தேடுதல்

மறைக்கல்வியுரை : 'வெளிவேடம்', பிளவுகளை ஏற்படுத்தும்

உண்மையை முழுமையாக எடுத்துரைப்பதிலிருந்து நம்மை பின்வாங்க வைக்கும் அச்சத்திலிருந்து பிறப்பதே, வெளிவேடம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடல் குறித்து அண்மை வாரங்களில் தன் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் 'சட்டத்தின் ஆபத்துக்கள்' என்ற தலைப்பில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆகஸ்ட் மாதம், ஐரோப்பாவிற்கு கோடை காலம் என்பதால், கடும் வெயிலை தவிர்ப்பதற்காக திருப்பயணிகள், கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு இயைந்தவகையில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருக்க அவர்களுக்கு முதலில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் 2ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.

கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது அவர் நடந்து கொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன்.[…] நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், “நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிறஇனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?” என்று கேட்டேன். (கலா.2:11,14).

பின்னர் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் தொடர்ந்தன.

புதன் மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, கலாத்தியருக்கு தூய பவுல் எழுதிய திருமடல் குறித்து புதன் மறைக்கல்வியுரைகளில் சிந்தித்துவரும் நாம், இயேசு கிறிஸ்துவின் அருளில் வாழும் கிறிஸ்தவர்கள், மோசேயின் சட்டத்தின் எதிர்பார்ப்புக்களிலிருந்து விடுதலையைப் பெற்றவர்கள் என்பது குறித்து கண்டோம். இன்று, புனித பவுல் எவ்வாறு புனித பேதுருவை இவ்விடயத்தில் கண்டித்தது குறித்து பேசுவதைக் காண்போம். புனித பேதுரு, புறவினத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுடன் இணைந்து, உணவு உண்டு வந்தார். ஆனால், விருத்தசேதனம் செய்த கிறிஸ்தவர்கள் எருசலேமில் இருந்து வந்தபோது, புறவினத்தாருடன் உணவு உண்பதை விட்டுவிட்டார். புனித பவுலைப் பொறுத்தவரையில், இது 'வெளிவேடம்' (கலா.2:13), மற்றும், சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்த காரணமும் ஆகும். உண்மையை முழுமையாக எடுத்துரைப்பதிலிருந்து நம்மை பின்வாங்க வைக்கும் அச்சத்திலிருந்து பிறப்பதே இந்த வெளிவேடம். இத்தகைய நிலை நம்மை ஒருவித போலியான வாழ்க்கைக்கு இட்டுச்செல்கிறது, அதாவது, ஒன்றைச் சொல்லிவிட்டு, அதற்கு எதிரான மற்றொன்றைச் செய்து கொண்டிருக்கிறோம். இந்த வெளிவேடம் என்பது தொற்றுக்கிருமிபோல் பரவுகிறது. இதனை நாம் நம் பணியிடங்களிலும், அரசியல் வாழ்விலும், மிகவும் வெறுக்கத்தகும் வகையில் திருஅவைக்குள்ளும் காண்கிறோம். நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள் (மத்.5:37) என கூறியுள்ளார் இயேசு. இதற்கு புறம்பாகச் செயல்படுவது என்பது, இயேசுவே இறைவேண்டல் செய்த திருஅவையின் ஒன்றிப்புக்கு ஊறுவிளைவிப்பதாக இருக்கும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 24ம் தேதி, இச்செவ்வாய்க்கிழமையன்று டோக்கியோவில் துவங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்குபெறும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தன் வாழ்த்துக்களை அனுப்புவதாகத் தெரிவித்தார். அனைவருக்கும் நம்பிக்கை, மற்றும் மனவுறுதியின் சான்றுகளாக விளங்கும் இந்த விளையாட்டுப் போட்டிகள், கடக்க முடியாத சிரமங்களை எவ்விதம் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்புடன் வெற்றிகொள்ளமுடியும் என்பதைக் காட்டி நிற்கின்றன, என மேலும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஐரோப்பியர்களின் இந்த கோடை விடுமுறை காலம், அவர்களின் புத்துணர்ச்சியின் காலமாகவும், ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாகவும் அமையட்டும் என்ற ஆவலையும் வெளியிட்டார் திருத்தந்தை. அதேவேளை, ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 24ம் தேதி, மத்திய இத்தாலியின் Accumoli, Amatrice உட்பட பல பகுதிகளில் நிலநடுக்கத்தால்  உயிரிழந்தவர்களையும், பாதிக்கப்பட்ட சமுதாயங்களையும் சிறப்பான விதத்தில் நினைவுகூர்வதாகக் கூறி, அவநம்பிக்கைகள் இவர்களின் வாழ்வில் புகுந்திடாவண்ணம், உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்தார், திருத்தந்தை. அனைவரும் நமபிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதியோர், நோயுற்றோர், இளையோர், புதுமணத் தம்பதியர் ஆகியோரை நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாக எடுத்துரைத்து அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2021, 12:28

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >