தேடுதல்

வனங்களின் உயிர்துடிப்பு வனங்களின் உயிர்துடிப்பு  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - உலக வன உயிரினங்கள் தினம்

உலகமயமாதல், தொழிற்சாலைகள் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை வளர்க்க பெரும் உதவியாக இருந்தாலும், இயற்கை சூழலுக்கு எதிரியாக மாறிவருகிறது என்பது உண்மை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு உலகில் தற்போது அதிகம் அதிகமாக வளர்ந்து வருகிறது. திருஅவையிலும் அது வளர்ந்துவருவதைக் காண்கிறோம். பிரான்சிஸ் என்ற பெயரை எடுத்துக்கொண்டு இந்த  திருஅவையை வழி நடத்த 2013ல் பொறுப்பெற்ற நம் திருத்தந்தை, ஏன் அந்த பெயரை தேர்வுச் செய்தார் என்பதை கடந்த 11 ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார். 1226ஆம் ஆண்டு, அதாவது 13ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் அசிசியில் இறந்த புனித பிரான்சிஸ், இயற்கையின் மீது, விலங்குகள் மீது, குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அனைத்து படைப்புக்கள் மீதும் அளவற்ற காதல் கொண்டிருந்தார். அவரின் பெயரை எடுத்துக் கொண்ட நம் தற்போதைய திருத்தந்தை, 2015 ஆம் ஆண்டே ‘லவ்தாத்தோ சி’ என்ற மடலின் வழி நம் பொது இல்லமாகிய படைப்பை, இவ்வுலகை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பட்டியலிட்டுக் காட்டினார். அதேவேளை, நாம், புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் தேதியையும் உலக விலங்குகள் தினமாக சிறப்பிக்கிறோம்.  இந்த ஞாயிறும், அதாவது மார்ச் 3ஆம் தேதியிலும் இவ்வுலகம் உலக வன உயிரினங்கள் தினத்தைச் சிறப்பித்தது. இந்த வாரத்தின் முதல் நாள் ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக வன உயிரின தினத்தினைக் குறித்து இன்றைய வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் நோக்குவோம். இன்றைய உலகம் இயற்கை மீது அக்கறையுடன் செயல்படுகிறது என்பதற்கு, அது ஆண்டுதோறும் சிறப்பித்துவரும் உலக சிறப்பு தினங்களே சான்று.

இயற்கை மீது அக்கறை கொண்ட உலக சிறப்பு தினங்கள்

பிப்ரவரி மாதத்தில் உலக சதுப்பு நில நாளையும், மார்ச் மாதத்தில் உலக வன நாள், உலக தண்ணீர் நாள், உலக வானிலை நாள் ஆகியவைகளையும், ஏப்ரலில் பூமி நாள், உலக ஆய்வக விலங்குகள் நாள் ஆகியவைகளையும், மே மாதத்தில் சூரிய நாள், அனைத்துலக பல்லுயிர்ப் பெருக்க நாள், உலக ஆமைகள் தினம் ஆகியவைகளையும், ஜூன் மாதத்தில் உலக சுற்றுசூழல் நாள், உலகக் கடல் நாள், உலகம் பாலவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான நாள் ஆகியவைகளையும், செப்டம்பரில் அனைத்துலக ஓசோன் படல பாதுகாப்பு நாளையும், அக்டோபரில் உலக விலங்குகள் நாளையும் நாம் சிறப்பிக்கின்றோம்.

திருத்தந்தையின் ‘லவ்தாத்தோ சி’

திருத்தந்தையின் ‘லவ்தாத்தோ சி’ என்ற மடல் உள்வாங்கியிருக்கும் சில கேள்விகளை கொஞ்சம் முதலில் நோக்குவோம். சிறாரின் வருங்காலத்தை நம்மால் திருட முடியாது என்பதை உணர்ந்தவர்களாக நாம், தற்போது வளர்ந்துவரும் சிறார்க்கு எத்தகைய ஓர் உலகை விட்டுச்செல்லப் போகிறோம் என்றும், நாம் எல்லாரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றோம் என்பதையும், ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கு உலகினர் அனைவரிலும் ஒருமைப்பாடு எவ்வளவு அவசியம் என்பதையும் அந்த ஏட்டில் வலியுறுத்திக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  “இந்த உலகில் நம் வாழ்வின் நோக்கம் என்ன? நமது தொழில் மற்றும் நமது எல்லா முயற்சிகளின் இலக்கு என்ன? இந்தப் பூமி நமக்கு எதற்குத் தேவை?” என்றக் கேள்விகளை நாம் ஆழமாகச் சிந்திக்காவிட்டால், சுற்றுச்சூழல் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறை குறிப்பிடத்தக்கப் பலன்களைத் தரும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் விரிவாகத் தெரிவித்துள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தகைய ஒரு பின்னணியில், உலக வன உயிரின தினம் குறித்து சிந்திப்போம். எல்லாவற்றிற்கும் முதன்மையானதாக, இலவசமாக கொடுக்கப்பட்ட இயற்கையை நம் வருங்கால சந்ததியினர்க்காக, மேலும் வளமுள்ளதாக மாற்றவேண்டியது நம் கடமை. இயற்கையை பராமரிப்பவர்கள் என்ற நிலையையும் தாண்டி, அதில் அக்கறையுடையவர்கள் என்பது நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவது என்பது, ஏழைகளையும் இயற்கையையும் சுரண்டுவதற்கு ஒப்பாகும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஏன் இந்த தினம்

வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் வன உயிரினங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உணவுச் சங்கிலியை சமநிலையுடன் வைத்திருப்பதில் வன உயிரினங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை எடுத்துரைக்கவும், உயிர் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், வனஉயிர்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் நாம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறவும் ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.

முக்கியத்துவம்

இன்றைய சூழலில், தோலுக்காக புலிகள், இறைச்சிக்காக மான்கள், தந்தத்திற்காக யானைகள் என மனிதனால் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.

உலகமயமாதல், தொழிற்சாலைகள் வளர்ச்சி என்பது  பொருளாதாரத்தை வளர்க்க பெரும் உதவியாக இருந்தாலும், இயற்கை சூழலுக்கு எதிரியாக மாறிவருகிறது என்பதை இன்னும்  மனிதன் உணரவில்லை. இதனால் பல வனப்பகுதிகள் மற்றும் வன உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல இந்த பூமி என்பது மனிதனுக்கு மட்டும் உரித்தானது அல்ல, அது மற்ற வன உயிர்களுக்கும் சொந்தமானது. அதன் உரிமைகளை நாம் பறிப்பது தவறு என்று சுட்டிக் காட்டவும், விலங்குகள் தங்கள் இடத்தில் பாதுகாப்பாக வாழும் சூழலை மனிதன் உறுதிப்படுத்தவும் இந்த நாளின் நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வரலாறு

1973 ஆம் ஆண்டில் மார்ச் 3 அன்று, காட்டு விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்தாமல் இருப்பதை அனைத்துலக வர்த்தகம் உறுதி செய்வது, அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக வன உயிர் தினத்தை 2013ஆம் ஆண்டு ஐ.நா. பொதுஅவையில் தாய்லாந்து நாடு முன்மொழிந்தது. வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாக முன்மொழியப்பட்டது. டிசம்பர் 20, 2013 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுஅவையின் 68-வது அமர்வு மார்ச் 3ஆம் தேதியை உலக வன உயிரின தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, 2014ஆம் ஆண்டு முதல் கொண்டாட வலியுறுத்தியது.

இவ்வாண்டின் கருப்பொருள்

வன உயிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு இந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும், ஒரு சிறப்பு கருப்பொருள் இந்த நாளை கொண்டாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தாண்டு, இந்த நாளின் கருப்பொருளாக, மக்களையும் இந்த கிரகத்தையும் இணைப்பது – வனவிலங்குகள் பாதுகாப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, என்பது எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாம் செய்வது என்ன

இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் விலங்குகளுக்கும், வனங்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் வனங்களை நாம் சொந்தம் கொண்டாடி அதை அழித்து வருகிறோம். அதனால், வனங்களை சார்ந்து வாழ்ந்து வரும் விலங்குகள் அழிவை சந்தித்து வருகின்றன. மனிதர்கள் தங்களின் உணவுக்காகவும், அவைகளின் தோலுக்காகவும், சில நேரங்களில் தன்னுடைய பொழுதுபோக்குக்காகவும் விலங்குகளை அழித்து வருகிறான் என்பதே கசப்பான உண்மை.

பூமி தோன்றிய நாள் முதல் வாழ்ந்த உயிரினங்களில் 90 விழுக்காடு இன்று உயிருடன் இல்லை. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நூற்றாண்டும் என உயிரினங்கள் தொடர்ந்து அழிந்து கொண்டு தான் வருகின்றன. உலக வனவிலங்கு நிதி நிறுவனத்தின் (WWF) அறிக்கையின்படி, ஐம்பது ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளதாகத் தெரியவருகிறோம். இத்தகைய நிலைக்கு மனிதர்களாகிய நாம், முக்கிய காரணமாக இருக்கிறோம். முக்கிய காரணமாக இருப்பது மனிதர்கள் காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குவது தான்.

பூமி வெப்பமாதலினாலும், காடுகள் தொடர்ந்து அழிவை சந்தித்து வருவதாலும் பூக்களின் மகரந்த சேர்க்கை இல்லாமல் தேனீக்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறதாம். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், அதிலிருந்து வரும் அதிர்வலைகளின் தாக்கத்தால், சிட்டுக்குருவி, மரங்கொத்தி பறவை போன்றவை அழிவின் விளிம்பில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதே போல் எண்ணற்ற பறவைகள் தங்களின் இனப்பெருக்கத்தை பெருக்கிக்கொள்ள சதுப்பு நிலத்தைத் தேடி வரும். ஆனால் அது வருடா வருடம் குறைந்து வருவதாக பறவைகள் ஆய்வாளார்கள் கூறுகின்றனர். கடல்களை எடுத்துக்கொண்டால் கடல் ஆமை,  துருவ கரடி, டால்பின் என்று எண்ணிலடங்கா நீர் வாழ் உயிரினங்கள் கடலில் கொட்டப்படும் கழிவினால் உயிரிழப்பதாக கூறுகின்றனர்.

அழிந்து வரும் வனவிலங்குகள்

விலங்குகளின் வகைகளில், ஈரானில் காணப்படும் வேங்கை புலி, சிறுத்தை, வரிப்புலி, சிவப்பு ஓநாய்கள், ஆப்பிரிக்க காட்டு கழுதை என்று கணக்கில் அடங்கா மிருகங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதேபோல அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் திமிங்கலங்கள், கடல் ஆமைகள் கடல் குதிரைகள் போன்றவையும் அழிவின் விளிம்பில் உள்ளனவாம். இத்தகைய நிலை தொடர்ந்தால், இன்னும் எண்பது ஆண்டுகளில் இப்பொழுது இருக்கின்ற விலங்கினங்களில் பாதிக்கு மேற்பட்ட விலங்கினங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த புவியில், ஒவ்வோர் உயிரினமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆகவே, மனிதர்களாகிய நாம் நம் நலனை கருத்தில் கொண்டாவது, பிற உயிரினங்களை அழிக்காமல் வாழ்வது, காலத்தின் கட்டாயம்!

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களில் ஏறத்தாழ 8,000 வகைகள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் அழிந்து கொண்டு வருகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. பத்து இலட்சம் உயிரினங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டன.

கடந்த 30 ஆண்டுகளில், வங்கப்புலி வகை 50% சரிவைக் கண்டுள்ளது. இந்திய பாங்கோலின் எனப்படும் செதில் எறும்பு விலங்கு அதன் இறைச்சி மற்றும் செதில்களுக்காக வேட்டையாடப்படுவதால் தற்போது, அழிவுநிலையில் உள்ளது. நீலகிரி வரையாடுகள் எண்ணிக்கையில் பெருமளவில் குறைந்து வருகின்றன. நீலகிரி மலைகளில் காணப்படும் நீலகிரி மந்தி என்ற குரங்கினம், மருத்துவ குணங்களுக்காகவும், தோல்களுக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகிறது.

நம் கடமைகள் என்ன

உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்துள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர். சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றையும் காடுகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகின் மீது உரிமை உண்டு. இங்குள்ள வளங்கள் அனைவருக்குமானது. இதை புரிந்துகொண்டு வாழ்ந்தால், அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

எனினும், நிஜத்தில் அப்படி நடப்பதல்ல. உலகம் தனக்கானது என்ற கர்வத்துடன் மனிதர்கள் வாழ்ந்து வருவதன் விளைவு, காடுகள், விலங்குகள் என அனைத்தும் பெருமளவில் அழிந்துகொண்டிருக்கின்றன. இதை நிறுத்த நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வியாக முளைத்துள்ளது. ஆம். இனிப்பான பொய்களைப் பற்றிகொண்டு, கசப்பான உண்மைகளை தூக்கி வீசியதால் உலகின் வருங்காலம் இருண்டுகொண்டே வருகின்றது. நம் விளக்குகள் எப்போது எரியப்போகின்றன?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2024, 12:42