தேடுதல்

ஹெய்ட்டி மக்கள் ஹெய்ட்டி மக்கள் 

கடினமானத் துன்பங்களை எதிர்கொள்ளும் ஹெயிட்டி மக்கள்

2023ஆம் ஆண்டின் இறுதிவரை, உள்நாட்டில் ஏறக்குறைய 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கையானது 362000 ஆக உயர்ந்து 14 தற்காலிக தங்குமிடங்களில் மக்கள் வாழ்கின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அரசியல் உறுதியற்ற தன்மையின் அதிகரிப்பு, தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் அண்மையில் நடந்த பாதுகாப்பற்ற சூழல் போன்றவை காரணமாக ஹெயிட்டி மக்கள்  கடினமான துன்பங்களை எதிர்கொள்கின்றனர் என்றும், நாட்டில் ஏப்ரல் 3 வரை அவசரகால நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ஹெயிட்டி காரித்தாஸ் தெரிவித்துள்ளது.

மார்ச் 16 சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள காரித்தாஸ் அமைப்பானது வன்முறையின் தீவிரத்தால் தலைநகர் மட்டுமன்று அதன் அருகில் இருக்கக்கூடிய பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன என்றும், வணிக நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் நலவாழ்வு அமைப்புக்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.

விமானச்சேவைகள், நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அறிக்கையில், 2023ஆம் ஆண்டின் இறுதிவரை, உள்நாட்டில் ஏறக்குறைய 13,000 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கையானது 362000 ஆக உயர்ந்து 14 தற்காலிக தங்குமிடங்களில் மக்கள் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் மனிதாபிமான நடவடிக்கைகள் குறைக்கப்படுதல், மற்றும் இடைநிறுத்தப்படுவதைக் கவனத்தில் கொண்டு ஹெய்ட்டி காரித்தாஸ் பணியாற்றி வருகின்றது என்றும், காரித்தாஸ் அலுவலகக் கட்டிடங்களில் இடம்பெயர்ந்த மக்களைத் தங்க வைக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

உணவுப்பற்றாக்குறை மற்றும் நலவாழ்வு நெருக்கடியினால் ஏற்படும் ஆயிரக்கணக்கான இறப்புக்களை தவிர்ப்பதற்கானத் திட்டத்தை உருவாக்க, மனிதாபிமான நிறுவனங்கள், அமைப்புக்கள், மிகவும் பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்களுடன் இணைந்து செயல்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 15:50