தேடுதல்

காற்று மாசுபாடு காற்று மாசுபாடு   (AFP or licensors)

காற்று மாசுபாட்டால் இறக்கும் பாகிஸ்தானிய குழந்தைகள்!

இந்தப் புவி தினத்தில், பாகிஸ்தானில் எந்த ஒரு குழந்தையும் பருவநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் அது தொடர்பான பேரழிவுகளின் விளைவுகளை மீண்டும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் : யுனிசெஃப் பிரதிநிதி Abdullah Fadil

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தற்போது பாகிஸ்தான் முழுவதும் பெய்துவரும் பருவமழை, மீண்டும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருகிறது என்றும், இது 2022-ஆம் ஆண்டின் பேரழிவு தந்த சோகத்தை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது என்றும் கூறியுள்ளார் அந்நாட்டிற்கான யுனிசெஃப் பிரதிநிதி Abdullah Fadil

ஏப்ரல் 22, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக புவி நாளை முன்னிட்டு, பருவநிலை மாற்றம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் காற்று மாசுபாட்டின் தீங்கான தாக்கம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள அந்நாட்டிற்கான யுனிசெஃப் பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் அவர்கள், கடந்த 10 ஆண்டு மழையின் காரணமாகப் பாகிஸ்தானின் தெற்கு சிந்துவில் உள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணித்துள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் எவ்வாறு ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதையும், அவர்களின் பள்ளிகள்,  நம்பிக்கைகள் மற்றும், எதிர்காலம் உட்பட அவர்களிடமிருந்த சிறிதளவும் கழுவப்பட்ட்டு விட்டது என்பதையும் நான் நேரடியாகப் பார்த்தேன் என்று குறிப்பிட்டுள்ள ஃபாடில் அவர்கள், அக்குழந்தைகளுக்குக் கணிசமான உதவி முயற்சிகள் இருந்தபோதிலும், டிசம்பர் 2023-ஆம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 96 இலட்சம்  குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை பாகிஸ்தானில் குழந்தைகளின் உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்குப் பேரழிவு தரும் வெள்ளம் ஓர் எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டியுள்ள ஃபாடில் அவர்கள், பதிவான உயர் வெப்பநிலை அனைத்து பாகிஸ்தானிய குழந்தைகளையும் வெப்ப அழுத்தத்தின் ஆபத்திற்கு ஆளாக்குகிறது என்றும் தனது வேதனையை பதிவுசெய்துள்ளார்.

அதேபோல், பெரியவர்களை விட குழந்தைகள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், இது உயிருக்கு ஆபத்தான சுவாச நோய்களுக்கு வழிவகுக்கிறது என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட பாகிஸ்தானிய குழந்தைகளின் இறப்புகளில் 12 விழுக்காடு காற்று மாசுபாட்டினால் ஏற்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டிள்ளார் ஃபாடில்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 14:07