தேடுதல்

பொங்கல் திருவிழா கொண்டாடும் கல்லூரி மாணவிகள் பொங்கல் திருவிழா கொண்டாடும் கல்லூரி மாணவிகள்  (AFP or licensors)

பல்சுவை - தமிழர் திருநாளாம் பொங்கல்

உழைக்கும் தமிழ் மக்கள், தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா பொங்கல் விழா.
பொங்கல் திருவிழா

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஏர் பிடித்து ஏற்றம் தந்து,

உடல் நீரை உரமாய் தந்து,

கண்ணெனப் பயிரைக் காத்து,

மண்ணில் உயிர்க் காக்கும்

உழவர்களின் உயர்வைப் போற்றும் நாள். இப்பொங்கல் நாள்

புத்தாடை உடுத்தி, புத்தரிசி ,புதுப்பானைப்

பொங்கலிட்டு, படைத்தவனுக்கு படையலிட்டு,

பூரித்து மகிழும் பொங்கல் திருநாள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக இவ்விழாக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால், ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். இத்தகைய சிறப்பு மிக்க தமிழர் திரு நாளாம் தைத்திங்கள் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா பற்றிய தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்சகோதரி விக்டோரியா. மரியின் ஊழியர் சபை அருள்சகோதரியான விக்டோரியா அவர்கள் தற்போது மேட்டூர் புனித மரியன்னை மகளீர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். சகோதரி அவர்களை பொங்கல் விழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றேன். நன்றி அருள்சகோதரி விக்டோரியா அவர்களெ உங்கள் தமிழ்ப்பணி சிறக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வரும் பொங்கல் விழா மிகவும் பிரபலமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான ஒரு விழாவாகும். இந்த பொங்கல் திருவிழாவை அறுவடைத் திருநாள், உழவர் திருநாள் என்றும் அழைப்பர். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறு பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளின்போது இனிப்புக்களை செய்தல், வீட்டின் பழைய பொருட்களை எரித்தல், புதுப்பானையில் பொங்கல் செய்தல் என பல செயல்களை செய்வார்கள். ஒட்டுமொத்த நாடும் அறுவடைக்கான புதிய பருவத்தை வெவ்வேறு வகைகளி சந்தோஷம் என்ற ஒரே கருத்துடன் வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் 4 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் கொண்டாடப்படுவது போகி பண்டிகை. இந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை நெருப்பில் இட்டு எரிப்பார்கள். இரண்டாம் நாள் கொண்டாடப்படும் பொங்கல் நாளில் புத்தாடை அணிந்து, புதிய பானையில் அறுவடை செய்த பச்சரிசி, வெல்லம், நெய், பால் கொண்டு சுவையாக பொங்கல் உணவு சமைத்து சாப்பிடுவார்கள். மூன்றாம் நாள் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கல். இந்நாளில் விவசாயத்திற்கு உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி அலங்கரித்து, பொங்கல் செய்து படைப்பார்கள். இந்நாளில் தான் ஜல்லிக்கட்டு என்னும் பிரபலமான வீர விளையாட்டை விளையாடுவர். நான்காம் நாள் காணும் பொங்கல். இந்நாளில் குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பார்கள்.

இத்தகைய பொங்கலின் சிறப்பு குறித்த தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் மாணவி ரா. அகல்யா. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிணி அறிவியல் துறை முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ரா அகல்யா அவர்களை பொங்கல் விழாக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.  

தெளிவான தமிழில் நம் சிந்தை குளிர தனது கருத்துக்களை வழங்கிய மாணவி அகல்யாவிற்கு நம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நாளில்

நம் மனமென்னும் நிலத்தை நல்லேர் கொண்டு உழுது, அன்பென்னும் நீர் பாய்ச்சி,

நல்லெண்ணமெனும் விதை தூவுவோம்.

வளரும் நாற்றாய் இடம் மாறுகையில் பற்றினை விடுத்து,

பாரினில் தடம் பதிப்போம்.

அன்பில் ஆழ வேரூன்றி தட்பவெப்பம் பெறுவோம்.

வழி மாறுகையில் வழிகாட்டல் உரம் பெறுவோம்.

கால்களில் உரம் பெற்று கிளைகளில் பலன் தருவோம்

ஒற்றை விதையில் ஓர் நூறு மணிகள் பெறும் வல்லமை

நம்மிடம் உண்டு என்ற நம்பிக்கையுடன் வளர்ந்திடுவோம்.

செங்கரும்பு மஞ்சள் பச்சரிசி பொங்கலோடு

உள்ளம் நிரம்ப இனிமை வழிந்தோட‌ உவகை மனம் கொண்டே வாழ்ந்திடுவோம்.

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நல்வாழ்த்துக்கள்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2024, 13:59