தேடுதல்

கலவரத்தில் இறந்த குக்கி இன மக்களுக்கு அஞ்சலி! (கோப்புப்படம்) கலவரத்தில் இறந்த குக்கி இன மக்களுக்கு அஞ்சலி! (கோப்புப்படம்)  (AFP or licensors)

மணிப்பூரில் ஏற்பட்டுள்ள புதிய வன்முறையால் பதட்டம்!

மணிப்பூரின் துபல் மாவட்டத்தில் நான்கு முஸ்லீம் மெய்தி இனத்தினர் கொல்லப்பட்டனர். மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் ஆயுதமேந்திய குக்கி இனத்தவர் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். பல மாதங்களாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த சில மாதங்களாகப் பல்வேறு சமூகங்களுக்கிடையேயான மோதல்கள் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள புதிய வன்முறை மேலும் பதட்டத்தைத் தூண்டியுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தௌபால் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் நான்கு மெய்தி இன முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ள வேளை, உள்ளூர் அதிகாரிகள் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் (தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர்) மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளனர் என்றும் அச்செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

உள்ளூர் ஊடகங்கள் தந்துள்ள தரவுகளின்படி, அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள், உருமறைப்பு சீருடை அணிந்து, லிலோங் சிங்ஜாவ் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த உள்ளூர் மக்கள்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பலர் காயமடைந்தனர் மற்றும் சிலர் படுகாயமடைந்தனர் என்று அந்நிறுவனத்தின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்த வன்முறையை கடுமையாகக் கண்டித்துள்ள அம்மாநிலத்தின் முதலமைச்சர் N. Biren Singh, மக்களை அமைதி காக்குமாறும், குறிப்பாக லிலாங்கில் வாழும் மக்கள் அதிகமாக அமைதிகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2024, 13:03