தேடுதல்

வீடற்ற  சிறார்  kara சலேசிய சபை இல்லத்தில்  வீடற்ற சிறார் kara சலேசிய சபை இல்லத்தில்  

வன்முறை மற்றும் போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள்

வறுமை, சமத்துவமின்மை, நலவாழ்வின் அவசரநிலைகள், உலகளாவிய காலநிலை நெருக்கடி, சுற்றுச்சூழல் மாற்றம், போர், மோதல் ஆகியவை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அதிகமாகப் பாதிக்கின்றன

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகளவில் 5 இல் ஒரு குழந்தை போர் மற்றும் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் வாழ்கின்றது என்றும், பல குழந்தைகள் வன்முறையினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும், தப்பியோடியும், இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டு துன்புறுகின்றனர் என்றும் அறிவித்துள்ளது யுனிசெஃப் அமைப்பு.

நவம்பர் 20 திங்கள் கிழமை உலகளாவிய குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் நாளை சிறப்பிக்கும் வேளையில், பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றிய தரவு எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது யுனிசெப்ஃ என்னும் குழந்தைகள நல பன்னாட்டு அமைப்பு.

பாலியல் வன்முறை, போர்க்குழுக்கள் அல்லது ஆயுதப்படைகளில் கட்டாய ஆள்சேர்ப்பு, போன்றவற்றால் குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் தங்களது நண்பர்களையும் குடும்பங்களையும் இழக்கின்றனர் என்று எடுத்துரைத்துள்ள யுனிசெஃப் அமைப்பானது, நலவாழ்வு கல்வி அடிப்படை தேவைகள் என அனைத்தையும் குழந்தைகள் இழக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2005 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் போர் மற்றும் மோதல் பகுதிகளில் 3,15,000 க்கும் அதிகமான குழந்தை உரிமை மீறல் வழக்குகளைக் கண்டறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை உறுதி செய்துள்ள வேளையில், இதுபோல் எண்ணிக்கையில் குறிப்பிடப்படாத ஏராளமான வழக்குகள் வெளியில் அறியப்படாமல் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

வறுமை, சமத்துவமின்மை, நலவாழ்வின் அவசரநிலைகள், உலகளாவிய காலநிலை நெருக்கடி, சுற்றுச்சூழல் மாற்றம், போர், மோதல் ஆகியவை குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரை அதிகமாகப் பாதிக்கின்றன என்றும் எடுத்துரைத்துள்ளது யுனிசெஃப்.

தற்போதைய காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனை இக்கால மற்றும் எதிர்கால குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், உலகளவில், தற்போது 100 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மிக அதிக ஆபத்தில் உள்ள நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாம் வாழும் பூமிக் கோள் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், உலகில் உள்ள குழந்தைகளில் பாதி பேர் அதிகமான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும், அவர்களில் சிலர் தங்கள் வீடுகள் மற்றும் பள்ளிகளை புயல்களால் இழக்க நேரிடலாம் என்றும் எச்சரித்துள்ளது.

அதிக வறட்சியின் காரணமாக பயிர்கள் காய்ந்துவிடுவதால் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, காற்று மாசுபாட்டினால் ஏற்படும் வெப்ப அலைகள், மற்றும் நிமோனியாவால் அவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும்  தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2023, 11:28