தேடுதல்

இந்திய குழந்தைகள் இந்திய குழந்தைகள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - குழந்தைகளின் கனவுகள் மறுக்கப்படக்கூடாது

குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா என்று பாரதியார் குழந்தைகளின் வாழ்வை நான்கு வரி பாட்டில் பாடிவிட்டுச் சென்றார். ஆனால் குழந்தைகளின் நிலை பாரதியாரின் கனவுகளுக்கு இயைந்தவகையில் இன்று இருக்கிறதா என்பது சந்தேகம்தான். குழந்தையை குழந்தையாகவே பார்க்கிறோமா?, குழந்தைகளின் ஆசைகளையும், ஆர்வத்தையும், மனநிலையையும், அணுகுமுறைகளையும் கூர்மையாகக் கவனித்து அதற்கேற்றாற்போல் செயல்படுகிறோமா?, அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாடங்களை வகுக்கிறோமா? என நம்மையே நாம் ஒருமுறை கேட்டுப் பார்ப்போம். இத்தகைய அணுகுமுறையே குழந்தைகளின் வருங்கால ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு வித்தாக அமையும் என்பதையும் மனதில் கொள்வோம்.

இந்தியாவில் குழந்தைகள் தினத்தை நவம்பர் 14 ஆம் தேதி சிறப்பிக்கின்றோம். ஆனால் நவம்பர் 20ஆம் தேதியை உலக குழந்தைகள் தினமாக சிறப்பிக்கும் ஐ.நா. நிறுவனம், குழந்தைகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி, வேவ்வேறு நோக்கங்களுடன், 5 நாட்களை குழந்தைகளுக்கென ஒதுக்கியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி, வன்தாக்குதலுக்குப் பலியாகும் அப்பாவி குழந்தைகளுக்கான உலக தினம் சிறப்பிக்கப்படுகின்றது. அதே மாதம் 12ஆம் தேதி பாலர் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நாளும், மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்ற ஒளவையின் வாக்கை நினைவூட்டும்வகையில் அக்டோபர் 11ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமும், நவம்பர் 18ஆம் தேதி குழந்தைகள் பாலியல் முறையில் சுரண்டப்படுவது, அத்துமீறப்படுவது மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் உலக தினமும் சிறப்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் மணிமகுடமாக நவம்பர் 20ஆம் தேதி, உலக குழந்தைகள் தினத்தைச் சிறப்பிக்கின்றது. அதே குழந்தைகள் தினம், இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி, தேசிய குழந்தைகள் தினமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.  

உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம்.

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். வருங்கால இந்தியாவின் சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கமுடையதாக இத்தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கூறினார். நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதிதான்(1889) இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தார். நேரு அவர்கள் குழந்தைகள் பற்றிக் கூறும் போது, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை அளித்து அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகள் வழங்கும் போது தான் அவர்கள் தேசத்தின் வளர்ச்சியில் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள் என்றார்.

அதனால்தான், குழந்தைகள் மீது அளவற்ற அன்புகொண்டிருந்த பண்டிட் நேரு 1964ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதிக்கு குழந்தைகள் தினம் மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முன்னர், 1956ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 20ஆம் தேதி, உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. 1925ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1954ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுஅவை, உலக குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு, நவம்பர் 20ஆம் தேதியை உலக குழந்தைகள் தினமாக அறிவித்துள்ளபோதிலும், சில நாடுகளில் இது ஜூன் முதல் தேதி கொண்டாடப்படுகின்றது. உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கையில் அக்டோபர் முதல் தேதியும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 4ஆம் வாரத்திலும், பங்களாதேசில் மார்ச் 17ஆம் தேதியும், சீனாவில் ஜூன் 1ஆம் தேதியும், மத்திய ஆப்பிரிக்காவில் டிசம்பர் 25ஆம் தேதியும் கொண்டாடப்படுகின்றது.

குழந்தைகள் தான் ஒரு நாட்டினுடைய உண்மையான வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய அடித்தளம் என்றும் கருதினாா் நேரு. "இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குகின்றனா். நாம் எந்த வழியில் அவா்களை உருவாக்குகிறோமோ, அதுவே நமது நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும்" என்று நேரு அவா்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அவரைப் போலவே கனவுகளின் நாயகன் அப்துல்கலாம் அவர்கள் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். இத்தகைய தலைவர்கள் அனைவருமே வருங்கால இந்தியா குழந்தைகளால் அமையும் என கனவு கண்டனர். பாதுகாப்பான வாழ்விடம், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், விரும்பியவாறு கல்வி கற்கும் உரிமை, மகிழ்ச்சியாக விளையாடும் உரிமை என பல உரிமைகளும் சட்டங்களும் சட்டரீதியாக நடைமுறையில் உள்ளன. இவற்றை கடைப்பிடிக்காத பெற்றோர்களை கூட தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்பது சிறப்பான விடயமாகும். சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல்,போதைக்கு அடிமையாக்கல், பாலியல் உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபடுபவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எதிர்கால தேசத்தை ஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும். நாட்டின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பவர்கள் இன்றைய குழந்தைகள் தான். வெள்ளை மனம் கொண்ட இவர்களே நாளைய தலைவர்கள். எதிர்காலத்தில் உலகை ஆளப் போகின்றவர்கள் குழந்தைகளே. இவர்களைக் கொண்டாடி மகிழும் நாள்தான் குழந்தைகள் தினம். வாழ்வில் மகிழச்சியான பருவம் என்பது குழந்தை பருவம் தான். இது யாராலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளை தந்திருக்கும்.

எந்தவொரு செயலுடைய ஆரம்பமும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பது தான் நம் அனைவருடைய எதிர்பார்ப்பு. “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பது முதுமொழி. “இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களே” என டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் கூறிக்கொள்வார். இந்த குழந்தைகள் தினத்தில், குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பான சூழல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, தரமான கல்வி, மகிழ்ச்சிகரமான சூழல் என்பவற்றை சிறுவர்களுக்காக உருவாக்குவதில் நாடுகள் கவனம் செலுத்தவேண்டும். குழந்தைகளின் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை, கல்விக்கான உரிமை என பொதுவான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் கனவுகள் ஒரு நாளும் மறுக்கப்படக்கூடாது.

பலரும் இக்குழந்தைகளுக்கு உரிமை மீறல் நடக்கும்போதுதான் அவர்கள் நலன் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும்போது பேசுவதில்லை. உரிமை மறுப்புக்காக பேசினால் மட்டுமே, நம்மால் உரிமை மீறலை தடுக்கமுடியும். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற சொல்லில் உள்ள உண்மையைத் தெளிவுபடுத்துவதற்காகத் தான், நவம்பர் 14ஆம் தேதி இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இன்றி, அனைத்துக் குழந்தைகளுக்குமே அடிப்படை கல்வியும், அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம். நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குவது குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விடயங்கள்தான். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். வெறும் புத்தகங்கள் மட்டுமே சிறந்த கல்வி என்ற மனநிலை மாறி தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே உடன்பிறப்பு உணர்வும், உதவும் மனப்பான்மையும் வளரும் என்பது உண்மை. குழந்தைகளின் உரிமைகளை காக்க நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக இந்நாளைப் பார்க்க வேண்டும் என்கிறது யுனிசெஃப். குழந்தைகளுக்கு உாிய உாிமைகளைப் பற்றிய, மற்றும் அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் அதிகாிக்க வேண்டும் என்பதற்காகவும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்பான பெற்றோர், உயர்த்தி விடும் தியாக எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மிகச்சிறந்த அரசாங்கம், நம்பிக்கை தரும் நண்பர்கள் இது போன்றவர்களால் கட்டமைக்கப்படும் சூழல், சிறுவர்கள் வாழ்வதற்கேற்ற மிகச்சிறந்த சமுதாயமாக இருக்கும். குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோரும் ஆசிரியர்களும் முயற்சிக்க வேண்டும்.

இந்த குழந்தை பருவத்தில் குழந்தைகள் தமது சூழலில் இருந்து நிறைய கற்று கொள்வார்கள், நமக்கு நிறைய கற்றுத் தருவார்கள். ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறான் என்பது போல அந்த மழலைகளின் உலகம் மனிதர்களின் மனக் காயங்களுக்கு மருந்திடும். எனவே, நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளின் பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் வழியாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும். ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது. உலகத்தில் மிகச்சிறந்த நாடு எதுவென்றால், சிறுவர்கள் மிகவும் பாதுகாப்போடு வளரக்கூடிய சூழலை எந்த ஒரு நாடு கொண்டிருக்கிறதோ அதுதான்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2023, 14:58