தேடுதல்

புதன் பொது மறைக்கல்வி உரை - அமைதிக்கானத் திருத்தூதுப்பயணம்

சனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதிவரை காங்கோ குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளுக்குத் தான் மேற்கொண்ட 40ஆவது திருத்தூதுப் பயணம் பற்றிய இனிய நினைவுகளை இன்றைய பொது மறைக்கல்வி உரையின் போது திருத்தந்தை பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகின் எல்லாவித முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது அமைதியும் உடன்பிறந்த உறவுடன் வாழ்வதுமேயாகும். “மனித உள்ளங்களில்தான் போர் முதன் முதலில் தோன்றுகின்றது எனவே, மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்கள் அமைக்கப்பெற வேண்டும்” என்கிறது யுனெஸ்கொ அமைப்பு. இதனையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அமைதி மட்டுமே ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய வழிவகுக்கும் என்று உலக மக்களுக்குப் பல்வேறு வழிகளில் வலியுறுத்தி வருகின்றார். இதனடிப்படையில் கடந்த சனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை காங்கோ குடியரசு மற்றும் தென்சூடான் நாடுகளுக்குத் தான் மேற்கொண்ட அமைதியின் திருத்தூதுப் பயணம் குறித்த இனிமையான நினைவுகளை இன்றைய புதன் பொது மறைக்கல்வி உரையின் போது திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்கு உரியது. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. இவ்வாறே, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்."

திருத்தந்தையின் மறைக்கல்வி உரைச் சுருக்கம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

கடந்த வாரம் நான் இரண்டு ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்றேன். காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தென்சூடான். இந்த நீண்ட நாள் பயணத்தை மேற்கொள்ள என்னை அனுமதித்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இரண்டு நாட்டு மக்களையும் சந்திக்கவேண்டும் என்பது என்னுடைய "கனவுகள்" அங்கு எனக்கு இனிய வரவேற்பளித்த, அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள், ஆயர்கள், பொதுநிலையினர் கத்தோலிக்கர் மற்றும், பல தன்னார்வலர்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். தென்சூடானுக்கு கேன்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் இயன் கிரீன்ஷீல்ட்ஸ் ஆகியோர் என்னுடன் இணைந்து அமைதி திருப்பயணம் மேற்கொண்டனர். கிறிஸ்துவில் நம்பிக்கை இருந்தால் பன்முகத்தன்மையில் ஒற்றுமை  நிச்சயம் என்பதை வலியுறுத்த நாங்கள் மூவரும் ஒன்றிணைந்து சென்றோம். முதல் மூன்று நாட்கள் நான் காங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகரான கின்ஷாசாவில் இருந்தேன். அங்கு அரசு மாளிகையில், நாட்டிற்குரிய உரையை என்னால் ஆற்ற முடிந்தது. காங்கோ, அதன் இயல்பு, அதன் வளங்கள், மற்றும் அங்குள்ள  மக்களால் ஒரு வைரத்தைப் போன்றது. இந்த வைரமானது சர்ச்சைக்கும், வன்முறைக்கும், வறுமைக்கும் ஓர் ஆதாரமாக மாறியுள்ளது. காலனித்துவம், மற்றும் சுரண்டலால் கொள்ளையடிக்கப்பட்ட அக்கண்டத்தைக்கண்டு ஆப்பிரிக்காவை சுரண்டுவதை நிறுத்துங்கள் என்றும் ஒன்றிணைந்து கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கைக் கொண்டு, மாண்பு மற்றும் மரியாதையுடன் வாழுங்கள் என்றும் கூறினேன். ஒரு பெரிய நற்கருணை கொண்டாட்டத்தில் உச்சக்கட்ட, மகிழ்ச்சியான நிகழ்வில், உயிர்த்தெழுந்த கிறிஸ்து மக்களுக்கு கூறிய வார்த்தைகளான "உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறி மன்னிப்பு, ஒற்றுமை மற்றும் பணிக்கான புதிய பயணத்தைத் தொடங்க அழைப்புவிடுத்தேன்.

பல்வேறு சந்திப்புகள் கின்ஷாசாவில் நடந்தன. முதலாவதாக, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன். சிலுவையின் அடியில் ஆயுதங்கள் மற்றும் மரணத்திற்கான பிற கருவிகளை வைத்து செபித்த சில பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக பெண்களின் அதிர்ச்சியூட்டும் பகிர்வுகளைக் கேட்டேன். வன்முறை மற்றும் பின்வாங்குதலுக்கு "இல்லை" என்றும், ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு "ஆம்" என்றும் பதில் அளித்தேன். அதன்பின் நாட்டில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஊக்கப்படுத்தினேன். ஏழைகளுடன்  ஏழைகளுக்காக அவர்கள் சத்தமின்றி செய்யும் வேலை நாளுக்கு நாள் பொது நன்மையை வளர்த்தெடுப்பதால் அத்தகைய தொண்டு முயற்சிகள் எப்போதும் ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்றும், தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல் பொது நலனையும் ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

இளையோர் மற்றும் காங்கோ குடியரசின் மறைக்கல்வியாளர்கள் கூட்டம் ஒர் அற்புதமான தருணமாகவும், எதிர்காலத்தை நோக்கிய நிகழ்காலத்தில் மூழ்குவது போலும் இருந்தது. நான் அவர்களுக்கு செபம், சமூகம், நேர்மை, மன்னிப்பு மற்றும் பணி என்னும் ஐந்து வழிகளை எடுத்துரைத்தேன். கின்ஷாசா பேராலயத்தில் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவிகளை சந்தித்து, போலியான ஆன்மிக ஆறுதல், உலக ஆறுதல், மேலோட்டமான தன்மை ஆகிய மூன்று சோதனைகளை முறியடித்து, கிறிஸ்துவின் அன்பின் சாட்சிகளாக மக்களின் ஊழியர்களாக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினேன். இறுதியாக, காங்கோ ஆயர்களுடன் மேய்ப்புப்பணியின் மகிழ்ச்சியையும் முயற்சியையும் பகிர்ந்து கொண்டேன். கடவுளின் அருகாமையால் தங்களை ஆறுதல்படுத்தவும், கடவுளுடைய வார்த்தையின் வல்லமையுடன் மக்களுக்கு இறைவாக்கினர்களாக இருக்கவும், அவருடைய இரக்கம், உடனிருப்பு, மென்மை ஆகியவற்றின் அடையாளங்களாக இருக்கவும் ஆயர்களை நான் கேட்டுக் கொண்டேன்.

ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.
ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தோர்.

பயணத்தின் இரண்டாம் பகுதியாக 2011ஆம் ஆண்டு பிறந்த தென்சூடானின் தலைநகரான ஜூபாவிற்குச் சென்றேன். ஆங்கிலிக்கன் பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபை ஆகிய இரண்டு ஆலயங்களின்  தலைவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றப்பட்ட அமைதிக்கான ஒரு புனித பயணமாக அது அமைந்தது. புதிதாகப் பிறந்த தென்சூடான், போர், வன்முறை, குடிபெயர்ந்தோர், உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்களை உருவாக்கும் அதிகாரம் மற்றும் போட்டியினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகளிடம் உரையாற்றி, அமைதி ஒப்பந்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லவும், ஊழல் மற்றும் ஆயுதக் கடத்தலுக்கு "இல்லை" என்றும், ஒன்றிணைதல் மற்றும் உரையாடலுக்கு "ஆம்" என்றும் உறுதியாகக் கூறும்படி அவர்களை அழைத்தேன்.  தென்சூடான் ஒன்றிப்புப்பயணம் ஆங்கிலிகன் சகோதரர்கள் மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடப்பட்ட வழிபாட்டில் வெளிப்படுத்தப்பட்டது.

தென்சூடான் சுமார் 1கோடியே 10 இலட்சம் மக்களைக் கொண்ட நாடாகும்.  இதில் ஆயுத மோதல்கள் காரணமாக, இருபது இலட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் பலர் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அதனால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஒரு பெரிய குழுவைச் சந்திக்கவும், அவர்கள் சொல்வதைக் கேட்கவும், திருஅவையின் நெருக்கத்தை உணர வைக்கவும் விரும்பினேன். இறுதி நாள் நற்கருணைக் கொண்டாட்டத்தில் அவர்களை "உப்பு மற்றும் ஒளி" என்று ஊக்குவித்தேன். கடவுள் தனது நம்பிக்கையை பெரிய சக்திவாய்ந்தவர்களில் வைக்கவில்லை, மாறாக சிறிய தாழ்மையானவர்களில் வைக்கிறார். திருவிவிலியமும் இதையே தான் எடுத்துரைக்கின்றது. கலிலேயாவில் இயேசு போதித்தபோது, ​​அவருக்கு முன்னால் இருந்தவர்கள் அனைவரும் சாதாரண மக்கள், மீனவர்கள். அவர்களையே இயேசு, நீங்கள் உலகின் உப்பாக, ஒளியாக இருக்கின்றீர்கள் என்று கூறினார். சிறிய விதையில்  இருக்கும் பெரிய மரத்தை யார் பார்க்கிறார்களோ அதுதான் கடவுள் நம்பிக்கையின் மறைபொருள். காங்கோ ஜனநாயகக் குடியரசிலும், தென்சூடானிலும், ஆப்ரிக்கா முழுவதிலும், கடவுளுடைய அன்பு, நீதி,அமைதி என்னும் இறையரசின் விதைகள் முளைக்க வேண்டும் என்று தொடர்ந்து செபிப்போம்.

புதன் மறைக்கல்வி உரை 080223
புதன் மறைக்கல்வி உரை 080223

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை அதன்பின் பார்வையாளர்களாக வந்திருந்த இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகள், Fiaccola Benedettina பிரதிநிதிகள், மருத்துவமனை செவிலியர்கள் சங்கத்தார், Cesano Maderno அருளடையாளசபை அருள்சகோதரிகள், ரோமானோ இசைக்குழுவினர் ஆகியோரையும் வாழ்த்தினார். இறுதியாக இளையோர், நோயாளிகள், முதியோர் மற்றும் புதிதாக திருமணமானவர்கள் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 11ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள லூர்து அன்னையின் திருவிழா நவநாளையும் நினைவுகூர்ந்தார். மாசற்ற கன்னி மரியா நம்மை அவரது மகிழ்ச்சியான இதயத்தில் வைத்து பாதுகாத்து நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஆதரவளிப்பார் என்று கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2023, 08:45

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >