தேடுதல்

விவசாயத்தில் இணையதள பங்களிப்பு விவசாயத்தில் இணையதள பங்களிப்பு  (NIKHIL PATIL)

வாரம் ஓர் அலசல் – நன்மை தீமைகளை எதிர்கொள்ள

இன்றோ அறிவியலின் வளர்ச்சியைக் கண்டு, அது தரும் இணையதளத்தின் ஆக்கிரமிப்பு, அதாவது குழந்தைகளில் அது கொண்டிருக்கும் கோரப்பிடி குறித்து உண்மையிலேயே பயப்படுகிறோமா?.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அறிவியல் வளர்ச்சி வழியாகக் கிட்டிய இணையதளம் இன்று நமக்கு நன்மையைத் தருகிறதா அல்லது தீமையை வழங்குகிறதா என கேட்டால் நம் பதில் என்ன? முகநூலால் உள்ளார்ந்த நட்பு காணாமல்போனதும், வாட்சப்பால் சுற்றங்களின் நெருக்கம் விலகிப்போனதும், பிறந்த நாள் அட்டைகளின் இடத்தில் ஒருவரிச் செய்திகள் உணர்வின்றி இருப்பதும், அங்காடிகளின் இடத்தை அமேசான் ஆக்கிரமித்திருப்பதும், உடல் விளையாட்டுகளின் இடத்தில் வீடியோ கேம்கள் காணப்படுவதும், நாம் கண்கூடாகக் காண்பதுதான். அது போல், புத்தகம் இ-புக்காகி, கடிதம் இ-மெயிலாகி, நூலகம் கூகுளாகி, புகைப்படம் செல்பியாகி காலங்கள் கடந்துவிட்டன. ஒரு காலத்தில் குளக்கரைகள் குளியலறைகளுக்குள் வந்தபோது, நெல்வயல் கட்டிடமானபோது, குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களில் இடம் மாறியபோது, தோசையின் இடத்தில் பிட்ஸா வந்தபோது, பசும்பால் பாக்கெட்டானபோது, வெற்றிலை பீடாவானபோது வராத அச்சம் இப்போது வந்திருக்கிறது. ஆம், அறிவியல் முன்னேற்றம் நம் வருங்காலத் தலைமுறைக் குறித்த அச்சத்தைத் தந்துள்ளது. பொதுநலத்தின் இடத்தில் சுயநலமும், மனிதத்தின் இடத்தில் மதவெறியும், ஊடலின் இடத்தில் மணமுறிவும் ஆக்கிரமித்தபோது நம்மைக் குறித்து அஞ்சினோம், இன்றோ அறிவியலின் வளர்ச்சியைக் கண்டு, அது தரும் இணையதளத்தின் ஆக்கிரமிப்பு, அதாவது குழந்தைகளில் அது கொண்டிருக்கும் கோரப்பிடி குறித்து உண்மையிலேயே பயப்படுகிறோம். நாம் நிரந்தரம் என எண்ணியதெல்லாம் இன்று சீட்டுக்கட்டுகளாக சரிந்துவருவது நிதர்சனமாக இருக்கிறது. மாற்றம் என்பதே இன்று மாறாதது என்ற படிப்பினை வருகிறது. அறிவியல் முன்னேற்றம் குறித்து ஒன்றிணைந்து மகிழ்ச்சியடைந்த நாம், இன்று தனிப்பட்ட முறையில் ஒரு பெற்றோராக, தாத்தா பாட்டியாக பயப்படுகிறோம். ஏன்?. விரிந்து வளரவேண்டிய அறிவை இந்த அறிவியல் முன்னேற்றங்கள் தங்களுக்கான பாதையில் அழைத்துச் செல்வதால்.

இணையதள பாதுகாப்பு தினம், பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி, அதாவது அடுத்த vaaram செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்படுகிறது. மேலும், சிறந்த இணையதளத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுதல் என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள இந்த தினம், இளையோரின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுப்பதாக உள்ளது. இங்கு பெரியோரின் கடமைகள் குறித்து நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது தாத்தா பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வதுண்டு. சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு, அதே இரயிலில் திரும்புவர். சில ஆண்டுகளுக்குப் பிறகு அச்சிறுவன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வயது வந்ததும், தாத்தா பாட்டி ஊருக்கு தனியாகச் செல்ல ஆசைப்பட்டான். சிறிது யோசனைக்குப் பிறகு பெற்றோரும் ஒப்புக்கொண்டனர். இரயில் புறப்பட தயாரான நிமிடம் தந்தை அவனது காதுக்கருகில் மெதுவாக, “மகனே, வழியில் திடீரென்று பயமாக உணர்ந்தால், இது உனக்கானது” என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண மகிழ்ச்சியில் சிறுவன் அதை கவனிக்கக் கூட இல்லை. ஓடும் இரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக இரசிக்கத் தொடங்கினான். கொஞ்ச நேரம் தான். கசகசவென சப்தம், அந்நியர்கள் வருவதும் போவதுமான சூழல், ஒருவருக்கு ஒருவர் பலத்த உரையாடல் என்ற பின்னணியில், மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்கினான். அடுத்த ஊரில் அருகில் இருந்தவர் இறங்கிக் கொள்ள புதிதாக வந்தவரின் சோகமான முகமும், எதிரே வந்து அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும், அச்சிறுவனுக்கு ஒருவித அச்சத்தைத் தந்தது. இரயிலின் வேகத்தைப் போல இதயம் தடதடவென கொஞ்சம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி, மூலையில் பதுங்கிக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் எழுந்தது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது  தந்தை, சட்டைப் பையில் எதையோ வைத்தது நினைவுக்கு வந்தது. நடுங்கும் கையால் அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்தான். அதில், “பயப்படாதே மகனே, நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்” என்று எழுதி இருந்தது. கற்பனை செய்யமுடியாத நம்பிக்கையின் அலை அவன் முகத்தில் எழுந்தது. பயம் அகன்று நம்பிக்கையின் புதிய கதிர் புன்னகைத்தது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி, அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து அமர்ந்தான்.

அன்புள்ளங்களே, இணையதளம் என்ற வலைபின்னலுக்குள் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கும் இன்றைய தலைமுறைக்கு, இந்த கதை காட்டும் தந்தையைப்போல் நாம் எத்தகைய உத்தரவாதத்தை வழங்குகிறோம்?. அவர்களின் அச்சத்தைப் போக்கும் உறுதி, நம்பிக்கை நமக்கு உள்ளதா?. சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி.

இன்றைய நவீன உலகம் ஆன்லைன் என்று ஆன பிறகு, நம் பிள்ளைகளை அவற்றின் பயன்பாடு இல்லாமல் வளர்ப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, நம்மில் பெரும்பாலானோர் முன்பை விட அதிக நேரம் ஆன்லைனில் செலவிட்டு வருகிறோம். மொத்தத்தில் இன்றைய உலகில் இணையம் ஒரு உயிர் நாடியாக இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கொரோனா நோய்த் தொற்று உலகின் பல துறைகளிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்றன. சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கினர். ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் கல்வி சார்ந்த கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டாலும் இதனைப் பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிப்பது அவசியமானது. வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில், ஆன்லைன் பயன்பாட்டை எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. தம் பிள்ளைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவற்றில் கொட்டிக் கிடக்கும் நல்லவை மற்றும் தீயவைகளில் எவற்றைப் பார்ப்பதற்கும் அறிந்துகொள்வதற்கும் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், இதுபோன்ற சில விடயங்களைப் பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியமாக மாறியது.

ஏனெனில்,  அண்மை கணக்கெடுப்பின்படி, உலகில் மூன்றில் ஒரு குழந்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் மாட்டிக்கொள்கின்றன. அதேபோன்று, நான்கில் ஒரு குழந்தை அதனுடைய 12 வயதில் பாலியல் சார்ந்த ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் பார்ப்பதாக தெரியவருகிறோம். பெரும்பாலான பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக விரோதிகளால் மார்ஃபிங்  செய்யப்படுகின்றன. இன்றைய இளம் வயதினர் வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்ற பெயரில் நேரத்தை அதிகளவில் வீணாக்குவதோடு, இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை.

இணையம் இல்லாத உலகத்தைக் கற்பனைகூட செய்துப்பார்க்க முடியாது, அதே போன்றுதான் உலாவி இல்லாத இணையத்தையும் நினைத்துப் பார்க்கவே முடியாது, ஏனென்றால் இணையத்தை அணுகுவது, பொருட்களை வாங்குவது, பயணச்சீட்டு பதிவுச் செய்வது என இணையத்தில் எது நடந்தாலும் உலாவியின் வழியாகத்தான் செய்தாக வேண்டும். இன்றைய உலகில், மக்களை தொடர்புகொள்ளச் செய்வது முதல், மளிகைப் பொருட்களை வாங்குவது, கட்டணங்களைச் செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள் செய்வது என எல்லாமும் ஆன்லைனிலேயே நடப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். செலவு மிச்சம், நேரம் மிச்சம் என பல நன்மைகள் இதில் இருந்தாலும், உலாவி பாதுகாப்பு குறித்த அச்சம் உருவாகியுள்ளதையும் நாம் மறுக்க முடியாது.  பயன்படுத்துவோரின் ஆன்லைன் செயல்பாடுகளின் இரகசியத்தன்மை,  நேர்மை மற்றும் அணுகுநிலை ஆகியவற்றைச் சீர்குலைக்கக் கூடிய பல்வேறு அச்சுறுத்தல்களிலிருந்து இணைய உலாவியையும், அது இயங்கும் சாதனங்களையும் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்களை இணையத்தில் பெற்றோரே சந்தித்துவரும் வேளையில், நம் குழந்தைகள் எம்மாத்திரம்? இணையத்தை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்து பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டிய தேவை உள்ளது.

இணையம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்ட இன்றைய நவீன உலகில், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் ஆன்லைனில் நேரத்தை செலவிட வேண்டும். அதாவது, நம் குழந்தைகள் வீடியோ கேம்களை அதிக நேரம் விளையாட விரும்பினால், அவர்கள் விளையாடும்போது அவர்கள் அருகில் உட்கார்ந்து கவனித்துக் கொள்ளவேண்டியது அத்தியாவசத்திலும் அத்தியாவசியம். நம் பிள்ளைகள் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்தால், அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், எந்த மாதிரியான விடயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் ஒரு நண்பர் போல அடிக்கடி பேசுவது மிக முக்கியம்.

இன்றைய குழந்தைகள் பெரும்பாலும், தங்கள் பெற்றோரின் கைபேசிகளை பயன்படுத்துகின்றன. எனவே, பெற்றோர் தங்கள் செல்போனில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைத் தவறாமல் பின்பற்றுவது ஒரு முக்கியமான வழி. பெற்றோரும் தங்களுக்கெனவே சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அணுகுவதற்கான விதிகளில் ஒரு குடும்பமாக செயல்பட வேண்டும். நம் குழந்தைகளின் வயதைப் பொறுத்து, சம்பந்தமில்லாத நெருக்கமான படங்கள் போன்ற சில வகையான புகைப்படங்களைப் பகிர்வதால் ஏற்படும், கடுமையான விளைவுகள் பற்றி, இதில் சட்ட விளைவுகள் கூட இருக்கலாம்,  நாம் பேச வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, இரவு 8 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி பார்க்கக் கூடாது, அல்லது, படுக்கையறையில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பன போன்ற விதிகளை நமது வீட்டில் அமைத்து, அவற்றை நாமும் பின்பற்ற வேண்டும்.

நம் குழந்தைகள் புதிய ஆப் செயலியைப் பயன்படுத்தத் துவங்கும்போது,  அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். அது நமக்குத் தெரியாதது என்பதால் அல்ல, இது நம் குழந்தையுடன் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும், ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி உரையாடுவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக. மேலும், புதிய ஆப் பயன்பாட்டின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கூறுகள் குறித்தும் நாம் தனியே தெரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முடியும். ஏனெனில், ஆன்லைன் வகுப்புகளால் பள்ளிக்குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துவது அதிகரித்துள்ள நிலையில், வயதுக்கு மீறிய, தேவையற்ற விடயங்களை காண நேரிடும் அபாயங்களும் அதிகரித்துள்ளன என்பதை நினைவில் கொள்வோம்.

இதைத் தொடர்ந்து யாம் உரக்க உரைக்க விரும்புவது என்னவென்றால், இணையத்தின் நம்பகத்தன்மை குறித்து. பொய்ச் செய்திகளாலும், தவறான தகவல்களாலும் இணையத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. எத்தனை முறை சில நடிகர் நடிகைகளைக் குறித்து மரணச் செய்திகளை நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம். அதன் பின் அந்த நடிகர் நடிகையின் மறுப்புச் செய்திகள். இதனால் ஒரு மரணச் செய்தி வந்துவிட்டால் அதனை பல்வேறு ஊடகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. காயப்படுத்தி அதில் இன்பம் காணும் ஒரு சிலரின் கொடூர மனப்பான்மையால் இணையத்தின் நம்பகத்தன்மையே கேள்விக் குறியாகிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் உண்மை எது, பொய் எது என நாம் பகுத்தறிய வேண்டியிருக்கிறது. உண்மையை மட்டுமே பகிர்வதில் தனிநபர்களுக்கு உள்ள பொறுப்பு இங்கு வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. தகவல்கள் நம்பகமானதாக, அண்மையானதாக, தகவல் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்.

வைரஸ்களை புகுத்தி கணனிகளை இணையம் வழியாக முடக்குவோருக்கும்,  அதிகாரப்பூர்வமான இணையதளம் அல்லது நிறுவனம் போன்று ஏமாற்றித் தகவல்களைத் திருட முயல்வோருக்கும் அரசு சரியான தண்டனை வழங்கவேண்டும். இது போல், நமக்குத் தெரியாமலேயே நம் ஒப்புதல் இல்லாமலேயே நிகழும் பதிவிறக்கங்கள் குறித்து நாம்தான் கவனமாகச் செயல்படவேண்டும்.

மேலும், ஆன்லைன் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து கவனமாக செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. கடவுச்சொல், வங்கி குறியீட்டு எண் அட்டை விவரங்கள் போன்றவை திருடப்படும் அபாயம் அதிகம் அதிகமாகவே உள்ளது.

இப்போது சொல்லுங்கள், அறிவியல் வளர்ச்சி தந்த இணையதளம் நமக்கு நன்மையா? தீமையா?. எதையும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும், சுயநலமின்றியும் கட்டுப்பாடுடனும் செயல்பபடுத்தினால், பயன்படுத்தினால் எல்லாம் நன்மையே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 January 2024, 13:14