தேடுதல்

மலையின் அழகு மலையின் அழகு  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - மலை வளத்தைக் காப்போம்

கல்லாய் இருக்கும் மலைக்குள் ஈரம் இருப்பதை மரங்களும், வழிந்தோடும் நதிகளும் சொல்லும்போது மெய் சிலிர்க்கின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, கடந்தவாரம் நாம் COP-28 என்ற காலநிலை மாற்றம் குறித்த துபாய் கருத்தரங்கு பற்றி வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியில் செவிமடுத்தோம். இதே கருத்தரங்கு நவம்பர் 30 ஆம் தேதி துவங்கி இச்செவ்வாயன்று, அதாவது டிசம்பர் 12ஆம் தேதி நிறைவுறுகின்றது. இத்தகைய பின்னணியில் டிசம்பர் 11ஆம் தேதியை உலக மலைகள் தினமாகச் சிறப்பித்தோம். மலைகளுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம், அதன் பயன்கள் என்ன என நாம் அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி வழி சிறிது முயல்வோம்.

மண்ணின் மணிமுடியாய் தோன்றும் மலைகளைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கின்றது. பனியால் நனைந்த அதன் தலையை மேகம் வந்து துவட்டும்போது பொறாமையாய் இருக்கின்றது. இறைவன் தோற்றம் தந்த இடமாக வரலாறும், வதியும் இடமாக நிகழ்காலமும் காட்டும்போது ஏறிச் செல்ல மனம் துடிக்கிறது. கல்லாய் இருக்கும் மலைக்குள் ஈரம் இருப்பதை மரங்களும், வழிந்தோடும் நதிகளும் சொல்லும்போது மெய் சிலிர்க்கின்றது. தென்றலின் தாலாட்டில் இயற்கையின் அமைதியை மலைகளின் மடியில் இரசிக்கும்போது ஆயிரம் கவிதைகள் பிறக்கின்றன. ஆயிரம் கதைகள் கூறி மனதை கொள்ளைகொள்ளும் சக்தியை மலைகளுக்கு யார் தந்தது?, புத்துணர்ச்சி எங்கிருந்து வருகிறது?. ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் இந்த உயர்ந்த மனங்களை மலைகள் என அழைப்பதற்கு மனம் கூசுகிறது. பூமியின் நீர் களஞ்சியமான இதனை வேறு என்னச் சொல்லி அழைப்பது? நித்தமும் வளம் தந்து இதமளிக்கும் மலையை மலையன்னை என்பதே பொருத்தமாகும்.

மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மலையின் பல்லுயிரியலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், 2002ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11ஆம் நாளை உலக மலைகள் நாளாக அறிவித்து, 2003ஆம் ஆண்டிலிருந்து சிறப்பித்துவருகிறது. இதனை, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் முன்னின்று நடத்தி வருகின்றது. இவ்வாண்டிற்கான இக்கொண்டாட்டத்தின் தலைப்பாக ‘மலையின் சூழலமைப்பை மீட்டெடுத்தல்’ என்பது எடுக்கப்பட்டுள்ளது. 

 உலக மலைகள் தினத்தை நாம் உலகம் முழுவதும் சிறப்பிப்பது, நம் உடன்வாழ் மக்களுக்கும் நம் வருங்காலத் தலைமுறைக்கும் நம் வாழ்வில் மலைகளின் பங்களிப்பை உணர்த்துவதற்கே. அதாவது, சுத்தமான நீரை வழங்குவதற்கும், சுத்தமான ஆற்றலைத் தருவதற்கும், உணவை தர மட்டுமல்ல, மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கிற்கும்  மலைகள் சிறப்புப் பங்காற்றுகின்றன. மலைகள் என்பவை இயற்கை நமக்களித்த முத்துக் குவியல் என்னும் புதையல். உலகின் 15 விழுக்காட்டு மக்கள் இந்த மலைகளைத்தான் தங்கள் உறைவிடமாகக் கொண்டுள்ளனர். உலக மனித குலத்தின் தண்ணீர் தேவைகளுள் 50 விழுக்காட்டை மலைகள்தான் நிறைவுச் செய்கின்றன. இதன் வழியாகத்தான் விவசாயம், சுத்தமான ஆற்றல், அதாவது மின்சக்தி போன்றவையும், மூலிகை மருந்துக்களும் ஏனைய மருந்துக்களும் கிட்டுகின்றன. உலகின் மிக முக்கியமான உணவுப் பொருட்களில் சில, மலைகளில் வளரும் காட்டுச் செடிகளின் மூலமாகவே கிடைக்கின்றன. உதாரணமாக, மெக்சிகோவின் மேட்டுநிலப் பகுதிகளில் சோளமும், பெரு நாட்டின் ஆண்டிஸில் உருளைக் கிழங்கும் தக்காளியும், கவ்காசுஸில் கோதுமையும் கிடைக்கின்றன.

