தேடுதல்

சிகரெட்டை அங்கேயே தயாரித்து விற்றல் சிகரெட்டை அங்கேயே தயாரித்து விற்றல்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - வாழ்வை சாம்பலாக்க முயலும் புகைப்பிடித்தல்

2017 டிசம்பரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பெற்றோர் புகைக்கும்போது தாமும் புகைப்பதில் தவறில்லை என்று சொன்னவர்கள் 89 விழுக்காட்டினர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமையன்று புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. "புகைபிடிப்பதால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை விட்டுவிட ஊக்குவிக்கவும் இந்த நாள் குறிக்கப்படுகிறது. அண்மைய ஆய்வுகளின்படி, அதாவது 2023ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஒவ்வோர் ஆண்டும் 87 இலட்சம் பேர் இளவயதிலேயே புகையிலை பயன்பாட்டினால் பலியாகின்றனராம். இது 2019ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. இந்த 87 இலட்சம் பேரில் 77 இலட்சம் பேர் புகைப்பிடித்தலால் உயிரிழக்கின்றனர். இதில் மற்றவர்கள் வெளிவிடும் புகையால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் 13 இலட்சம் பேர். புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக நோயுற்று உயிரிழப்பவர்களில் 71 விழுக்காட்டினர் ஆண்கள். தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுக்கவும், புகைப்பிடிக்கும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட நாள்தான் மார்ச் மாதத்தின் இரண்டாம் வார புதன். அதாவது, இம்மாதத்தின் 13ஆம் தேதி. இது தவிர உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை மே மாதம் 31ஆம் தேதி நாம் சிறப்பிக்கிறோம்.

கடந்து வந்த விழிப்புணர்வு பாதை

No Smoking Day என்பதையே தன் பெயராகக் கொண்ட ஒரு பிறரன்பு அமைப்பு, 1984ஆம் ஆண்டில் தவக்காலத்தின் துவக்க நாளான விபூதி தினமன்று, அதாவது சாம்பல் தினமன்று, சாம்பலாகிப் போகும், வாழ்வை சாம்பலாக்க முயலும் புகைப்பிடித்தலை எதிர்க்கும் நாளாக சிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, உலக நலவாழ்வு நிறுவனம் 1987ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது ஏப்ரல் 7, 1988 அன்று ‘உலக புகை பிடிக்காத நாள்’ என்று அறிவித்தது. அதன் பின்பு அதே ஆண்டில் அதே உலக நலவாழ்வு நிறுவனம் மே 31ஆம் தேதியை ‘உலக புகையிலை எதிர்ப்பு நாள்’ என்று கடைபிடிக்க முடிவு செய்தது.

1975 ஆம் ஆண்டில் இந்தியாவில் சிகரெட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிகரெட் பெட்டிகள் மற்றும் விளம்பரங்களில் புகைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனத்தில் புகைபிடித்தல் சட்டவிரோதமானது என்று 1988ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில், புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு சிகரெட் பெட்டிகளில், 'புகைப்பிடிப்பது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும்' என்ற எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் சிகரெட் தயாரிப்பாளர்கள் அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசின் முடிவை உறுதி செய்தது.

புகைபிடிப்பதை தடுக்கும் விதமாக, பொது இடங்களில் புகைக்கத் தடை, குட்காவுக்குத் தடை, புகையிலைப் பொருள் விளம்பரங்களுக்குத் தடை, 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்கத் தடை, பள்ளி, கல்லுாரிகள் அருகில் இந்த பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலை

உலக நலவாழ்வு நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகில் ஏறக்குறைய 100 கோடி பேர் தினமும் புகைப்பிடிக்கின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 விழுக்காட்டினரும், பெண்களில் 10.8 விழுக்காட்டினரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். ஆண்கள் 47 விழுக்காடும், பெண்கள் 12 விழுக்காடும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ந்த நாடுகளில் 42 விழுக்காட்டு ஆண்களும் 24 விழுக்காட்டுப் பெண்களும், வளரும் நாடுகளில் 48 விழுக்காட்டு ஆண்களும் 7 விழுக்காட்டுப் பெண்களும் புகைப்பிடிக்கின்றனர்.

இந்தியாவில் 53 விழுக்காட்டு ஆண்களும் 3 விழுக்காட்டுப் பெண்களும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவின் கிராமப்புறங்களில் மூன்று பேருக்கு ஒருவர் புகையிலையை பயன்படுத்துவதாகவும், நகர்ப்புறங்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு இப்பழக்கம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டில் நச்சுத்தன்மை

சிகரெட்டில் நோயை உண்டாக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு நச்சு அதிகம் உள்ளது. தற்போது புகைப்பிடிக்கும் பழக்கம் வளர்ந்த நாடுகளில் குறைந்துள்ளது. ஆனால், வளரும் நாடுகளில் அதிகரித்துள்ளது. இ சிகரெட், லைட் சிகரெட், பில்டர் சிகரெட் என எல்லாவற்றாலும் பாதிப்பு ஏற்படுவது நூறு விழுக்காடு உண்மை. புகைபிடிப்பவர்கள் புகையை மட்டும் விடுவதில்லை. அதோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான நச்சுகளையும் வெளியிடுகின்றனர். இந்த நச்சுகளில் 250 நச்சுகள் கொடிய தீங்கு விளைவிப்பவை. 69 நச்சுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை.

விளைவுகள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 25 இலட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக லேன்சட்டின் சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு வாரமும் புகையிலை தொடர்பான நோய்களால் இந்தியாவில் 17,887 பேர் உயிரிழக்கின்றனராம். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் இலட்சத்தில் 10 பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 13 விழுக்காட்டு இறப்புகளுக்குப் புகையிலை பழக்கமே காரணமாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 21 விழுக்காட்டினர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. சிகெரெட் பிடிப்பவர்கள் இழுத்துவிடும் புகையால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஆண்டுதோறும் 7300 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 இலட்சமாக உயரும்.

புகைப்பவர்கள் விடும் புகையைச் சுவாசிக்கும் வயதுவந்தோரில் பலரும் கடுமையான சுவாச நோய்களுக்கும், இதய நோய், நுரையீரல் புற்று நோய்க்கும் ஆளாகிறார்கள். புகையைச் சுவாசிக்கும் சிசுக்களுக்குத் திடீர் மரணம் ஏற்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் எடை குறைந்த குழந்தையைப் பிரசவிக்கிறார்கள்.

வீட்டில் புகைபிடிப்பதால் 40 விழுக்காட்டுக் குழந்தைகள், அது சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதில் 31 விழுக்காட்டினர் இறக்கவும் செய்கிறார்கள்.

புகை பிடிப்பது, நுரையீரல்களில் இயற்கையாகவே உள்ள சுவாசச் சுத்திகரிப்பு செயல்களைப் பாதிப்பதால் கிருமிகள், நச்சுப்பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் சரிவர அகற்றப்படாமல் நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் தொடர் இருமல், நுரையீரல் புற்று நோய், நாட்பட்ட நுரையீரல் பாதிப்புகள் வருகின்றன.

புகைபிடிப்பது நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளைச் சேதப்படுத்தி அவற்றின் விரிந்து சுருங்கும் தன்மையைப் பாதிக்கின்றன. இதனால் ஆக்சிஜனை எடுக்கவும், கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றவும் நுரையீரல் சிரமப்படுகிறது. இதற்குத் துணை கொடுக்க இதயம் அதிகமாக இயங்கும்பொழுது, அதுவும் பாதிக்கப்படுகிறது.

ஏன் அடிமையாகிறோம்

புகைப் பழக்கம் ஆரம்பித்த புதிதில், புகையை இழுத்த 10 வினாடிகளில், புகையிலையில் முக்கியமாக உள்ள நிகோட்டின் எனப்படும் இரசாயனம் மூளையைச் சென்றடைந்து இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, அமைதியாகவும் அதிகக் கவனத்துடன் இருப்பது போலவும் உணரச் செய்கிறது. நாளடைவில் மூளை, உடலில் இயற்கையாகவே உள்ள இரசாயனங்களுக்குப் பதிலளிக்காமல் நிகோட்டினுக்குப் பழக்கப்பட்டு புகைக்காக ஏங்கத் துவங்குகிறது. பின்னர் இயல்பாக உணர்வதற்கே புகை பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.

நிகோட்டின் மட்டும் அல்லாது 4000 த்துக்கும் மேற்பட்ட கெடுதலான இரசாயனங்கள் சிகரெட்டில் உள்ளன. கார்பன் மோனாக்சைடு, ஆர்சனிக், ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம், ஃபார்மாலடிஹைட் என சிலவற்றை பட்டியலிட்டுக் கூறலாம்.

திரைப்படங்களின் பங்களிப்பு

சிறுவர்கள் சிகரெட்டைப் பிடிக்க வைப்பதில் சினிமா நடிகர்களுக்கும், விளம்பரங்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. தனக்குப் பிடித்த நடிகர் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதைப் பார்த்து அதே போல பிடிக்க ஆசைப்படுகின்றனர். அதுவே பழக்கமாகி, வழக்கமும் ஆகிவிடுகிறது

சின்னப்பா பாகவதர் காலம் தொடங்கி திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் குறையின்றி தொடர்ந்து கொண்டுள்ளன! பொதுவாக சிகரெட் பிடிப்பது குற்றமாக கருதப்பட்ட நமது சமூகத்தில் அதை கடைக்கோடி மனிதன் வரைக்கும் சகஜமான ஒன்றாக மாற்றியதில் திரைப்படத் துறைக்கு பங்கிருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பலரிடம் நடந்தப்பட்ட அந்த ஆய்வில் 53 விழுக்காட்டினர் தங்கள் புகைப்பழக்கத்திற்கு திரைப்படம் ஒரு தூண்டுதலாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இன்றைக்கு வெளிவரும் 60%க்கு மேற்பட்ட திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சி வந்து கொண்டுதான் இருக்கிறது.

தன் திரைப்படங்களில் முடிந்த அளவு புகைப்பிடித்தலை தவிர்க்க முயன்றவர் புரட்சி திலகம் என்றால், இன்று அதனை செயல்படுத்திக்காட்டி வருபவர் ஒரு நடிகரின் மகன்களான இரு நடிகர்களுள் இளையவர்.

குடும்பங்களின் பங்களிப்பு

2017 டிசம்பரில் இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பெற்றோர் புகைக்கும்போது தாமும் புகைப்பதில் தவறில்லை என்று சொன்னவர்கள் 89 விழுக்காட்டினர். இன்னுமோர் ஆய்வின்படி, 70% மேற்பட்டோர் நண்பர்களின் உந்துதலினாலும், அவர்களின் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவிக்கச் சிரமப்படுவதாலும் புகைபிடிக்க ஆரம்பிப்பதாகக் கூறப்படுகிறது.

முதலாவதாக, பெற்றோர் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். சிகரெட், பீடி வாங்குவதற்கு குழந்தைகளை, சிறுவர்களை அனுப்பவே கூடாது. சிகரெட் பெட்டி எடுத்துட்டு வா, தீப்பெட்டி கொண்டு வா என்று குழந்தைகளை, சிறுவர்களை வேலை வாங்கக்கூடாது. ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் தங்களுக்குரிய கடமைகளை உனர்ந்து செயல்படும்போது வருங்காலத் தலைமுறை காப்பாற்றப்படும்.

அரசின் கடமை

புகைபிடிக்கும் காட்சி படத்தில் வரும் போதே “புகை பிடித்தல் தீங்கானது‘” என்று கீழே காட்டுவது பயனற்றது, அது ஒரு வெற்றுச் சடங்கு!

உலகளவில் 10 சதவீத வருவாய் புகையிலை சார்ந்த பொருட்கள் மூலம்தான் கிடைக்கிறது. பொருளாதார ரீதியில் இது நல்லதாகப் பார்க்கப்பட்டாலும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம், தேவையற்ற மருத்துவச் செலவு, மனித உழைப்பு வீணடிப்பு ஆகியவற்றையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

புகைபிடிப்பதைத் தடுக்கப் புகையிலை மீதான வரிகளை அதிகரிப்பது முக்கியமான வழி. சிறுவர்களுக்குப் புகையிலை சார்ந்த பொருட்களை விற்க முழுமையான தடை விதிக்க வேண்டும். புகைபிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். மன நல, மருத்துவ உதவிகள் இரண்டும் தேவை.

நமது கடமை

வீட்டுக்குள்ளோ, காரிலோ அல்லது மூடப்பட்டுள்ள எந்த இடத்திலும் யாரையும் புகைக்க அனுமதிக்காதீர்கள். புகை அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து உங்கள் குழந்தையை அப்புறப்படுத்துங்கள். உணவு விடுதிகளுக்குச் செல்லும்போது புகையில்லா இடத்தையே தேர்வு செய்யுங்கள். குழந்தை, மற்றும் கர்ப்பிணி பெண்கள் அருகில் புகைக்காதீர்கள்!

தற்போதைய நிலவரத்தின்படி, புகைப் பிடிப்பதால் தான் அதிகளவு குழந்தையின்மை பிரச்னை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புகைப்பழக்கத்தை விடுவதால் ஏற்படும் நன்மைகள்

புகைப்பிடிக்காத தினம், மார்ச் 13 அன்று கொண்டாடப்பட்டாலும், ஆண்டின் எந்த நாளிலும் புகைபிடிப்பதை விட்டுவிட தடையில்லை. ஏறக்குறைய 78 கோடி பேர் புகைப்பழக்கத்தை நிறுத்த விரும்புகிறார்கள், ஆனால் 30 விழுக்காட்டினரே அதற்கு சாதகமான விடயங்களைக் கைக்கொள்கின்றனர்.

நாம் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் நம் ஆயுளிலிருந்து சில நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது புற்றுநோய், இதய நோய், சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கும். இது நுரையீரல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த உடல் தகுதியையும் மேம்படுத்தும்.

சிகரெட்டில் உள்ள நிகோடின் ஒரு சக்திவாய்ந்த போதை மருந்தாக இருப்பதால், புகைபிடிப்பதை விட்டுவிடுவது துவக்கத்தில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புகை நமக்கு எப்போதுமே பகை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொண்டாலே புகையிலை இல்லாத ஓர் ஆரோக்கிய சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும். இதுவே நமக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2024, 13:19