தேடுதல்

சர்வதேச மகளீர் தினம் சர்வதேச மகளீர் தினம்  

நேர்காணல் – சர்வதேச பெண்கள் தினம்

2024 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் சிறப்பிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் ("inspire inclusion”) இன்ஸ்பயர் இன்க்லூஷன்"
நேர்காணல் - சர்வதேச பெண்கள் தினம். செல்வி. கிரேஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் - என்ற மகாகவி பாரதியாரின் வார்த்தைகளுக்கிணங்க இருபத்து ஓராம் நூற்றாண்டின் இணையில்லா ஆற்றலாக வலம் வருவது பெண்ணின் ஆற்றல். செய்யும் செயலில் நேர்மை, துணிவுடன் ஆற்றும் பணி, அளப்பரிய அறிவாற்றல் கொண்டு பெண்கள் பலர் வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர். தாங்கள் மட்டுமன்று தாங்கள் சார்ந்திருக்கும் துறையையும் தங்களது ஆற்றலால் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். 

2024 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் சிறப்பிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருள் ("inspire inclusion”) இன்ஸ்பயர் இன்க்லூஷன்", பெண்களை உள்ளடக்குதலை மதிப்பதையும் புரிந்துகொள்வதையும் மற்றவர்களில் நாம் ஊக்குவிக்கும்போது, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குகிறோம் என்பதே இவ்வாண்டிற்கான கருப்பொருள் உணர்த்துவதாகும். பெண்கள் உள்ளடக்கப்படும்போது ஒரு ஈடுபாடு, தொடர்பு, ஆற்றல் போன்றவற்றை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பெண்கள் செய்த சாதனைகள், சமூகத்தின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்பு போன்றவற்றை பாராட்டவும், பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்உரிமைகளுக்கான செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அங்கீகரிக்கவும், பெண் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் ஒரு நல்வாய்ப்பாக அமைகின்றது. பெண்களின் சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் சாதனைகள் போன்றவற்றைப் போற்றவும், ஆண் பெண் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் சமம் என்பதை எடுத்துரைக்கக் கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் சர்வதேச மகளிர் தினம் குறித்த கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர். செல்வி. கிரேஸ் ராஜ்ஸ்ரீ லட்சுமிநாராயணன். சென்னையைப் பிறந்தகமாகக் கொண்ட இவர் தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள மிசௌரி செயிண்ட் லூயிஸில் உள்ள MNC தகவல் தொழில் நுட்பத்துறை அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். மிசௌரி தமிழ் சங்கத்தின் நிர்வாகக்குழு இயக்குனர், கலை  நிகழ்ச்சிகளை  ஒருங்கிணைப்பவர் என பல்வேறு பணிகளை திறம்பட செய்துவரும் கிரேஸ் அவர்கள், அமெரிக்க தமிழ் வானொலியிலும் அறிவிப்புக்களை வழங்கி வரும் பணியினைச் செய்து வருகின்றார்.  சகோதரி அவர்களை சர்வதேச பெண்கள் தினம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

பயந்து கிடந்து முடங்கியது போதும், துணிந்து நின்றால் வெல்வோம் யாவும். நல்லது நினைத்து நல்லதை செய்வோம், அடிமை தனத்தை அடியோடு போக்கிடுவோம். அச்சமில்லை அச்சமில்லை என்றே கர்ஜனை செய்வோம். பெண் வேட்கையை அடியோடு போக்குவோம். பெண் விடுதலை பெற செய்திடுவோம். சாதி மதங்களை அடியோடு ஒழித்திடுவோம். பெண்ணின் திறமைகளை வெளிக்காட்டிடுவோம். புத்தம்புது செயல்கள் யாவும் செய்திடுவோம். புதிய மாற்றத்தால் புதுஉலகை படைத்திடுவோம். நான்கு திசைகளிலும்  பெண்ணியம் பேசிடுவோம். பாரதி வழியில் துணிந்து நடந்திடுவோம். உணர்விலும் நகர்விலும் பெண்களை மதித்திடுவோம். மதியைத் தாக்கும் துன்பத்தை வென்றிடுவோம் உலகம் போற்றுபவளாக தைரியமாக வாழ்ந்திடுவோம் பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருந்திடுவோம்.

அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில் அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம். உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், ஓது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுதலார்நங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம். விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம். என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கேற்ப சிறந்து வாழ பெண்மை கொண்ட நல்லுள்ளங்கள் அனைவருக்கும் சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2024, 09:24