தேடுதல்

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை - மனத்தாழ்மை

இவ்வுலகில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை தங்கள் இதயங்களில் உணர்ந்துகொண்டவர்கள் பேறுபெற்றவர்கள். அவர்கள் ஆணவப்போக்கிலிருந்து காக்கப்படுவார்கள்.
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை 220524 தமிழில்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரம் கோடைகாலத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் இந்நாட்களில் அவ்வப்போது வெப்பம் குறைந்தும் கூடியும் இடம்பெற்றுவருகிறது. இருப்பினும், இந்த புதனன்று மழை இடம்பெறாது என்பதாலும், சூரிய வெப்பம் மிகக் கடுமையாக இருக்காது என்பதாலும், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே மே 22ஆம் தேதியின் மறைக்கல்வி உரை இடம்பெற்றது. இந்தியாவிலிருந்தும் பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகள் இடம்பெற்றிருந்ததைக் காண முடிந்தது. நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய தன் மறைக்கல்வித் தொடரின் 20ஆம் பகுதியாக மனத்தாழ்மை குறித்து இன்றைய மறைப்போதகத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் லூக்கா நற்செய்தியிலிருந்து மரியாவின் பாடல் என்பதன் முதற்பகுதி பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது.

மரியாவின் பாடல்

மரியா பின்வருமாறு கூறினார்:

 “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.

என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர் (லூக் 1,46-48).

இப்பகுதி வாசிக்கப்பட்டபின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு இடம்பெற்றது.

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம்.

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய நம் மறைக்கல்வித்தொடரை இன்று, முக்கிய மற்றும் இறையியல் நற்பண்புகள் என வகுக்கப்பட்டுள்ள ஏழில் இடம்பெறவில்லையெனினும், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் நற்பண்பாகிய பணிவு என்னும் மனத்தாழ்மை குறித்து உரையாடி நிறைவுச் செய்வோம். பாவங்களிலேயே கொடியதான கர்வம் அல்லது ஆணவம் என்பதற்கு எதிரானது இந்த நற்பண்பாகிய மனத்தாழ்மை. தற்பெருமையும் ஆணவமும் மனித இதயத்தை வீங்க வைத்து, நம் இயல்பைவிட பெரிதாக நம்மை காண்பிக்கிறது. ஆனால், மனத்தாழ்மையோ, அனைத்தையும் சரியான தன் இயல்பு நிலைக்கு கொண்டுவந்து விடுகிறது. நாம் வெகு உன்னதமான படைப்புக்கள், ஆனால், பல குறைபாடுகளையும் குணங்களையும் கொண்டு பல வரையறைகளுக்கு உட்பட்டவர்கள். துவக்க காலத்திலிருந்தே விவிலியம் எடுத்துரைக்கிறது, ‘நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்’ (தொ.நூ. 3:19) என்பதை. மனத்தாழ்மை என்பது பூமியைக் குறிக்கும் சொல்லிலிருந்து பிறக்கிறது. அதேவேளை, நாமே சர்வ வல்லமைப் படைத்தவர் என்ற ஆபத்தான மயக்கநிலை பல வேளைகளில் நம் இதயத்தில் எழுகிறது. ஆணவம் என்னும் அரக்கனிடமிருந்து நம்மை விடுவிக்க சிறு முயற்சிகள் போதும், விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் பற்றி சிந்திப்பதே போதுமானது. திருப்பாடல் ஆசிரியர் கூறுவதுபோல், ‘உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?’ (தி.பா. 8:3-4) என்பதை எண்ணிப் பார்ப்போம். மேலும், நவீன அறிவியல், ஆகாயம் குறித்த அறிவை விரிவாக்கவும், நம்மைச் சுற்றியுள்ளவை மற்றும் நம் வாழ்வின் இரகசியத்தை இன்னும் அதிகமாக உணரவும் உதவுகிறது. இவ்வுலகில் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை தங்கள் இதயங்களில் உணர்ந்துகொண்டவர்கள் பேறுபெற்றவர்கள். அவர்கள் ஆணவப்போக்கிலிருந்து காக்கப்படுவார்கள். தன் மலைப்பொழிவில், பேறுபெற்றோர் பற்றி எடுத்துரைக்கும்போது, இத்தகையோரைப் பற்றிக் குறிப்பிட்டுத்தான் தன் உரையைத் துவக்குகிறார் இயேசு. “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு

அவர்களுக்கு உரியது” (மத் 5:3) என்கிறார். இதுவே முதல் பேறுபெற்ற நிலை, ஏனெனில், கனிவுடையோர், இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர் என்பவரெல்லாம் மனத்தாழ்மை என்பதிலிருந்தே இவைகளைப் பெற்றுள்ளனர். மனத்தாழ்மை அல்லது பணிவு என்பது அனைத்து நற்பண்புகளுக்கும் வாசலாகும்.

நற்செய்தியின் முதல் பக்கங்களில் மனத்தாழ்மை, மற்றும் ஏழை மனதைக் கொண்டிருப்பதே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. இயேசு பிறப்பின் அறிவிப்பு வானதூதரால் யெருசலேமின் வாயிலுக்குக் கொண்டுவரப்படவில்லை, மாறாக, கலிலேயாவின் ஒரு சிறு கிராமத்திற்கு, அதிலும், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ?” (யோவா 1:46) என மக்களால் மிகச் சிறியதாக கணிக்கப்பட்ட ஊருக்கு, அதாவது, நாசரேத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், இங்குதான் உலகம் மறுபிறப்பைக் கண்டது. இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதாநாயகி, செல்லமாக வளர்க்கப்பட்ட ஒரு மன்னரின் மகளல்ல, மாறாக, ஒரு சராரண பெண், மரியா. இறைதூதர் தனக்கான செய்தியை தாங்கிவந்தபோது அன்னை மரியாவுக்கே அது ஆச்சரியத்தைக் கொடுத்தது.  அவர் தன் பாடலில், “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்” என உரைக்கிறார் (லூக் 1:46-48). மரியாவின் தாழ்நிலை, அதாவது அவரின் மனத்தாழ்மை இறைவனையேக் கவர்ந்தது. நாமும் மனத்தாழ்வை ஏற்றுக்கொள்ளும்போது, இறைவனும் நம் நிலையால் கவரப்படுகிறார்.

