தேடுதல்

INDIA-POLITICS-UNREST INDIA-POLITICS-UNREST  (AFP or licensors)

இந்திய கிராமப்புரங்களில் பின்தங்கியுள்ள குழந்தைகள் கல்வி!

இந்தியாவுக்கான யுனெஸ்கோவின் 2020'ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கை, நாட்டிலேயே குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களில் இந்திய ஆசிரியர்கள் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக சுட்டிக்காட்டுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிராமப்புற இந்தியாவில் உள்ள 14 முதல் 18 வயதுடைய பதின்ம வயதினரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தொடக்கப் பள்ளியில் வழக்கமாகக் கற்பிக்கப்படும் எளிய மூன்று இலக்கப் பிரிவின் சிக்கலைத் தீர்க்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும்,  மேலும் நேரத்தை நிர்ணயிப்பது மற்றும் அடிப்படைக் கணிதம் படிப்பதில் அதிகம் சிரமப்படுகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்டு கல்வி நிலை அறிக்கையின் (ASER) அண்மைய ஆய்வின்படி பள்ளி செல்லும் இந்தியக் குழந்தைகள் தங்கள் பதின்ம வயது ஆண்டுகளில் உயர்நிலைக் கல்வியில் கூட வாசிப்பு மற்றும் எண் கணிதத்தில் தொடர்ந்து சிரமப்படுகிறார்கள் என்று அவ்வாய்வறிக்கைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது அச்செய்தி நிறுவனம்.

கல்வி உள்கட்டமைப்பு மற்றும் திறமையான ஆசிரியர்களுக்குக் குறைந்தளவே வாய்ப்புள்ள கிராமப்புறங்களால், மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் பெரும்பாலும் போராட்டமாக இருக்கின்றது என்று இதுகுறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் சில கல்வியாளர்கள்.

இந்தியாவில் 65 விழுக்காட்டு மக்கள் கிராமப்புறங்களில் வாழும் சூழலில், அங்குக் கல்வி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும், குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் பணிக்கு வராதது மற்றும் தரமற்ற கற்பித்தல் போன்ற பல பிரச்சனைகளால் கல்வி கற்பித்தல் பாதிக்கப்படுகின்றது என்றும் தங்கள் கவலைய வெளிப்படுத்தியுள்ளார் அக்கல்வியாளர்கள்.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகளின் அக்கறையின்மையால் பள்ளிக்கு வராதக் குழந்தைகளின்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், அதுமட்டுமன்றி, அதிகாரிகளால் கொடுக்கப்படும் தேர்தல் கண்காணிப்பு போன்ற ஆசிரியர் அல்லாத பணிகளும் ஆசிரியர்களைப் பள்ளிகளில் இருந்து விலக்கி வைக்கின்றன என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கான யுனெஸ்கோவின் 2020-ஆம் ஆண்டிற்கான கல்வி அறிக்கை, நாட்டிலேயே குறைந்த ஊதியம் பெறும் அரசு ஊழியர்களில் இந்திய ஆசிரியர்களின் நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டுகிறது. (ASIAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2024, 16:10