தேடுதல்

காசாவில்  குழந்தைகள் காசாவில் குழந்தைகள் 

மோதல்களில் குழந்தைகள் தங்கள் உயிரையே விலையாக கொடுக்கிறார்கள்

உலக குழந்தைகள் தினத்தன்று, காசா பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகளின் காயங்கள் மற்றும் இறப்பு, மிகவும் மறக்க முடியா வருத்தத்திற்குரியது - ஜேம்ஸ் டென்செலோ.

திமினா செலின் இராஜேந்திரன் - வத்திக்கான்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் குழந்தைகள் தங்கள் உயிரையே விலையாக கொடுத்திருக்கிறார்கள், மேலும் உயிர் பிழைத்தவர்கள் பல ஆண்டுகளாக வன்முறையின் வடுக்களை சுமந்து செல்வார்கள் என்பதை வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் எடுத்துக்காட்டியிருக்கிறார், Save the Children  அமைப்பின் மோதல் மற்றும் மனிதாபிமான கொள்கை மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கான பிரிவின் தலைவரான ஜேம்ஸ் டென்ஸ்லோ.

காசாவில் உள்ள பத்து இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளின் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் ஒரு பிரமிடு போன்றது, இப்பிரமிடின் மேற்பகுதி, காஸாவின் கலவரத்தில் இடிபாடுகளுக்கு அடியில் குறைந்தது 5,000 குழந்தைகள் கொல்லப்பட்டது, அல்லது காணாமல் போனது என, தங்கள் உயிரை இழந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கீழே தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு, குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு முற்றிலும் பொருந்தாத தங்குமிடங்களில், இடம்பெயர்ந்து தண்ணீர், உணவு மற்றும் பாதுகாப்பு வசதியின்றி அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களை குறிப்பதாகவும், அவர்களுக்கு கீழே போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த குழந்தைகளையும் குறிப்பதாகவும்,  மேலும், வாழ்வில் முன்னோக்கி செல்லும்போது இந்த மோதலின் வடுக்கள் மற்றும் மனரீதியான பாதிப்புகளை அவர்களுடன் சுமந்து செல்வார்கள் என்றும் ஜேம்ஸ் டென்ஸ்லோ கவலையுடன் விவரித்துள்ளார்.

போரிடும் தரப்புகளின் முன்னுரிமை இந்த குழந்தைகளின் உரிமைக்காக இல்லை என்பது தெளிவாகிறது என்று கூறியதுடன்,  இந்த சூழ்நிலையில் இம்மக்களுக்கு உதவ என்ன செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போதைய தேவையுடன் ஒப்பிடும்போது இப்போது செய்யப்படுவது மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் டென்செலோ.

காசாவில் உதவிப் பணியாளர்களாக இருப்பது மிகவும் ஆபத்தானது, மேலும் ஐ.நா. தனது குழுவில் உள்ள 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இழந்துள்ளது எனவும், காசாவில் உள்ள தங்கள் குழுக்கள் அவர்கள் விரும்பியபடி செயல்பட முடியவில்லை, ஏனென்றால் இவர்களில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், மேலும், அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பைக் கவனிப்பதில் முன்னுரிமை அளிக்கிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

தண்ணீர், எரிபொருள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் உதவி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது எனவும், கனமழையுடன் காசாவில் குளிர்காலம் நெருங்கி வருவதால், வாழ்க்கை நிலை மேலும் கடினமாகியுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஷிப்பாவின் மத்திய மருத்துவமனையில் ஏராளமான குறைமாதக் குழந்தைகள் பாதுகாப்பிற்காக எகிப்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற டென்செலோ, இப்பச்சிளங் குழந்தைகள் உயிர் பிழைத்து இருப்பினும், இந்த வாய்ப்பு போரின் துவக்கத்தில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் எட்டவில்லை என்பது குறித்து நாம் அனைவரும் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

குடும்பம் மற்றும் பராமரிப்பாளர்களிடமிருந்து குழந்தைகளை தனிமைப்படுத்தாமலும்,  பிரிக்காமலும்  இருப்பதை உறுதி செய்வதே தங்களது அமைப்பு மேற்கொள்ளும் பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட டென்ஸ்லோ, வன்முறையின் காரணமாக அதை செய்ய இயலவில்லையென்றும்,   குழந்தைகளைக் கடத்துவது ஒரு கடுமையான அத்துமீறல் என்றும், கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளின் விடுதலைக்கான கோரிக்கையை கருத்தில் கொண்டு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2023, 15:44