தேடுதல்

காலரா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை காலரா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை   (ANSA)

ஆப்ரிக்க நாடுகளைத் தாக்கிய மோசமான தொற்றுநோய்களில் ஒன்று காலரா!

குழந்தைகளின் கற்றல் தடையின்றி நிகழ வேண்டும் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது ஆப்ரிக்க நாடுகளுக்கான UNICEF நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2023-ஆம் ஆண்டு முதல், கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள 13 நாடுகள், தங்களைத் தாக்கிய மிக மோசமான காலரா தொற்றுநோய்களுடன் போராடி வருகின்றன என்றும், மிக அண்மையில் ஜிம்பாப்வே, சாம்பியா மற்றும் கொமோரோஸ் ஆகியவை இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளாகும் என்றும் கூறியுள்ளது அந்நாட்டிற்கான UNICEF நிறுவனம்.

மேலும் சில நாடுகளில், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 52 விழுக்காடு 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 40 விழுக்காடு இறப்புகளுக்கும் 30 விழுக்காடு இந்நோய்த்தொற்றால் பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

யுனிசெஃப் நிறுவனம் உடல்நலம், நீர் மற்றும் சுகாதாரம் மற்றும் காலரா சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவத் தயாரிப்புகளுக்கான அவசர உதவிகளை வழங்கியுள்ளது என்றும், 83 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தண்ணீர் மற்றும் உடல்நலத்திற்கான அத்தியாவசிய உதவிகளை அடைந்துள்ளனர் என்றும் உரைக்கிறது.

எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், சோமாலியா, தெற்கு சூடான், சாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் அதிக காலரா விகிதங்களைக் கொண்ட எட்டு முன்னுரிமை நாடுகளுக்கு 26 இலட்சம் அளவு காலரா தடுப்பூசி (OCV) விநியோகத்தை யுனிசெஃப் எளிதாக்கியது என்றும் தெரிவிக்கிறது அந்நிறுவனம்.

UNICEF நிறுவனத்தின் பணி 10 இலட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது என்றும், குறிப்பாக குழந்தைகளுக்கு காலராவைத் தடுப்பதற்கான உடல்நலம் சார்ந்த சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சரியான நேரத்தில் அவர்கள் மருத்துவ கவனிப்பைப் பெறவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றது என்றும் கூறியுள்ளது அந்நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2024, 14:52