தேடுதல்

 Água பகுதி சிறார் Água பகுதி சிறார் 

குழந்தைகளுக்கு ஆபத்தான இடமாக காட்சியளிக்கும் காசா பகுதி

ஏறக்குறைய 10 இலட்சம் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

குழந்தைகளாக இருப்பதற்கு உலகின் மிக ஆபத்தான இடமாக காசா பகுதி இருக்கின்றது என்றும், நாளொன்றிற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் மற்றும் காயமடைகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார் யுனிசெஃப்  இயக்குனர் அதேலே கோடர்.

டிசம்பர் 9 சனிக்கிழமை போர் மற்றும் மோதலினால் பாதிக்கப்படுகின்ற குழந்தைகள் பற்றி அறிக்கை வெளியிட்டபோது இவ்வாறு கூறியுள்ளார் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவுக்கான யுனிசெஃப் மண்டல இயக்குனர் அதேலே கோடர்.

ஒன்றாக விளையாடிய, மற்றும் பள்ளிக்களுக்குச் சென்று கொண்டிருந்த குழந்தைகளின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் மாறிவிட்டன என்று எடுத்துரைத்துள்ள கோடர் அவர்கள், குழந்தைகளின் அவ்விடங்கள் இடிபாடுகளின் குவியல்களாக, உயிரற்றவைகளாகக் காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெஃப் மற்றும் பிற உதவிக்குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளின் மனிதாபிமான உதவிகளுக்காக கடந்த வாரங்களில் எச்சரிக்கை எழுப்பி வருவதாகவும், அங்குள்ள குழந்தைகள் கை, கால் மற்றும் உடம்பில் தீக்காயங்களுடனும், அவர்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் அதிர்ச்சியுடனும் வாழ்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார் அதேலே.

ஏறக்குறைய 10 இலட்சம் குழந்தைகள் தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், சிறிய மற்றும் நெரிசலான பகுதிகளுக்குத் தள்ளப்பட்டு, நீர், உணவு மற்றும் பாதுகாப்பு இன்றி, சுவாச நோய்த்தொற்றுகள், நீரிழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, நீரினால் பரவும் நோய்கள் போன்றவற்றினால் பெரும் ஆபத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேலே

உடனடியான மற்றும் நீடித்த மனிதாபிமான போர்நிறுத்தம் குழந்தைகள் கொல்லப்படுதல், காயப்படுத்தப்படுதல் போன்றவற்றை முடிவுக்குக் கொண்டு வருதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், உயிர்காக்கும் உதவியை அவசரமாக வழங்குதல் போன்றவற்றிற்கான ஒரே வழி என்றும் எடுத்துரைத்தார் அதேலே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2023, 11:55