தேடுதல்

காசாவின் குழந்தைகள் காசாவின் குழந்தைகள்   (AFP or licensors)

காசாவில் நிகழ்ந்துவரும் போரால் துயருறும் குழந்தைகள்!

உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்தை அமல்படுத்தவும், கடத்தப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக விடுவிக்கவும் அழைப்புவிடுகிறேன் : Catherine Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

போரால் சூழப்பட்டுள்ள காசா பகுதியில் உள்ள 10 இலட்சம் குழந்தைகள் தஞ்சம் அடைவதற்கு எங்கும் பாதுகாப்பான இடம் இல்லை என்றும், காசாவில் 4,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 9,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளது யுனிசெப் நிறுவனம்.

இதுபற்றி கூறியுள்ள UNICEF நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Catherine Russell அவர்கள், குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் UNICEF பணியாளர்களை சந்திப்பதற்காக தான் காசா பகுதிக்குச் சென்றதாகவும், அங்கே, தான் பார்த்தது மற்றும் கேட்டது யாவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள உணர்வைத் தந்ததாகவும், அவர்கள் மீண்டும் மீண்டும் எறிகணை தாக்குதல்கள், உயிரிழப்புகள் மற்றும் இடம்பெயர்வுகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினர், கொலைகள், உடல் உறுப்புகளை சிதைத்தல், கடத்தல், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை மறுத்தல் உட்பட குழந்தைகளுக்கு எதிராகக் கடுமையான மனித உரிமை மீறல்களை செய்கின்றனர் என்றும், இவை அனைத்தையும் யுனிசெப் நிறுவனம் கண்டிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் Russell.

உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்தை அமல்படுத்தவும், கடத்தப்பட்ட மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக விடுவிக்கவும், மனிதாபிமான பணியாளர்கள் பாதுகாப்பான, தொடர்ச்சியான மற்றும் தடையின்றி அனைத்து உயிர்காக்கும் பணிகள் மற்றும் உதவிகளுடன் தேவைப்படுபவர்களை அணுகுவதை உறுதிசெய்யவும் இருதரப்பினருக்கும் தான் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார் Russell.

குழந்தைகளின் பாதுகாப்பிற்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவே தான் இங்கு இருப்பதாகவும், அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின்படி, குழந்தைகள் பாதுகாக்கப்படுவதையும், பராமரிக்கப்படுவதையும் உறுதிசெய்யுமாறு அனைத்துத் தரப்பினரையும் மீண்டும் ஒருமுறை தான் வலியுறுத்திக்கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ள Russell அவர்கள், மோதலில் ஈடுபடும் தரப்பினரால் மட்டுமே இந்தப் பயங்கரவாதச் செயல்களை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

கிடைத்த தகவல்களின்படி, காசாவில் 4,600-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், பல குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டு இருப்பதாக நம்பப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ள  யுனிசெப் நிறுவனம், மக்கள் வாழும் பகுதிகளில் வெடிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தியதால்தான் இந்தச் சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், மின்சாரம் மற்றும் மருத்துவப் பொருட்கள் தீர்ந்துவிட்டதாலும், பாரபட்சமற்ற முறையில்  வன்முறை தொடர்வதாலும் காசாவின் மருத்துவமனை ஒன்றில் சிறப்பு கவனிப்புத் தேவைப்படும் சிசுக்கள் இறந்துள்ளன என்றும் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளது யுனிசெப் நிறுவனம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2023, 14:34