தேடுதல்

தண்ணீர் தண்ணீர்  

தண்ணீர் தொடர்பான நோயால் உலகளவில் 1000 குழந்தைகள் இறக்கின்றனர்!

ஒவ்வொரு நாளும், 5 வயதுக்குட்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தண்ணீர் தொடர்பான நோய்கள் மற்றும் போதுமான சுகாதாரமின்மையால் இறக்கின்றனர் : UNICEF

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தண்ணீர் தொடர்பான நோய்கள் மற்றும் போதிய நலமின்மையால் இறக்கின்றனர் என்றும், ஆண்டுக்கு 14 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாகவும் அறிக்கையொன்றில் கூறியுள்ளது UNICEF நிறுவனம்.

மார்ச் 22, வெள்ளிக்கிழமை இன்று, உலகத் தண்ணீர் நாளைச் சிறப்பிக்கும் வேளையில் இவ்வாறு கூறியுள்ள அந்நிறுவனம், சுத்தமான தண்ணீருக்கான உலகளாவிய அணுகல் அடிப்படைத் தேவை மற்றும் மனித உரிமை, அனைத்து மக்களுக்கும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது நோய் மற்றும் இறப்புகளை, அதிலும் குறிப்பாக குழந்தைகளின் இறப்புகளைக் குறைக்க உதவும் என்றும் அவ்வறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ளது.

உலகளவில், ஏறத்தாழ 95 கோடியே 36 இலட்சம் குழந்தைகள் அதிக அளவு நீர் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறும் அவ்வறிக்கை,  இத்தாலியில், 2022 ஆம் ஆண்டில், 2,98,000 குழந்தைகள் அதிக அல்லது மிக அதிகமான நீர் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், உலகளவில், 24 கோடி குழந்தைகள் கடலோர வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் 33 கோடி குழந்தைகள் நதி வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் 4 பேரில் ஒருவருக்குப் பாதுகாப்பான முறையில் குடிநீர் கிடைப்பதில்லை என்றும், 5 பேரில் 2 பேருக்கு இன்னும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் இல்லை மற்றும் 4-இல் ஒருவருக்கு கைகழுவும் அடிப்படை தண்ணீர் வசதிகள் இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறது அவ்வறிக்கை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2024, 15:08