தேடுதல்

கடத்தப்பட்ட மாணவிகள் தங்கியிருந்த பள்ளி விடுதி கடத்தப்பட்ட மாணவிகள் தங்கியிருந்த பள்ளி விடுதி  

நைஜிரியாவில் கடத்தப்பட்டுள்ள மாணவிகளின் விடுதலைக்கு செபம்

நைஜீரியாவின் Zamfara மாநிலத்தில் இடம்பெற்ற மாணவிகள் கடத்தல் நிகழ்வு குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில், வடமேற்கு நைஜிரியாவில் கடத்திச் செல்லட்டுள்ள 317 பள்ளி மாணவிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என தன் ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நைஜீரியாவின் Zamfara மாநிலத்தில் இடம்பெற்ற இந்த கடத்தல் நிகழ்வு குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட திருத்தந்தை, கடத்தப்பட்ட மாணவிகள் விரைவில் விடுதலை அடையவேண்டும் என அனைவரும் இணைந்து செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார்.

கடத்தப்பட்ட மாணவிகளின் குடும்பங்களோடு, தான் உள்ளத்தால் நெருங்கியிருப்பதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாணவிகளை பாதுகாப்புடன் வைத்திருக்க, அன்னை மரியாவை நோக்கிச் செபிப்போம் என விண்ணப்பித்தார்.

நைஜீரியாவின் Zamfara மாநிலத்திலுள்ள Jangebe நகர் பள்ளி தங்கும் விடுதியொன்றில் வெள்ளியன்று புகுந்த ஆயுதம் தாங்கிய குழு ஒன்று, 317 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளது.

ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்னரும், இது போன்று Zamfara மாநிலத்தில் நடந்த கடத்தல் ஒன்றில் ஒரு மாணவர் கொல்லப்பட்டுள்ளார், 42 பேர் கடத்தப்பட்டு, சனிக்கிழமையன்றே விடுவிக்கப்பட்டனர்.

இக்கடத்தல் நிகழ்வு குறித்து, தங்கள் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ள நைஜீரிய ஆயர்கள், பாதுகாப்பற்ற நிலைகளும், ஊழலும், நாட்டின் வாழ்வுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளன என தெரிவித்தனர்.

ஆயுதம் தாங்கிய குழுக்கள் மேற்கொள்ளும் கொலைகள், கடத்தல்கள், திருட்டுக்கள் என பல்வேறு துன்பங்களைத் தாங்கிவரும் நைஜீரியாவில், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துச் செயல்படும் கும்பல்கள் ஒடுக்கப்பட வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள ஆயர்கள், நாட்டின் இன்றையச் சுழல் மிகவும் கவலைதருவதாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2021, 13:05