தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது - 260521 புதன் மறைக்கல்வியுரையின்போது - 260521  (AFP or licensors)

மறைக்கல்வியுரை : நம் வேண்டல் செவிமடுக்கப்படுவதில் உறுதிப்பாடு

முதிர்ச்சியுடைய நம்பிக்கை என்பது, இறைபராமரிப்பிலும், நம் வாழ்வுக்கும் உலகுக்குமான இறைத்திட்டத்திலும் முழு நம்பிக்கையுடையது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள் இத்தாலியில் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், கடந்த சில வாரங்களாக வத்திக்கானின் புனித தமாசோ வளாகத்தில், புதன் மறைக்கல்வியுரையை திருப்பயணிகளுக்கு வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அதே வளாகத்தில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார். முதலில், புனித மாற்கு நற்செய்தியின் 5ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதன்பின் திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.

தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். […]  தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார்.(மாற் 5,22-24.35-36)

மறைக்கல்வியுரை

இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, நம் இறைவேண்டல்கள் இறைவனால் செவிமடுக்கப்படவில்லை எனத் தோன்றும் நேரங்கள் குறித்து சிந்திப்போம். எடுத்துக்காட்டாக, நோயுற்ற நம் குழந்தைகளுக்காகவோ, பல்வேறு துயர்களை அனுபவிக்கும் நம் நண்பர்களுக்காகவோ எழுப்பும் இறைவேண்டல் குறித்து எண்ணிப்பார்ப்போம். பலவேளைகளில் நாம் ஏமாற்றமடைந்து, இறைவன் நம் விண்ணப்பங்களுக்கு செவிமடுப்பதில்லை என்ற எண்ணத்துடன், நாம் இறைவேண்டல் செய்வதைக்கூட நிறுத்திவிடும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால், இறைவேண்டல் வழியாக வானகத் தந்தையிடம் பல விடயங்களைக் கேட்க கற்றுத்தந்த இறைவேண்டலின் ஆசிரியராம் இயேசு, எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவிருப்பம் நிறைவேற செபிக்கச் சொல்லித் தந்திருக்கிறார். முதிர்ச்சியுடைய நம்பிக்கை என்பது, இறைபராமரிப்பிலும், நம் வாழ்வுக்கும் உலகுக்குமான இறைத்திட்டத்திலும் முழு நம்பிக்கையுடையது. இருப்பினும், நம் விண்ணப்பங்கள் இறைவனால் செவிமடுக்கப்படவில்லை என நமக்குத தோன்றும் நேரங்களில், நாம் ஆழமான ஏமாற்றத்தைச் சந்திக்கிறோம். கடவுள் நம் துயர்களைப் புரிந்து கொள்கிறார், ஆனால், எப்போதும் உடனே, நம் விருப்பங்களை அவர் நிறைவேற்றி வைப்பதில்லை என்பதை, இயேசுவே தன் வாழ்வு நடவடிக்கை வழியாக நமக்குக் காட்டுகிறார். கெத்சமெனி தோட்டத்தில் இயேசு இறைவேண்டல் ஒன்றை முன்வைக்க, அது இறைவனால் செவிமடுக்கப்படவில்லை என்பதுபோல் தோன்றினாலும், அவர் இறைவிருப்பத்தின் மீது வைத்திருந்த முழு நம்பிக்கை, நம் மீட்புக்கும், உயிர்ப்பின் மகிமைக்கும் இட்டுச்சென்றது. தீமை ஒருபோதும் இறுதி வெற்றியை காண்பதில்லை. நம்பிக்கை ஒளியால் மட்டும் வழிநடத்தப்பட்டு, இருளில் நடக்கவேண்டியச் சூழல்கள் வந்தால், அனைத்தையும் ஒன்றிணைத்து நம் இறுதி நன்மைக்காக மாற்றும் இறைத்தந்தையின் விருப்பத்தில் நம்பிக்கையிழக்காமல் செயல்படுவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மே மாதத்தில் அன்னை மரியாவோடு ஒன்றித்திருப்பதுடன், வானகத் தந்தையாம் இறைவன் நம் வேண்டுதல்களை செவிமடுக்கிறார் என்ற உறுதிப்பாட்டில் வளர்வோமாக என உரைத்து, அனைத்துக் குடும்பங்கள் மீதும் இறைவனின் மகிழ்வையும் அமைதியையும் இறைஞ்சி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

26 May 2021, 11:10

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >