தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - இறுமாப்பு என்னும் தீயொழுக்கம்

மார்ச் 6 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இறுமாப்பு என்னும் தீயொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

குளிர்காற்றின் மென்மையும் இளஞ்சூரியனின் இதமான வெப்பமும் நிறைந்த மார்ச் 6 புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். திறந்த வாகனத்தில் வலம்வந்தபடியே கூடியிருந்த திருப்பயணிகளை கரமசைத்து வரவேற்று வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் மாதத்தின் முதல் வாரமாகிய இன்று புதன்மறைக்கல்வி உரையானது (இவ்வாண்டின்) முதன் முறையாக வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்றது. திறந்த வாகனத்தில் அமர்ந்து, திருப்பயணிகளைக் கரமசைத்து மகிழ்வுடன் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் சீராக்கின் ஞானநூலில் உள்ள ஆட்சியாளர் என்ற தலைப்பின்கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

சீராக் 10: 7,9,12,14

இறுமாப்பை ஆண்டவரும் மனிதரும் வெறுப்பர்; அநீதியை இருவரும் பழிப்பர். புழுதியும் சாம்பலுமாக மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்? உயிரோடு இருக்கும்போதே  அவர்களது உடல் அழியத்தொடங்கும். ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வதே மனிதருடைய இறுமாப்பின் தொடக்கம்; அவர்களின் உள்ளம் தங்களைப் படைத்தவரை விட்டு அகன்று போகின்றது. ஆளுநர்களின் அரியணையினின்று ஆண்டவர் அவர்களை வீழ்த்துகிறார்; அவர்களுக்குப் பதிலாகப் பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தொடர்மறைக்கல்வி உரையின் 10ஆவது பகுதியாக இறுமாப்பு என்னும் தீயொழுக்கம் பற்றிய கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். கடந்த வாரத்தில் லேசான காயச்சல் அறிகுறிகளின் காரணமாக திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை, தனிப்பட்ட சில குழுக்களின் சந்திப்புக்களுக்கான உரை போன்றவற்றைப் பேரருள்திரு சம்பனெல்லி வாசித்தளித்தார். இம்முறை பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள் திருத்தந்தையின் சார்பாக வாசித்தளித்தார். திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

புதன் மறைக்கல்வி உரை

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் குறித்த நமது தொடர் மறைக்கல்வி உரையில் இறுதித் தீயொழுக்கமாக, இறுமாப்பு என்பது பற்றி இன்று நாம் காண இருக்கின்றோம். பண்டைய கிரேக்கர்கள் இந்த இறுமாப்பை அதிகப்படியான சிறப்பு என்று வரையறுக்கின்றனர். உண்மையில் இறுமாப்பு என்பது சுயஉயர்வு குறித்த மகிழ்ச்சி, அனுமானம், தற்பெருமை. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன என்று இயேசுவும் தனது வார்த்தைகளில் எடுத்துரைக்கின்றார். இறுமாப்புடைய நபர் தான் இருக்கும் எதார்த்த நிலையிலிருந்து தன்னை இன்னும் அதிக உயர்வாக நினைக்கின்றார். மற்றவர்களை விட உயர்ந்தவராக தான் மதிக்கப்படவேண்டும், அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று துடிக்கின்றார். அதனால் தனது திறமைகளும் தகுதிகளும் எப்போதும் மிக உயர்வாக அங்கீகரிக்கப்படுவதை வலியுறுத்தி மற்றவர்களை மிகவும் தாழ்வாகக் கருதுகின்றார்.

இந்த விளக்கத்திலிருந்து இறுமாப்பு என்பது, கடந்த வாரம் நாம் செவிசாய்த்த வீண்பெருமைக்கு மிக அருகில் இருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது. வீண்பெருமை என்பது, தான் என்ற மனிதமுனைப்பின் நோயாக இருந்தால் அது குழந்தைப்பருவம் முதலே மனிதனைப் பாதிக்கும் ஒரு நோயாகும். இறுமாப்பு கொண்டவர் சந்திக்கும் அழிவானது வீண்பெருமை கொண்டவர் சந்திக்கும் அழிவைப் போலவே இருக்கும். மனிதனின் அறிவற்ற செயல்களைப் பகுப்பாய்வு செய்வதன் வழியாக, பழங்கால துறவிகள் தீமைகளின் வரிசையை, அலகையின் செயல்களை, குறிப்பிட்ட  வகையில் வரிசைப்படுத்தியுள்ளனர். நம்மை மிகவும் சோதனைக்குட்படுத்தும் பெருந்தீனி என்ற மிகப்பெரிய பாவத்திலிருந்து இத்தீயொழுக்கங்கள் ஆரம்பமாகின்றன. எல்லா தீயொழுக்கங்களின் அரசியாக இறுமாப்பு உள்ளது. தான்தே அவர்களின் தெய்வீக மகிழ்ச்சி என்னும் நூலில் உத்தரிக்கின்றஸ்தலம் என்னும் வாழ்வின் இறுதிநிலையை அடைவதற்கான முதல்படியாக இறுமாப்பினைக் குறிப்பிட்டுள்ளார். இது தற்செயலாக இடம்பெற்றதல்ல. ஏனெனில் இறுமாப்பில் வாழ்பவர் இறைவனை விட்டு வெகுதொலைவில் இருக்கின்றார். இத்தீமையின் விளைவானது அதிலிருந்து மீண்டு வர அதிகப்படியான நேரத்தையும் முயற்சியையும் நம்மிடம் எதிர்பார்க்கின்றது. கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுபவர்கள் எதிர்கொள்ளும் எல்லாவிதமான போராட்டங்களையும் விட இது அதிகமான முயற்சியை எதிர்பார்க்கின்றது.

உண்மையில், இந்த தீமைக்குள் அதிகப்படியான பாவம் உள்ளது, கடவுளைப் போன்றவர்கள் என்ற மிகவும் பொய்யான கூற்று உள்ளது. தொடக்கநூலில் சொல்லப்பட்ட நமது முதல் பெற்றோரின் பாவம், எல்லா வகையிலும் இறுமாப்பினால் விளைந்த  பாவமாகும். அலகை ஆதாம் ஏவாளை  ஏமாற்றும்போது, நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் என்று கூறுகின்றது. ஆன்மிக எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வில் இறுமாப்பினால் ஏற்படும் பின்விளைவுகளை மிக கவனமாக விவரிக்கின்றனர். இறுமாப்பு, மனித உறவுகளை சிதைக்கின்றது, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டிய சகோதரத்துவ உணர்வை இறுமாப்பு என்னும் தீயொழுக்கம் கொடிய நச்சாக மாற்றுகின்றது என்று எடுத்துரைக்கின்றனர்.

இறுமாப்பு குணம் கொண்டவர், அதற்கு அடிமையாகுபவரின் செயல்பாடுகள் பற்றிய ஒரு நீளமான பட்டியல் உள்ளது. இறுமாப்பு கொண்டவர் தீமையால் பாதிக்கப்பட்டவர் என்பதை தெளிவாக வெளிப்படுத்தும் உடலமைப்பைக் கொண்டிருப்பார். மிகுந்த கர்வமும் இறுமாப்பும் கொண்டவராய், எளிதில் வளையாத கடினமான கழுத்துடையவராக இருப்பார். எளிதில் இழிவான தீர்ப்புக்கு ஆளாகக்கூடியவர்  அவர். நம்பிக்கையற்றவராகத் திறமையற்றவராகத் தோற்றமளிக்கும் நபருக்கு எளிதில் மாற்றமுடியாத தண்டனைகளை வழங்குகின்றார். அவரின் இத்தகைய கடுமையான செயலில் இயேசுவின், ஒருபோதும் தீர்ப்பளிக்காதீர்கள் என்ற வார்த்தைகளை மறந்துவிடுகின்றார். இறுமாப்புடைய நபர் தன்னை ஒருவர் மதிக்காதபோது, அல்லது அவரைப்பற்றிய ஒரு நல்ல ஆக்கப்பூர்வமான விமர்சனம் இல்லாதபோது, அவரது மதிப்பிற்கு யாரோ அவமரியாதை செய்தது போல உணர்கின்றார். அதனால் மிகவும் கோபமடைந்து, அதிக சத்தம் எழுப்பி, கூச்சலிட்டுப் பிறருடனான உறவை முறித்துக்கொள்கின்றார்.

இறுமாப்பினால் பாதிக்கப்பட்டவருடன் இணைந்து நாம் அதிகமான செயல்களைச் செய்ய முடியாது. அவர்களுடன் பேசுவது என்பது இயலாதது, அவர்களை திருத்துவதும் முடியாதது. ஏனெனில் இறுமாப்புடையவர்கள் இறுதியில் அவர்கள் அவர்களாக இருப்பதில்லை. அத்தகையவர்களுடன் இருக்கும்போது நாம் மிகவும் பொறுமையுடன் இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு நாள் அவர்களது நிலை இடிந்துவிழும். இத்தாலிய பழமொழி ஒன்று அதனை “இறுமாப்பு குதிரை மேல் செல்லும் இறுதியில் வெறுங்காலுடன் திரும்பிவரும்” என எடுத்துரைக்கின்றது. நற்செய்தியில் நாம் காணும் இயேசு தனது வாழ்வில் ஏராளமான இறுமாப்புடைய மனிதர்களைச் சந்திக்கின்றார். அதனை அவரிடமிருந்து மறைத்தவர்களைக்கூட அவர் சுட்டிக்காட்டுகின்றார். தூய பேதுரு இயேசுவை மறுதலிப்பார் என்று முன்னறிவித்த பகுதியில், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்” என்று கூறுகின்றார். விரைவில் மற்றவர்களைப்போல அவரும் அனுபவம் பெறுகின்றார், அவர் கற்பனை செய்யாத, மிக அருகில் இருக்கும் மரணத்தைக் கண்டு அச்சமுறுகின்றார். அனைத்தையும் கண்ட பின்னர் மனம் வருந்தியவராக ஏறெடுத்து பிறர் முகம்கூட பார்க்காமல் அழுது வடிந்த கண்களைக் கொண்டவராக தன் பாவங்களுக்காக இயேசுவிடம் மன்னிப்பு வேண்டுபவராகக் காட்சியளிக்கின்றார். இறுதியாகத் திருஅவையைத் தாங்கும் தகுதியானவராக மாற்றம் பெறுகின்றார். பிறரால் ஏற்கப்படாத தன்னுடைய அனுமானத்தை வெளிப்படுத்திய அவர், விழிப்பாயிருக்கும் பணியாளர் உவமையில் சொல்லப்படுவது போல "அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார்" என்ற வரிகளுக்கு உரிமையானவரானார்.

மீட்பு, தாழ்ச்சியின் வழியாக் கடந்து சென்று, இறுமாப்பின் ஒவ்வொரு செயலுக்கும் உண்மையான தீர்வினை வழங்குகின்றது. கன்னிமரியா தன் பாடலில் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார் என்று பாடுகின்றார். இறுமாப்பினால் நாம் கடவுளிடமிருந்து எதையும் பறித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் இறுதியில் அவரே நமக்கு எல்லாவற்றையும் தர இருக்கின்றார். எனவே தான் திருத்தூதர் யாக்கோபு தனது திருமடலில் “செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” என்று எழுதியுள்ளார். எனவே, அன்பான சகோதர சகோதரிகளே, நமது இறுமாப்பிற்கு எதிராகப் போராட இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக் கொள்வோம்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைக்கல்வி உரைக்கருத்துக்களைப் பேரருள்திரு பியர்லூயிஜி ஜிரோலி அவர்கள் வாசித்தளிக்க, கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஸ்கலேயா திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தமதிரித்துவ ஆலயம் அர்ச்சிக்கப்பட்ட ஆண்டு விழாவை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்.  

தங்களது நிறுவனத்தின் எழுபத்தைந்து ஆண்டுகளுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் பீசா மறைமாவட்ட அருள்பணித்துவ மாணவர்கள், உரோமில் உள்ள தூய கசிமிர் லித்துவானிய திருப்பீடக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். நல்ல மேய்ப்பராகிய கிறிஸ்துவுடன் நமது வாழ்க்கை எப்போதும் இணைந்து செல்லவும், நற்செய்தியின் மகிழ்ச்சியான அறிவிப்பாளர்களாக இருக்கவும் அவர்களை வாழ்த்தினார்.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், தவக்காலத்தின் இந்நாட்களில், நிலையான அன்புடன் நம்மை நேசிக்கும் கடவுளிடம், முழு மனதுடன் திரும்பவும், நமது வாழ்க்கையை மறைக்கும் எல்லா முகமூடிகளிலிருந்து நம்மை விடுவிப்பதற்கான உறுதிப்பாட்டில் துணிவுடன் வளரவும் வலியுறுத்தினார்.

மேலும் சகோதர சகோதரிகளே, உக்ரைன், புனித பூமி மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் போரின் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செபியுங்கள் என்று அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக செபிப்போம். அமைதி என்னும் கொடைக்காக இறைவனிடம் அருள்வேண்டுவோம் என்றும் கூறினார். இவ்வாறு தனது விண்ணப்பங்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2024, 08:51

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >