தேடுதல்

மொசாம்பிக் குழந்தைகள் மொசாம்பிக் குழந்தைகள்  

மொசாம்பிக்கில் 61,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளியேற்றம்!

Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு, மொசாம்பிக் நாட்டில் 2023-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2,59,676 குழந்தைகள் உட்பட 3,81,773 பேருக்குத் தனது மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த இரண்டு மாதங்களில், மொசாம்பிக்கின் Cabo Delgado பகுதியில் உள்ள மாநிலங்களில் 61,000-க்கும் அதிகமான குழந்தைகள் புதிய வன்முறையால் தங்கள் இல்லங்களிலிருந்து கட்டாயமாக வெளியேறவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இச்சூழலில், குழந்தைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ள இவ்வமைப்பு, Cabo Delgado-வில் உள்ள குழந்தைகளின் கல்வி மீது தொடுக்கப்பட்ட புதியதொரு வன்முறை இது என்றும், Nampula-வில் மேலும் 17 பள்ளிகள் உட்பட 6 மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு, ஏறக்குறைய  71,000 பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டிற்கான Save the Children அமைப்பின் இயக்குநர் Brechtje van Lith அவர்கள், தற்போது ஏழு வயதாகும் குழந்தைகள் முதல்முறையாக இந்த ஆண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டிய வேளை, தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேறிடங்களுக்குத் தப்பிச்செல்ல வேண்டிய அகோர நிலையில் உள்ளனர் என்றும், இத்தகையச் சூழலில் வளர்ந்துவரும் குழந்தைகளின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் போரில்லாத வாழ்க்கையைப் பெறுவதற்கான வாய்ப்பில்லாத நிலையே உள்ளது என்றும் கூறியுள்ளார். 

அந்நாட்டில் நிகழ்ந்து வரும் அண்மைய மோதல்கள் மற்றும் தாக்குதல்களின் பாதிப்புகள் கபோ டெல்கடோவில் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து, குழந்தைகள் நிம்மதியாக வாழவும், பள்ளிக்குத் திரும்பவும் உதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார் Lith.

Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு, கபோ டெல்கடோவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க பணியாற்றிவரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் 2023-ஆம் ஆண்டில் ஏறக்குறைய 2,59,676 குழந்தைகள் உட்பட 3,81,773  பேருக்குத் தனது மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2024, 14:33