தேடுதல்

உணவுக்காக வரிசையில் நிற்கும் காட்சி உணவுக்காக வரிசையில் நிற்கும் காட்சி 

உணவின்மையால் துயருறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ல் உணவு பற்றாக்குறையால் மேலும் 2கோடியே 40 இலட்சம் பேர் துன்புற்றனர், இதற்கு ஆயுதம் தாங்கிய மோதல்களும் ஒரு காரணம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அடிப்படை உணவு குறைபாட்டால் துயருறும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட GRFC என்ற உணவு நெருக்கடி குறித்த உலக அறிக்கை உரைக்கிறது.  

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் உணவு பற்றாக்குறையால் மேலும் 2 கோடியே 40 இலட்சம் பேர் துன்புற்றதாகவும், இந்த உணவு பாதுகாப்பின்மைக்கு ஆயுதம் தாங்கிய மோதல்களும் ஒரு முக்கியக் காரணம் என இவ்வறிக்கை உரைக்கிறது.

காசா பகுதி மற்றும் சூடான் உட்பட உலகின் 59 நாடுகளில் ஏறக்குறைய 28 கோடியே 20 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பின்மையால் துன்புற்று உணவு உதவிகளைச் சார்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய மோதல்கள் உணவு நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்பதைச் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, காசா மற்றும் சூடான் பகுதிகளில் நடக்கும் மோதல்களை மேற்கோள் காட்டியுள்ளது.

உலகில் இன்று 7 இலட்சத்து ஐந்து ஆயிரம் பேர் மிகப்பெரிய அளவில் பசிச்சாவுகளை எதிர்நோக்கியிருப்பதாகவும், இதில் 80 விழுக்காட்டினர் காசா பகுதியில் வாழ்வதாகவும் கூறும் GRFC அறிக்கை, காசாவில் அடுத்த 6 வாரங்களில் உணவு பாதுகாப்பின்மை, சத்துணவின்மை, பசிச்சாவுகள் போன்றவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற உலக உணவு திட்டமான WFPன் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளது.

உணவு நெருக்கடியை பெருமளவில் சந்திக்கும் நாடுகளாக, தென் சூடான், புர்கினா பாசோ, சொமாலியா, மாலி, காங்கோ குடியரசு, நைஜீரியா, சூடான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஏமன், சிரியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது இவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 April 2024, 13:44