தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - நல்லொழுக்கச் செயல்கள்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கச் செயல்கள் என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரையினை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளவேனிற் காலத்தின் இதமான சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இனிமையான வெப்பத்தைக் கொடுக்க, குளிர்காற்றின் மென்மை மகிழ்வைக் கொடுக்க வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்காகக் காத்திருந்தனர். கடந்த வாரங்களில் நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் தனது புதன் மறைக்கல்விஉரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 13 புதன்கிழமை, தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 11ஆம் ஆண்டு நிறைவு நாளான இன்று நல்லொழுக்கச் செயல்கள் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கினார்.

ஆன்மிகப்போராட்டம், பெருந்தீனி, சிற்றின்பஆசை, பேராசை, சினம், வருத்தம், சோம்பல், பொறாமை, வீண்பெருமை, இறுமாப்பு என்னும் தீயொழுக்கங்கள் பற்றிய கருத்துக்களைக் கடந்த வாரங்களில் திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், இன்று நல்லொழுக்கச் செயல்கள் பற்றி எடுத்துரைத்தார். கூடியிருந்த திருப்பயணிகளை திறந்த காரில் வலம்வந்தபடி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், புதன் மறைக்கல்விஉரை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்துக் கூட்டத்தைத் துவக்கினார்.

அதன்பின் திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் உள்ள  அறிவுரை என்ற தலைப்பின்கீழ் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், இஸ்பானியம், லித்துவானியம், பிரெஞ்சு,போன்ற பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன.

பிலிப்பியர் 4: 8,9

சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னுடைய உடல் நிலை இன்னும் சீராகவில்லை என்பதைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்து, தனக்குப் பதிலாக பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள் புதன் மறைக்கல்வி உரையை வாசித்தளிப்பார் என்று கூறினார். எனவே கடந்த வாரத்தைப் போலவே இவ்வாரமும் பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள், மறைக்கல்வி உரைக் கருத்துக்களை திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

தீயொழுக்கங்கள் குறித்த நமது கருத்துக்களைக் கடந்த வாரத்துடன் நிறைவு செய்த நாம் இன்று தீமைக்கு நேர் எதிரான, அலகையின் தீய அனுபவத்திற்கு எதிரான நன்மைகளைப் பற்றியும் நல்லொழுக்கங்களைப் பற்றியும் காண இருக்கின்றோம். மனிதனது இதயம் தீய உணர்வுகளுக்கு ஆளாகவும், தீய சோதனைகளுக்கு செவிசாய்த்து அதன் வடிவங்களை ஏற்கவும் செய்கின்றது. ஆனால் அதே நேரத்தில் இவற்றை எல்லாம் தவிர்க்கவும் மனித இதயங்களால் இயலும். அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், நன்மைக்காகவேப் படைக்கப்பட்ட மனிதன் அதனை உண்மையாக அடைய, அந்தக் கலையைப் பயிற்சி செய்கின்றான். இப்பண்புநலன்கள் அவனில் நிரந்தரமாக இருப்பதை உறுதிசெய்கின்றான். நம்முடைய இந்த அற்புதமான வாய்ப்பை சுற்றியுள்ள நல்லொழுக்கச் சிந்தனையானது, உன்னதமான தத்துவ நெறிமுறைகளை உருவாக்குகின்றது. 

உரோமானிய தத்துவஞானிகள் அதை "விர்துஸ்" என்றும், கிரேக்க தத்துவஞானிகள் "அரேதே" என்றும் அழைத்தனர். இலத்தீன் சொல்லானது, எல்லாவற்றிற்கும் மேலாக நல்லொழுக்கமுள்ள நபர் வலிமையானவர், துணிவுள்ளவர், ஒழுக்கம் மற்றும் துறவில் திறமையானவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஒரு நீண்ட வளர்ச்சியின் பலனாகிய இந்த நல்லொழுக்கங்களைச் செயல்படுத்துவதற்கு, முயற்சி மற்றும் துன்பமும் தேவைப்படுகிறது. கிரேக்க வார்த்தையான aretè, சிறந்து விளங்குகின்ற, வெளிப்படுகின்ற, போற்றுதலைத் தூண்டுகின்ற ஒன்றைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கமுள்ளவன் தன்னைத்தானே சிதைத்துக் கொள்ளாமல் தன் தொழிலுக்கு உண்மையாக இருந்து தன்னை முழுமையாக உணர்ந்துகொள்பவனாகின்றான்.

புனிதர்கள் மனிதகுலத்திலிருந்து விதிவிலக்கு பெற்றவர்கள் என்று நாம் நினைத்தால் அது தவறு. ஒரு குறுகிய வட்டத்திற்குள் மனித இனங்களுக்கு அப்பாற்பட்டு வாழும் ஒரு வகையான சாதனையாளர்கள் என்று எண்ணுவதும் தவறு. புனிதர்கள் என்பவர்கள், இன்று நாம் அறியத் தொடங்கி இருக்கும் நல்லொழுக்கக் கண்ணோட்டத்தில் தங்களை தாங்களே நிறைவாக நன்கு உணர்ந்து, ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் தங்களது அழைத்தலை உணர்ந்து புதுப்பித்துக் கொண்டவர்கள். நீதி, மரியாதை, பரஸ்பர நன்மதிப்பு, பரந்த மனப்பான்மை, நம்பிக்கை ஆகியவை அரிய முரண்பாடாக இல்லாமல் அனைவருடனும் பகிரப்பட்ட இயல்புகளாக இருந்திருந்தால் உலகம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எனவே தான், மனிதகுலத்தின் மிக மோசமான நிகழ்வுகளை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் நல்லொழுக்கச்செயல்கள் பற்றிய கருத்துக்களை நாம் அறிய முற்படுகின்றோம். அனைத்து மக்களும் நல்லொழுக்கத்தைக் கண்டறிந்து அதனைத் தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். மறுஉருவாக்கம் செய்யப்பட்ட இவ்வுலகில் வாழும் நாம், கடவுளின் சாயல் நம்மில் உள்ளது அவரது சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்பதை எப்போதும்  நினைவில் கொள்ளவேண்டும்.  

நல்லொழுக்கத்தை நாம் எவ்வாறு வரையறுக்க முடியும்? கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி நமக்கு ஒரு தெளிவான மற்றும் சுருக்கமான வரையறையை வழங்குகிறது: "நல்லொழுக்கம் என்பது நல்லதைச் செய்வதற்கான ஒரு பழக்கம் மற்றும் உறுதியான மனநிலை" என்று எடுத்துரைக்கின்றது. இது உடனடியாக நடைபெறுவதல்ல மாறாக பரவலான முறையில் நமக்கு நன்மையைத் தருகின்ற, வானத்திலிருந்து பொழியப்படுகின்றப் பருவமழையைப் போன்றது. தீயவர்கள் கூட, தங்களது வாழ்வின் ஒரு சில நேரங்களில் நன்மையானவற்றைச் செய்திருப்பர். இவைகள் கடவுளின் புத்தகத்தில் உறுதியாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் நல்லொழுக்கம் என்பது இதிலிருந்து வேறுபட்டது. நன்மையான செயல்கள் ஒரு மனிதனின் முதிர்ச்சியிலிருந்து உருவாகி, அது அவனது உள்ளார்ந்த பண்பு நலனாக மாறுகின்றது. நல்லொழுக்கம் என்பது சுயவிடுதலையிலிருந்து எழுகின்ற பழக்க வழக்கம். நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களிலும் நாம் விடுதலை பெற்றால், ஒவ்வொரு முறையும் நாம் நன்மை தீமைகளை தேர்ந்தெடுக்க அழைக்கப்பட்டால், நல்லொழுக்கமானது நாம் சரியான நீதியைத் தேர்ந்தெடுக்க நம்மை அனுமதிக்கின்றது.

நல்லொழுக்கம் என்பது ஒரு அழகான பரிசு என்றால் நம்மில் இயல்பாக ஒரு கேள்வி எழும். எப்படி அதை நாம் அடைவது? என்று. இக்கேள்விக்கான பதில் எளிமையானதல்ல சிக்கலானது.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு முதல் உதவி என்பது கடவுளின் அருள். திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற நம்மில் தூய ஆவியானவர் செயல்படுகின்றார். நல்லொழுக்க வாழ்க்கைக்கு வழிநடத்திச் செல்ல நமது ஆன்மாவில் செயலாற்றுகின்றார். எத்தனை கிறிஸ்தவர்கள் தங்களது குறிப்பிட்ட பலவீனங்களைக் கடந்து வர முடியவில்லை என்று வருந்தி கண்ணீரின் வழியாக புனிதத்துவத்தை அடைந்திருக்கின்றார்கள். தங்களுக்கு வெறும் வரைபடமாக இருந்த தங்களது வாழ்க்கையையைக் கடவுளே நன்மையினால் நிறைவு செய்தார் என்பதை அவர்கள் தங்களது வாழ்வில் அனுபவித்தனர். கடவுளின் அருள் எப்போதும் மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களுக்கான ஈடுபாட்டில் நம்மை வழிநடத்தும்.        

"நல்லொழுக்கம் வளரும். அது தகுந்த நாளில் அறுவடை செய்யப்படும்" என்ற முன்னோர்களிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட மேலான மற்றும் உயர்ந்த பாடத்தை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நல்லொழுக்கம் நம்மில் வளர தூய ஆவியிடம் நாம் கேட்கும் முதல் கொடை ஞானம். நாம் வைத்திருக்கும் ஒரு விலைமதிப்பற்ற பரிசு, திறந்த மனப்பான்மை மற்றும் வாழ்க்கையை தவறுகளிலிருந்து எவ்வாறு சரியாக வழிநடத்த கற்றுக்கொள்வது என்பதை அறியும் ஞானம். மேலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் திறன், துறவு பயிற்சி வழியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது, அதிகப்படியானவற்றைத் தவிர்ப்பது போன்றவற்றில் நல்ல மனமும் நமக்குத் தேவை.

அன்பான சகோதர சகோதரிகளே, சவாலாகவும், நமது உறுதியான மகிழ்ச்சிக்கு அடையாளமாகவும் இருக்கும் இந்த அமைதியான பிரபஞ்சத்தில் நற்பண்புகளின் வழியாக நமது பயணத்தை நாம் தொடங்குவோம்.

இவ்வாறு  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை பேரருள்திரு ஜிரோலி அவர்கள் வாசித்தளிக்கக் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கார்மலைட் மறைப்பணியாளர்கள், இயேசுவின் திருஇருதயத்தின் அப்போஸ்தலர்கள் போன்றோரை வாழ்த்தி தங்களது துறவற நிறுவனங்களின் ஆன்மிக பாரம்பரியத்தைப் பாதுகாக்க அவர்களை ஊக்குவித்தார்.

ஃப்ரிகோலேயில் உள்ள தூய மரியா கொரெற்றி பங்குத்தள மக்கள், தூய டொமேனிக்கன் திருப்பயணிகள், வெனீசின் தூய பத்தாம் பியோ நிறுவனத்தார் போன்றோரை வாழ்த்தியத் திருத்தந்தை அவர்கள், தங்களது பணியினை நம்பிக்கை மற்றும் பெருந்தன்மையான மனதுடன் செய்ய அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, உடல் நலமற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள், புதுமண தம்பதியினர், இளையோர், மாணவர்கள் என அனைவரையும் நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், தவக்காலத்தில் இறைபராமரிப்பு எங்கு எல்லாம நம்மை செயல்பட அழைக்கின்றதோ அங்கு எல்லாம் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான செயல்களைச் செய்யவும் வலியுறுத்தினார்.

போரின் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கும் மக்களுக்காக நாம் உருக்கமாக விடாமுயற்சிடன் செயல்படுவோம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், போரில் இறந்த ஓர் இளம் படைவீர் செபிக்கப் பயன்படுத்திய செபமாலை, திருவிவிலியம் போன்றவற்றைத் தான் இன்று பெற்றதாகக் கூறினார். போரினால் பல இளைஞர்கள் இறக்கின்றார்கள், இன்னும் பலர் இறக்க நேரிடும் சூழலும் உள்ளது. எப்போதும் தோல்வியைத்தரும் இந்த போரினை வெல்ல இறைவன் அருள் தர செபிப்போம் என்றும் கூறினார்.

இவ்வாறு தனது விண்ணப்பங்களைத் திருத்தந்தை எடுத்துரைத்த பின் விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் திருப்பயணிகளால் பாடப்பட்டது. அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்தத் திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2024, 08:50

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >