பங்களாதேஷில் மரம் நடும் கத்தோலிக்கர் பங்களாதேஷில் மரம் நடும் கத்தோலிக்கர் 

10 இலட்சம் மரங்கள் நடுவதை நெருங்கும் பங்களாதேஷ் திருஅவை

ஆளுக்கொரு மரம் நடுவோம் என்ற நோக்கத்தில் 4 இலட்சம் மரக்கன்றுகளை நேரடியாக நட்டுள்ளன பங்களாதேஷ் கத்தோலிக்கப் பங்குத்தளங்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயற்கையின் மீது அக்கறையை வெளிப்படுத்தும், திருத்தந்தையின் Laudato si' திருமடலின் 5ம் ஆண்டையும், பங்களாதேஷ் நாடு சுதந்திரம் அடைந்ததன் 50ம் ஆண்டையும் முன்னிட்டு, கடந்த ஓராண்டு காலத்தில் 4 இலட்சம் மரங்களை நாட்டிற்குள் நட்டுள்ளன, பங்களாதேஷ் கத்தோலிக்க பங்குத்தளங்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி, பங்களாதேஷ் கர்தினால் Patrick D'Rozario அவர்களாலும், அந்நாட்டின் அனைத்து ஆயர்களாலும் துவக்கி வைக்கப்பட்ட இந்த மரம் நடும் திட்டம், பங்குத்தளங்கள் வழியாக 4 இலட்சம் மரங்களை ஓராண்டிற்குள் நட்டுள்ளதுடன், ஏனைய கத்தோலிக்க இயக்கங்கள் வழியாக, 10 இலட்சம் மரங்கள் நடுவதை நெருங்கியுள்ளது.

16 கோடியே 50 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பங்களாதேஷ் நாட்டில் 4 இலட்சம் கத்தோலிக்கர்களே வாழும் நிலையில், ஆளுக்கொரு மரம் நடுவோம் என்ற நோக்கத்தில் 4 இலட்சம் மரக்கன்றுகளை நேரடியாக நட்டுள்ளன பங்களாதேஷ் கத்தோலிக்கப் பங்குத்தளங்கள்.

பங்களாதேஷ் மறைமாவட்டங்களின் பங்குத்தளங்கள், மற்றும் சிறு குழுக்களின்  உதவியுடன் நிறைவேற்றப்பட்டுவரும் இத்திட்டம், தனியாருக்கும், பழமரங்களை வழங்கி, அவர்களின் தோட்டத்தில் வளர்க்க உதவியுள்ளது.

பங்குத்தளங்கள், மற்றும் சிறு இயக்கங்கள் வழியாக 4 இலட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதுடன், காரித்தாஸ் பங்களாதேஷ் இயக்கம் வழியாக 3 இலட்சத்து 60 ஆயிரம் மரங்கள், கிறிஸ்தவ கூட்டுறவு கடன் வழங்கும் அமைப்பு வழியாக 2 இலட்சத்து 15 ஆயிரம் மரங்கள், பங்களாதேஷ் கிறிஸ்தவ இயக்கம் வழியாக 10,000 மரங்கள் என மொத்தமாக 9 இலட்சத்து 31 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன.

கத்தோலிக்கத் திருஅவையின் இந்த மரம் நடும் திட்டம், இவ்வாண்டு முழுவதும் தொடர உள்ள நிலையில், கத்தோலிக்க காரித்தாசின், 6,000 சுயவிருப்பப் பணியாளர்களும், தங்கள் செலவிலேயே, தனிப்பட்ட அர்ப்பணத்துடன், மரங்களை நட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2021, 14:49