இப்போதிருந்து அன்னைமரியா மைய இடத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டாம் என்பதில் கவனமாக இருக்கிறார்.  இறைத்தூதரின் அறிவிப்புக்குப்பின், அவரின் உறவினரான எலிசபெத்தைச் சந்தித்து பணிவிடை புரிய யூதேயா மலைப்பகுதிக்குச் செல்வது அவரின் முதல் முடிவானது. அங்கு சென்று எலிசபெத்துக்குப் பணிவிடைப் புரிகிறார். ஆனால், இந்த நற்செயலை பார்த்தது யார்?. கடவுளைத் தவிர வேறு யாருமில்லை. அன்னைமரியா மறைந்த வாழ்வை வாழவே விருப்பம் கொள்கிறார். இயேசு ஒரு நாள் போதித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” (Lk 11:27) என்று குரலெழுப்பிக் கூறியதைக் காண்கிறோம். ஆனால், இயேசுவோ உடனே, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” (Lk 11:28) என்று கூறுவதையும் காண்கிறோம். அன்னை மரியாவின் வாழ்வில் இடம்பெற்ற மிக உன்னத உண்மை கூட, அதாவது, அவர் கடவுளின் தாய் என்ற உண்மை கூட அவரை மற்றவர்முன் தற்பெருமை கொள்ள வைக்கும் காரணமாக இருக்கவில்லை. தோற்றத்தைக்கண்டு மதிப்பிடும் இன்றைய உலகில், மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என காண்பிக்க விரும்புவோரின் உலகில் இறைவல்லமையின் உதவியுடன் தீர்மானமாக இவ்வுலகப் போக்கிற்கு எதிர்திசையில் நடைபோடுகிறார், மரியா.

அன்னை மரியாவுக்கும் வாழ்வில் துயர் நிறைந்த வேளைகள் இருந்தன,  அவருடைய விசுவாசமும் இருளை நோக்கி நகர்ந்த நேரங்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால், அவர் எப்போதும் பணிவு என்னும் நற்பண்பிலிருந்து விலகவில்லை. அவரில் மனத்தாழ்மை என்பது, பளிங்குபோன்ற ஓர் உறுதியான நற்பண்பாக இருந்தது. நாம் அன்னை மரியாவை எண்ணிப் பார்ப்போம். அவர் தன் தாழ்நிலையை உணர்ந்தவர், தன்னலமற்றவர், பேராசைகளிலிருந்து விடுதலைப் பெற்றவர். மற்றவரிலும் தான் சிறியவர் என்ற மனத்தாழ்வுநிலை அவரின்  பலம். அரசாட்சிக்கு வரும் மெசியா பற்றிய கனவுகள் மனிதர்களில் தகர்க்கப்பட்ட நிலையிலும், சிலுவையின் அடியில் நின்றவர் மரியா. இயேசுவோடு ஒரு மணிநேரம் கூட கண்விழித்து செபிக்க முயாத அதே  சீடர்களை, இயேசுவை விட்டு விலகிச்சென்ற அதே சீடர்களை, பெந்தகோஸ்தே நாள்வரை அரவணைத்துக் கட்டிக்காத்தவர் அன்னை மரியாதான்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, மனத்தாழ்மையே அனைத்தும். இதுவே நம்மை தீயோனிடமிருந்தும், அவனின் தீச்செயல்களுக்கு உடந்தையாக இருப்பதிலிருந்தும் காக்கிறது. மனத்தாழ்மையே இவ்வுலகின் அமைதிக்கும் திருஅவையின் அமைதிக்கும் ஆதாரம். எங்கு மனத்தாழ்மை இல்லையோ அங்கு முரண்பாடும், பிரிவினையும், போரும் இடம்பெறுகின்றன. மனத்தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக இயேசுவையும் அன்னமரியாவையும் நமக்குத் தந்துள்ளார் இறைத்தந்தை. அவர்களே நம் மீட்புக்கும் மகிழ்வுக்கும் உரியவர்கள். மனத்தாழ்மையே, அதாவது பணிவே மீட்பை நோக்கிய சரியான பாதை.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு அமைதி தேவை என்பதை மனதில்கொண்டு அமைதிக்காக செபிப்போம், இவ்வுலகம் போரைக் கைக்கொண்டுள்ளது, துன்பத்தில் ஆழ்ந்துள்ள உக்ரைனையும், பாலஸ்தீனத்தையும், இஸ்ரயேலையும் நினைவில் கொள்வோம், இந்த போர்கள் முடிவுக்கு வரட்டும், அதேவேளை, மியான்மார் நாட்டையும் மறவாதிருப்போம்,  போரில் ஈடுபட்டிருக்கும் பல நாடுகளையும் நினைவில் கொள்வோம், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுவரும் போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ நாம் அனைவரும் கண்டிப்பாக இறைவேண்டல் செய்வோம், என வேண்டினார்.

இந்த விண்ணப்பத்திற்குப்பின், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2024, 09:14

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >