தேடுதல்

காசா குழந்தைகள் காசா குழந்தைகள்  

இரஃபாவில் உள்ள 6,00,000 குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் இல்லை!

காசாவின் இரஃபா நகரம், இப்போது குழந்தைகளின் நகரமாக மாறியுள்ளது. அவர்கள் இந்நகரின் எப்பகுதியிலும் பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை : யுனிசெஃப் தலைமை இயக்குனர் Catherine Russell.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், இரஃபாவில் இடம்பெற்று வரும் இராணுவ முற்றுகை மற்றும் ஊடுருவல், தற்போது உறைவிடத்தில் தஞ்சமடைந்துள்ள 6,00,000 குழந்தைகளுக்குப் பேரழிவுகரமான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

மே 6, இத்திங்களன்று வெளியிட்டுள்ள அதன் அறிக்கையொன்றில், ஏறத்தாழ  65,000 குழந்தைகள் ஏற்கனவே  ஊனம் அடையும் நிலையில் இருப்பதாகவும், ஏறத்தாழ 78,000 குழந்தைகள் 2 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பாகதவும், அவர்களில் குறைந்தது 2 வயதுக்குட்பட்ட 8,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.  

மேலும்  5 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 1,75,000 குழந்தைகள் - அல்லது 10 இல் 9 பேர் - ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏறக்குறைய பாதி குழந்தைகளுக்கு மனநல  மற்றும் உளவியல் ஆதரவு தேவைபடுகிறது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது யுனிசெஃப் நிறுவனம்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள யுனிசெஃப் தலைமை இயக்குனர் Catherine Russell அவர்கள், 200 நாட்களுக்கும் மேலாக நிகழ்ந்து வரும் போர், குழந்தைகளின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இரஃபா இப்போது குழந்தைகளின் நகரமாக மாறியுள்ளது என்றும், அவர்கள் காசாவில் எங்கும் பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ள Russell. அவர்கள், இங்குப்  பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் தொடங்கினால், குழந்தைகள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்றும், ஆனால் குழப்பம் மற்றும் பீதியால் அவர்களின் உடல் மற்றும் மன நிலை ஏற்கனவே பலவீனமாக உள்ளது என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 May 2024, 15:41