உலக நிலப்பரப்பில், 27 விழுக்காடு மலைகளே உள்ளன. தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என அனைத்தும் நமக்கு கிடைக்க மலைகள் மற்றும் அதில் உள்ள வனப்பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயத்திற்கு மழை எப்படி முக்கியமானதோ, அதனைப் போன்றே மழைக்கு, மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலைகளில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படுவதையும், கற்களுக்காக மலைகள் வெட்டி எடுக்கப்படுவதையும் தவிர்ப்பதே, எதிர்வரும் தலைமுறையினரின் நலவாழ்வுக்கு செய்யும் பேருதவியாகும். சங்கத் தமிழ் நூல்கள் எங்கும் மலையைப் போற்றிய பாடல்கள் பரவிக்கிடக்கின்றன. குறிஞ்சியைப் பாடி மலைவளம் போற்றினர் பழந் தமிழர்.

உயர்ந்த மலைகள்

உலகில் மிக உயர்ந்த மலைகள் என்று பார்த்தோமானால், முதலில் எவரெஸ்ட் மலை சிகரம். கடல் மட்டத்திலிருந்து 8,846 மீட்டர் உயரத்தில், இது உலகின் மிக உயரமான இமயமலையின் உச்சியில் அமைந்துள்ளது.

K2 மலைகள். கடல் மட்டத்திலிருந்து 8611 மீட்டர் உயரத்தில், ஏறுவதற்கு மிகவும் கடினமான மலைகளில் ஒன்று. இது சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைந்துள்ளது.

கல்கரி காடு. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ள இது 8598 மீட்டர் உயரம் கொண்டது.

6,962 மீட்டர் உயரத்தில், அர்ஜென்டினாவின் ஆண்டிஸில் உள்ள மெண்டோசா மாகாணத்தில் அமைந்துள்ள அகோன்காகுவா, அமெரிக்காவின் மிக உயரமான சிகரமாகும்.

சிலே மற்றும் அர்ஜென்டினா இடையேயான எல்லையில் உள்ள ஆண்டிஸின் ஒரு பகுதியாக உள்ள ஓஜோஸ் டெல் சலாடோ, 6891.3 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எரிமலை ஆகும்.

அடுத்து, அட்லஸ் மலைகள் வட ஆபிரிக்காவில் அமைந்துள்ளன. சில தனித்துவமான விடயங்களுக்காக அறியப்படுகின்றன. இந்த விடயங்களில் கரடுமுரடான நிலப்பரப்பு, பாறை சரிவுகள் மற்றும் 4167 மீட்டர் உயரம் ஆகியவை அடங்கும்.

அட்லஸ் மலைகள் என்று அழைக்கப்படும் மலைத்தொடர் மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகளில் 2.400 கிலோமீட்டர் தூரம் வரை நீண்டுள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான சிகரம் துப்கல். இது கடல் மட்டத்திலிருந்து 4.167 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இந்திய நாட்டின் அரணாக இமயமலை விளங்குகின்ற அதேவேளை, இமயத்தைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள்  மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. பண்பாட்டுத் தொன்மையை இன்றும் தன்னகத்தே வைத்து பிரமிக்க வைக்கும் நீலகிரி, நமது பண்பாட்டை பறைசாற்றும் குறிஞ்சியைத் தன்னகத்தேக் கொண்டது.

நம்முடைய மிகப் பெரிய ஆறுகளுக்கும் நீர்த்தேக்கங்களுக்கும் மலைகளே ஊற்றுமூலமாக விளங்குகின்றன. வட அமெரிக்காவில் பாயும் பெரிய ஆறான கொலராதோ ஆறும் ரியோ கிரேன்டி ஆறும் ராக்கி மலைகளிலிருந்துதான் தண்ணீரைப் பெறுகின்றன. உலக மக்கள்தொகையில் பாதிப் பேர் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இமாலயம்-காரகோரம்-பாமீர்-திபெத் பகுதிகளில் இருக்கும் பெரிய மலைத் தொடர்களில் பெய்யும் மழையைச் சார்ந்தே வாழ்கின்றனர். பருவமழை காலங்களில் வீசும் பலத்த காற்றைத் தடுத்து நிறுத்தும் அரணாகவும் மலைகள் உள்ளன. இந்த மலைகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயற்கை வளங்களை வாரி வழங்கும் களஞ்சியங்களாகவே பெரும்பாலும் மலைகள் கருதப்படுகின்றன. ஆனால் அங்கு வாழ்கிற மக்களுக்கும் அங்குள்ள சூழலியல் அமைப்புகளுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படுவது இல்லை என்பதே உண்மை.

மலை வாழிடத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இதனால் மண்அரிப்பு ஏற்பட்டு உயிரினங்களின் வாழிடம் கேள்விக் குறியாகி உள்ளது. மலை வாழிடம் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்போது வாகனங்கள், வீசியெறியும் குப்பைகள் ஆகியவற்றால் மாசுபாடு உருவாகிறது. இம்மாசுபாடு மலை வாழிடத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. மலைகளில் உள்ள கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மனிதனால் சுரண்டப்படும் போது அவை பெரும் பாதிப்பினை மலை வாழிடத்தில் ஏற்படுத்துகின்றது.

மலை அழிவுற காரணம்

விவசாய முறையின் மாற்றம், செயற்கை முறையின் தாக்கம், பழமை முறையை கடைபிடிக்காமை, இயற்கை முறையை பின் தொடராமை, தாவர அழிப்பு,  மரம் வெட்டுதல், வேட்டையாடுதல் ஆகியவை மலைவாழ் உயிரினங்களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது, பனிப்பாறை உருகுதல், கடல் மட்டம் உயர்தல் போன்றவையும் அழிவுக்குக் காரணமாக உள்ளன. மரங்களை வெட்டுவதன் காரணமாக கார்பன் - டை - ஆக்சைடு அளவு வளி மண்டலத்தில் அதிகரித்து பல பிரச்சனைகளை   உண்டாக்குகிறது. உலகின் உணவுத் தேவையில் 80 விழுக்காட்டை வழங்கிவரும் 20 தாவர இனங்களில் 6 இனங்கள் மலைகளில் உருவானவை என்பதை மனதில் கொள்வோம். ஆனால் இன்றோ, மலைகளுக்கேயுரிய உயிரினங்களில் 84 விழுக்காட்டை அழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளோம். உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், நீலகிரி மாவட்டத்தில் மலை மற்றும் வனப்பகுதிகளை அழித்து, சொகுசு விடுதி, பங்களா என கட்டடங்கள் பெருகி வருகின்றன. இதன் எதிரொலியாக பருவ மழை குறித்த நேரத்தில் பெய்யாமல் போவதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.

ஆதி மனிதன் மலைகளில் வாழ்ந்தான். மலை மீது வாழ்ந்த மனிதனின் அறிவும் பரந்த மனமும் எப்படிப்பட்டதென்று எடுத்துரைத்து நிற்கிறது பறம்பு நாட்டு பாரியின் வரலாறு.

மலைப் பகுதியில் உள்ள மரங்கள்தான் மழைப் பொழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில், வன உயிரினங்கள் வாழும் சூழல் மண்டலமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. மேலும் தமிழகத்தின் உயர்ந்த சிகரமாக அழைக்கப்படுவது தொட்டபெட்டா மலை சிகரம். நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்கள் மலைகளை புனித தலங்களாக பூஜித்து வந்துள்ளனர். குறிப்பாக, மல்லேஸ்வரன் முடி, தோடர்களின் புனித சிகரம், ரங்கசாமி முகடு, இருளர்களின் புனிதமான மலையாக உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் மழை பெய்தால் தான் சமவெளி மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், நாமக்கல், பவானிசாகர், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நீர் பாசனம் செய்ய முடியும். இதன் மூலம் பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இன்னும் சொல்லப் போனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்குகூட இங்கிருந்து நீர் சென்றடைகிறது. இங்கு காணக்கூடிய ஆர்கிட் மலர்கள், நீலகிரிதார் என்றழைக்கப்படும் வரையாடுகள் மிகவும் அபூர்வமானவை.

எப்படி மலைகளின் சூழலியலைக் காப்பது?

மனிதனில் மாற்றம் உருவாக வேண்டும். அதாவது மனிதன் தன் பேராசையை விட்டொழிப்பதன் வழியாகவே நன்மை பெருக வழியுண்டு. இயற்கையை, இயற்கையாக நேசிக்க வேண்டும், வளங்களை யாசிக்க வேண்டுமேயொழிய பொன்முட்டையிடும் அந்த வாத்தை  பேராசையால் தனதாக்க யோசிக்கக் கூடாது. நிலங்களை அவற்றின் அமைப்பு, காலநிலைக்கேற்ப  வகைப்படுத்தி இயற்கையை வணங்கினான்  தமிழன். குறிஞ்சியைக் கோயிலாக்கி கோலோச்சியக் காலத்தில் மலைகளை புனித இடமாகப் போற்றினான். தற்போதைய நிலையோ கவலை தருவதாக உள்ளது. மலைப்பகுதிகளில் அதிகமான தங்கும் விடுதிகள், பங்களாக்கள், கேளிக்கை அரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, காலநிலை மாற்றமும், மலைகள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையை தனதாக்க எண்ணும் மனிதன் அவற்றை இரசிக்கவும், நேசிக்கவும் செய்வதை விடுத்து, தனக்குரியதாக மாற்றிக் கொள்ள நினைத்ததன் விளைவே மலைகளின் அழிவு. புனிதமாகக் கருதிய உயர்ந்த இடத்தை வணங்கி வந்த நிலைமாறி, அப்பகுதிகளை தங்கள் பொழுதைக் கழிக்கும் வாழிடமாக மாற்ற நினைத்ததன் விளைவாகவே, வெப்பமயமாதலும், இவ்வெப்பத்தால் காடுகள் அழிந்து அதன் வழி மண்ணும் சரிந்து உயர்ந்த நிலப்பகுதி குறைந்து குன்றாக மாறியதும் உண்மை.

மலைச் சரிவுகளில் உள்ள மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மலை வளத்தைக் காப்போம். வருங்கால சந்ததியினருக்கு அதனை நம் கொடையாக வழங்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2023, 14:43