வொரு கிறிஸ்தவரின் மறைப்பணி என மேலும் கூறினார்.

28 February 2021, 13:00