தேடுதல்

மாமல்லபுரம் கோவிலின் கலைவண்ணம் மாமல்லபுரம் கோவிலின் கலைவண்ணம்  (SRRavii)

வாரம் ஓர் அலசல் – ஏப்ரல் 18. உலக பாரம்பரிய நாள்

ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பவை அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்த உலகத்தில் வாழும் மக்களின் தோற்றம், வரலாறு, வாழ்வியல் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அந்த மக்கள் வாழும் இடங்களில் உள்ள பாரம்பரிய தலங்களைப் பார்த்தால் போதும், அதுவே அனைத்துக் கதைகளையும் நமக்குச் சொல்லித் தந்துவிடும்.

நவீன அற்புதங்கள் முதல் பழங்கால இடிபாடுகள் வரை, நமது வளமான வரலாறு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை நமக்கு நினைவூட்டும் ஏராளமான பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பாரம்பரிய தளங்கள் உலகம் முழுவதும் உள்ளன. இந்த தளங்கள் மனித புத்தி கூர்மை மற்றும் படைப்பாற்றலுக்கு சான்றாக மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்காக நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை பாதுகாக்கவும் நினைவூட்டுகின்றன. மற்றும், அவை எதிர்கால சந்ததியினருக்கு படைப்பாற்றல் மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் செயல்படுகின்றன.

நம் முன்னோர் விட்டுச் சென்ற பொருட்களும், இடங்களும் தான், நம் பாரம்பரியச் சொத்துக்கள். அதில், கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை வருகின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் பெருமையும் புகழும் சேர்ப்பது அந்த நாட்டின் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்தப் பாரம்பரிய சின்னங்கள் ஓர் இனத்தையோ, காலத்தையோ, நிலப்பரப்பையோ அல்லது நாட்டின் கலாச்சாரத்தையோ பிரதிபலிக்கக் கூடியவைகளாக உள்ளன. உலகம் முழுவதிலும் இந்த பாரம்பரியச் சின்னங்கள் பரவியிருந்தாலும், இவை மனிதகுலம் அனைத்தும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய செல்வங்களாகும். இந்தப் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்துப் பராமரிக்கவும், பராமரிப்பை ஊக்குவிக்கவும் சர்வதேச அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முக்கியப் பகுதியாகத்தான் ஏப்ரல் 18 அன்று உலக பாரம்பரிய தினம் சிறப்பிக்கப்படுகிறது.

பாரம்பரிய சின்னங்கள் அல்லது புராதன சின்னங்கள், ஓர் இடத்தின் வரலாற்றை நினைவூட்டுவதுடன், அந்த நாட்டின் வளமான பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த சின்னங்களைச் சுற்றி இருக்கும் வரலாற்று கதைகள், உல்லாசப்பயணிகளை ஈர்க்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த நினைவுச்சின்னங்கள் உள்ளன, அவை நாட்டின் வரலாற்றை உருவாக்கி, கலாச்சாரத்தை வடிவமைப்பதில் பங்களிக்கின்றன என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்றைய கணக்கெடுப்பின்படி, உலகில் 1,052 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றில் 814 சின்னங்கள் கலாச்சாரம் சார்ந்தவை; 203 சின்னங்கள் இயற்கை சார்ந்தவை; மீதி 35 சின்னங்கள் பொதுவானவை ஆகும். இத்தாலியில் 53 சின்னங்களும் சீனாவில் 52 சின்னங்களும், இந்தியாவில் 36 நினைவுச் சின்னங்களும் பாரம்பரிய சின்னங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நாளின் நோக்கம்

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று சிறப்பிக்கப்படும் உலக பாரம்பரிய தினத்தின் நோக்கமே, பொதுமக்கள் தம் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்துவதாகும். கோவில்கள், மண்டபங்கள், திருக்குளங்கள், சிற்பங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், நடுகற்கள், ஈமச்சின்னங்கள் போன்றவற்றைப் பாதுகாத்து, நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்வது ஒவ்வொரு தலைமுறையின் கடமையாகும். இது காலத்தின் கட்டாயமும்கூட. இது ஒவ்வொருவரின் பொறுப்புணர்வை வலியுறுத்தி நிற்கும் விழிப்புணர்வு நாள்.

உலக மரபுரிமை நாள் அல்லது உலகப் பாரம்பரிய நாள் என அழைக்கப்பட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாளன்று சிறப்பிக்கப்படும் இந்த நாள்,  உலகப் பண்பாட்டு மரபுடன் தொடர்புடையவைகளை  காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளின் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நாளின் நோக்கம் கலாச்சார தலங்களின் மதிப்பை பாதுகாப்பதோடு அதற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சார வெளிப்பாடுகளை மதிக்கவும் பாராட்டவும் இந்த நாள் நம்மை ஊக்குவிக்கிறது. உலக பாரம்பரிய தினம் என்பது நமது கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

இந்த நாளின் தோற்றம்

1982 ஆண்டில் துனிசியாவில் நடைபெற்ற நினைவுச் சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஏப்ரல் 18 ஆம் நாள் "நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாளாக கொண்டாடப்பட பரிந்துரைக்கப்பட்டது. 1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது அவையின் 22ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18ஆம் நாள், 'நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான நாளாக' அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து    ஆண்டுதோறும் ஏப்ரல் 18 அன்று “நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான அனைத்துலக தினம்” சிறப்பிக்கப்படுகிறது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

உலகின் முக்கிய பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்

இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும், 13,000 மைல்களுக்கு மேல் நீண்டு நிற்கும் சீனப் பெருஞ்சுவரை நாம் இங்கு குறிப்பிடலாம்.  அதற்கடுத்து, ஏறக்குறைய

2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, 50,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய உலகின் மிகப்பெரிய அக்கால விளையாட்டரங்காக அறியப்படும் கொலோசியத்தை நாம் இங்கு குறிப்பிடலாம். எகிப்தியர்களின் புத்தி கூர்மை மற்றும் பொறியியல் திறன்களின் மறுக்க முடியாத சான்றுகளுள் ஒன்றாக,  4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, கிசாவின் பிரமிடுகள் கட்டிடக்கலை அற்புதங்கள் மட்டுமல்ல, எகிப்தின் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலாச்சாரச் சின்னங்கள். 17ஆம் நூற்றாண்டில் பேரரசர் ஷாஜகான் தன் அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாகக் கட்டிய தாஜ்மஹால், முகலாயப் பேரரசின் பாராட்டத்தக்க கலைத்திறன் மற்றும் கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது தவிர, ஜோர்டனில் சிவப்பு மணற்கல் பாறைகளால் செதுக்கப்பட்ட பெட்ரா நகர், கிரேக்கத்தின் ஏதென்ஸில் உள்ள ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான அக்ரோபோலிஸ் கோட்டை, கம்போடியாவில் அமைந்துள்ள பழமையான அங்கோர் வாட் கோயில் வளாகம், நியூயார்க் துறைமுகத்தில் உயர்ந்து நிற்கும் சுதந்திரதேவி சிலை என கூறிக்கொண்டேச் செல்லலாம்.

இந்தியாவின் எட்டு  முக்கிய பாரம்பரிய சின்னங்கள்

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள, புத்த மத சிற்பக் கலையின் தலைசிறந்த படைப்புகளான அஜந்தா குகைகள்,  கி.பி. 10ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சோழப் பேரரசன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், அஸ்ஸாம் மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்கா, உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தின் தாஜ்மஹால், ஒடிசாவில் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பிரமாண்டமான கோனார்க் சூரியக் கோயில், மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் உள்ள புத்த நினைவுச் சின்னங்கள், பீகாரின் புத்தகயாவில் உள்ள மகாபோதி புத்த கோயில், குஜராத்தில் அமைந்துள்ள சம்பானேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா ஆகியவைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம். இது தவிர,  பெரிய அளவில் பிரபலமாகாத எண்ணற்ற கலாச்சாரச் சின்னங்கள் இந்தியாவில் உள்ளன.

தமிழக புராதான கலாச்சார சின்னங்கள்

ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்க்கும் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் என்றுப் பார்த்தோமானால், தமிழ் நாட்டில் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன.

மாமல்லபுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், மதுரை, திருவரங்கம் உள்ளிட்ட கோவில்களைக் கண்டு வியக்காதவர் இல்லை. அவற்றின் கலையழகு, சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவை பாரம்பரிய சொத்துக்களாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள கல்வெட்டுகள், பண்டைய காலத்தின் கிராம நிர்வாகம், நீதி, தேர்தல், வேளாண்மை, நீர்ப்பாசனம், நில அமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கூறுகின்றன. செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காசுகள் உள்ளிட்டவையும், பாரம்பரிய வரலாற்றைச் சொல்கின்றன. தற்போது, கீழடி, ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களும், நம் பாரம்பரிய பெருமைகளை எடுத்துச் சொல்கின்றன.

இந்திய அரசு தொல்லியல் அளவீட்டுத் துறையினரின் கல்வெட்டுப் பிரிவு 1887ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இப்பிரிவு இன்றளவில் ஏறக்குறைய ஒரு லட்சம் கல்வெட்டுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் உள்ளது. இவற்றுள் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் ஏறத்தாழ அறுபதாயிரம் என்ற அளவில் இருக்கலாம். இது தழிழர் நாகரீகத்தின் தொன்மைக்குச் சான்று. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் சிறப்பானச் சேவையாற்றிவருகிறது.

நாம் செய்யவேண்டியவை

ஆண்டுதோறும் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டாலும் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல தொல்லியல் சின்னங்களை நாம் அலட்சியப்படுத்தி வருகிறோம். ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பழமை வாய்ந்த பல ஈமக்காடுகளின் மேல் பல வானுயர்ந்த கட்டிடங்கள் எழும்பி நிற்கின்றன. தென்மாவட்டங்களில் சமணர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படும் வரலாற்றுச் சின்னங்கள் அடங்கிய குன்றுகள் கல்குவாரிகளாக மாறிக் காணாமல் போய்விட்ட வரலாறும் மறுக்க முடியாதது.  ஆதலால், ஏப்ரல் 18ஆம் தேதி மட்டும் நாட்டின் வரலாற்றுச் சின்னங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. நம் கலாச்சாரப் பெருமைகளை நாம் ஒவ்வொருவரும் உள்ளார்ந்த நிலையில் உணரவேண்டும், அதை மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2024, 13:37