10 இலட்சம் மரங்கள் நடுவதை நெருங்கும் பங்களாதேஷ் திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இயற்கையின் மீது அக்கறையை வெளிப்படுத்தும், திருத்தந்தையின் Laudato si' திருமடலின் 5ம் ஆண்டையும், பங்களாதேஷ் நாடு சுதந்திரம் அடைந்ததன் 50ம் ஆண்டையும் முன்னிட்டு, கடந்த ஓராண்டு காலத்தில் 4 இலட்சம் மரங்களை நாட்டிற்குள் நட்டுள்ளன, பங்களாதேஷ் கத்தோலிக்க பங்குத்தளங்கள்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, பங்களாதேஷ் கர்தினால் Patrick D'Rozario அவர்களாலும், அந்நாட்டின் அனைத்து ஆயர்களாலும் துவக்கி வைக்கப்பட்ட இந்த மரம் நடும் திட்டம், பங்குத்தளங்கள் வழியாக 4 இலட்சம் மரங்களை ஓராண்டிற்குள் நட்டுள்ளதுடன், ஏனைய கத்தோலிக்க இயக்கங்கள் வழியாக, 10 இலட்சம் மரங்கள் நடுவதை நெருங்கியுள்ளது.
16 கோடியே 50 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பங்களாதேஷ் நாட்டில் 4 இலட்சம் கத்தோலிக்கர்களே வாழும் நிலையில், ஆளுக்கொரு மரம் நடுவோம் என்ற நோக்கத்தில் 4 இலட்சம் மரக்கன்றுகளை நேரடியாக நட்டுள்ளன பங்களாதேஷ் கத்தோலிக்கப் பங்குத்தளங்கள்.
பங்களாதேஷ் மறைமாவட்டங்களின் பங்குத்தளங்கள், மற்றும் சிறு குழுக்களின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டுவரும் இத்திட்டம், தனியாருக்கும், பழமரங்களை வழங்கி, அவர்களின் தோட்டத்தில் வளர்க்க உதவியுள்ளது.
பங்குத்தளங்கள், மற்றும் சிறு இயக்கங்கள் வழியாக 4 இலட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதுடன், காரித்தாஸ் பங்களாதேஷ் இயக்கம் வழியாக 3 இலட்சத்து 60 ஆயிரம் மரங்கள், கிறிஸ்தவ கூட்டுறவு கடன் வழங்கும் அமைப்பு வழியாக 2 இலட்சத்து 15 ஆயிரம் மரங்கள், பங்களாதேஷ் கிறிஸ்தவ இயக்கம் வழியாக 10,000 மரங்கள் என மொத்தமாக 9 இலட்சத்து 31 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன.
கத்தோலிக்கத் திருஅவையின் இந்த மரம் நடும் திட்டம், இவ்வாண்டு முழுவதும் தொடர உள்ள நிலையில், கத்தோலிக்க காரித்தாசின், 6,000 சுயவிருப்பப் பணியாளர்களும், தங்கள் செலவிலேயே, தனிப்பட்ட அர்ப்பணத்துடன், மரங்களை நட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.