தேடுதல்

அனைவரும் தேடுவது மகிழ்ச்சியை அனைவரும் தேடுவது மகிழ்ச்சியை 

வாரம் ஓர் அலசல் - உலக மகிழ்ச்சி தினம்

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.

ஏன் மார்ச் 20 ஆம் தேதியில் உலக மகிழ்ச்சி தினத்தை சிறப்பிக்க வேண்டும் என நீங்கள் கேட்கலாம். அந்த நாளுக்கென ஒரு சிறப்பு உண்டு. அது இளவேனிற்காலத்தின், அதாவது, வசந்த காலத்தின் துவக்க நாள். அந்த நாளில் பகலும் இரவும் சரிசமாக இருக்கும். இதனால்தான் இந்த நாளை, உலகின் மகிழ்ச்சி தினமாகச் சிறப்பிக்க தேர்ந்தெடுத்திருக்கிறது ஐ.நா. நிறுவனம்.

மகிழ்ச்சியாக வாழ்வது, மனித உரிமைகளில் ஒன்று. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம், உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது. அந்த அவையின் அறிவிப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 20ஆம் தேதி, ஒவ்வொரு தலைப்பில்,   உலக மகிழ்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. ‘ஒன்றிணைந்து மகிழ்ச்சிகாணல்’ என்பது இவ்வாண்டிற்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான இந்த தலைப்பு, நீடித்த நிலையான மகிழ்ச்சி என்பது சமூகத்தில் நம் உறவுகளிலிருந்தும் ஈடுபாட்டிலிருந்தும் பிறக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.

மகிழ்ச்சி என்பது என்ன?

மகிழ்ச்சி எது எனக் கேட்டால் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வோர் அர்த்தத்தைக் கூறுவர். போர் மற்றும் வறுமையை உலகளவில் முடிவுக்குக் கொண்டுவருவதே மகிழ்ச்சி என ஐ.நா. நிறுவனம் கருதுகிறது. மகிழ்ச்சியே மனிதனின் அடிப்படை இலட்சியம் என்கிற அடிப்படையில் ஐ.நா. பொதுஅவை மார்ச் 20ஆம் தேதியை அனைத்துலக மகிழ்ச்சி தினமாக அறிவித்துள்ளது.

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. மகிழ்ச்சி எல்லாவித மாற்றங்களையும் கொண்டு வரக்கூடியதாகும். எப்போதும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பது நமது ஆயுளை கூட்டும் என்பது நாம் அறிந்ததே.

மகிழ்ச்சியைப் பெறும் நோக்கத்துடன் செய்யும் எல்லா செயல்களும் மகிழ்ச்சியைத் தந்துவிடாது. பிறருக்குத் தீங்கு விளையக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் செய்யும் செயல்களே மகிழ்ச்சியை அளிக்கும். அப்படி தீங்கற்ற செயல்களால் தன்னை உருவாக்கிக் கொள்பவர்கள் வாழ்வில் வெற்றிகாண்பர்.

பொதுவாகவே மகிழ்ச்சிக்கும், சிரிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மகிழ்ச்சியின் அடிப்படையாக உணரப்படுவது சிரிப்பு. எனவே சிரிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தூண்ட முடியும். சிரிப்பு ஆரோக்கியம் தருவதாக, தற்போதைய மருத்துவ கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. மனநிலையை மகிழ்ச்சியாக பராமரிப்பதன் வழியாக, சிரிப்பையும், ஆரோக்கியத்தையும் வாழ்வில் தக்க வைக்க முடியும். நம்மால் முடித்த அளவு பிறருக்கு உதவி செய்வதன் வழியாக மகிழ்ச்சியை பெறவும் முடியும், பிறருக்கு தரவும் முடியும்.

மகிழ்ச்சி, மனிதராக பிறந்த அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு. ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவரை மட்டுமல்ல, அவரைச் சுற்றி உள்ளவர்களின் மனநிலையையும் மாற்றி வாழ்க்கையை இனிமையாக்கும்.

புகார் சொல்லும் பழக்கத்தைத் தவிர்த்து, வாழ்க்கையில் நன்றியுணர்வோடு இருப்பவர்கள், மன அமைதியோடு, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நாம் சரியானதொரு வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை நிரூபிப்பது, அந்த வாழ்க்கை வெளிப்படுத்தும் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது.

மகிழ்ச்சி தினத்தின் துவக்கம்

2012 ஏப்ரலில் பூட்டானின் மன்னராட்சி அரசு, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அதில் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை ஒரு பொருளாதார அம்சம் போலப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு இந்த நாள் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. தேசத்தில் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை நம்பிய பூட்டானால் முதலில் வலியுறுத்தப்பட்ட ஒரு முன்முயற்சியாகும் இது. முதல் அனைத்துலக மகிழ்ச்சி தினம் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்

சமூகப் பாதுகாப்பு, வருமானம், நல ஆதரவு, சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட மகிழ்ச்சிப் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாகப் பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களின் சராசரி வாழ்க்கை மதிப்பீடுகள் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். கடந்த காலங்களைப் போல நார்டிக் நாடுகளே முதல் இடங்களில் உள்ளன. இதில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ள நிலையில், டென்மார்க் இரண்டாவது இடத்திலும், ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும், இஸ்ரேல் நான்காவது இடத்திலும், நெதர்லாந்து 5வது இடத்திலும், சுவீடன் 6வது இடத்திலும் உள்ளன. அதேபோல நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் 7 முதல் 10வது இடங்களில் உள்ளன. இங்கு இந்தியா எந்த இடத்தில் வருகிறது என அறிவதற்கு நமக்குள் ஆர்வம் எழலாம். அண்டை நாடுகளான நேபாளம் (78ஆவது இடம்), சீனா (64ஆவது இடம்), வங்கதேசம் (118ஆவது இடம்), இலங்கை (112ஆவது இடம்), பாகிஸ்தான் (108வது இடம்) ஆகியவைகளின் பட்டியல் வரிசையை பார்க்கும்போது, நிச்சயமாக இந்தியா இதற்கெல்லாம் மேலாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கைத் துளிர்விடுகின்றது. ஆனால் 136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 126வது இடத்தில் உள்ளது. அதாவது உலகிலேயே மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் கடைசி 10 இடங்களை எடுத்துக் கொண்டால் அதில் ஆப்கானிஸ்தான் கடைசி இடமான 136வது இடத்தில் உள்ளது. இதுமட்டுமின்றி 2022ம் ஆண்டும், 2021ம் ஆண்டும் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் தான் பெற்றது. கடந்த ஆண்டு போர்களைச் சந்தித்த நாடுகளான இரஷ்யா 70வது இடத்தையும், உக்ரைன் 92வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவோ, அவைகளுக்கும் வெகு கீழாக உள்ளது.

மகிழ்ச்சியின் பட்டியல் எப்படி தயாரிக்கப்படுகிறது

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது அதன் மாதிரி அளவு ஆகும். இவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில், பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

தொழிலைப் போலவே, மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம், விருப்பமான உணவை உண்ணும் சுதந்திரம், விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் போன்றவை தவிர, கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்தீர்களா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார் என்று நம்பப்படுகிறது. ஊழல் தொடர்பான கேள்வியும் இருக்கும். ஏனெனில், நாட்டில் ஊழல் இல்லாதது செழிப்பைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது. இது போன்ற பல கேள்விகளை கேட்டு, இந்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையில் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

மகிழ்ச்சிக்கான வழிகள்

வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதை விட வெளியே செல்வதால் சுற்றுச் சூழலில் இயல்பாகவே உள்ள இதமான காற்று, சந்தோசமாக இருக்கும் நபர்களின் சந்திப்பு என பல நல்ல விடயங்கள் நமக்கு கிடைக்கும்.

உடற்பயிற்சி மேற்கொள்வது, அந்த நாள் முழுதும் சக்தியும், உற்சாகமும் மிக்க நபராகச் செயற்படவும் நேர்மறையாக சிந்திக்கவும் உதவும்.

தேவைக்கு ஏற்ற உறக்கம் முக்கியம். நம்மில் பலர் அதிகமாக வேலை செய்து குறைவான நேரமே தூங்குவதால் அவர்களுக்கு அதிகபட்ச அழுத்தமும், எதிர்மறை சிந்தனையும் ஏற்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மனதை இலகுவாக வைத்துக் கொள்ளுங்கள். எதுவும் பாதிக்க விடாதீர்கள். மோசமான அனுபவங்களை மனதில் இருந்து விலக்கி வையுங்கள்.

மனதை திசை திருப்பும் பயிற்சிகளால் மகிழ்ச்சியை மனதிற்குள் கொண்டு வரப் பழகுங்கள். பிரச்னைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப் பயிற்சி எடுங்கள்.

கோபம் மனிதனுக்கு எதிரி. தைரியம் இல்லாதவர், தாழ்வு மனப்பான்மை கொண்டவர், தவறுகள் செய்பவர், மனோதிடம் அற்றவர்தான் தங்கள் குறைகளை மறைத்து தங்களை காத்துக் கொள்ளவே கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். ஆகவே கோபத்திலிருந்து விடுதலைப் பெறுங்கள். அன்பு, பாசம், நட்பு இவைகளுக்கு மட்டுமே தலை வணங்குங்கள்.

உங்கள் மனசாட்சி சொல்படி கேளுங்கள் மனசாட்சிக்கு பயந்து நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பேசும்போது அடுத்தவர் கண்களைப் பார்த்து பேச கற்றுக் கொள்ளுங்கள்.

தயவுசெய்து அலைபேசியை தேவையான விஷயத்துக்கு மட்டும் உபயோகியுங்கள்.

செலவைவிட சேமிப்பை அதிகமாக்குங்கள். நீங்கள் சந்திக்கும் நபர்களை எப்போதும் சிரித்த முகத்துடன் அணுகுங்கள். சின்ன புன்னகை எல்லாவற்றையும் மாற்றும். யார் என தெரியாத நபராக இருந்தாலும் கனிவுடன் உதவுங்கள். சின்ன உதவி கூட மகிழ்ச்சியை உருவாக்கும்.

வாழ்வின் போக்கிலேயே வரும் மகிழ்ச்சியை விடாமல் பிடித்தால் அது உன்னதமே.  

குழந்தைகளைப் பாருங்கள். எந்தக் கவலையும் இன்றி மகிழ்வுடன் அவர்கள் உலகத்தில் விளையாடுவார்கள். நாமும் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி குதூகலிக்கும்போது நம்மையறியாமல் நம் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து புது உற்சாகத்தை தரும். யாராலும் நமக்குள் மகிழ்ச்சியை விதைக்க முடியாது. நாம் மட்டுமே நம் உணர்வுகளுக்கு பொறுப்பாக முடியும்.

மகிழ்ச்சியாக இருப்பது என்பது மனிதனின் அடிப்படை உரிமை. மகிழ்ச்சியாக இருக்கும் மனிதன் அதிக ஆயுளைக் கொண்டுள்ளான் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

நாம் பிறந்த மண்னை, நாம் வாழும் நாட்டை மகிழ்ச்சியான நாடாக மாற்றி, மேலும் முன்னோக்கி நகர்த்திச் செல்வதில் அரசுக்கு எந்தளவுக்கு பங்கு இருக்கிறதோ, அதேயளவுக்கு தனிநபர் ஒவ்வொருவருக்கும் உண்டு.

மகிழ்ச்சியோடு வாழவும் பிறரை மகிழ்ச்சிப்படுத்தவும் உறுதியெடுப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2024, 08:43