தேடுதல்

பாகிஸ்தானில் உலக உணவு நாள் பாகிஸ்தானில் உலக உணவு நாள்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – உணவு தினமும் வறுமை ஒழிப்பு நாளும்

உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பது ஆரோக்கியமான உடலுக்கு சரியாக பொருந்தக்கூடிய பழமொழி. உடல் ஆரோக்கியமே நம்முடைய வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு உந்துசக்தியாக இருக்கின்றது. நம் உடலின் ஒவ்வோர் உறுப்பும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட சக்தியை நாம் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி உணவு உட்கொள்வது மூலமே உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் உணவு உட்கொள்வது என்பது ஏதோ ஒரு வேலை போலவே ஆகிவிட்டது. வேலைப்பளு காரணமாக சாப்பிடவில்லை என்று சர்வசாதாரணமாக சொல்லிக்கொண்டு போகிறவர்களும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினத்தையும் 17ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு நாளையும் சிறப்பிக்கின்றோம்.

அக்டோபர் 16. உலக உணவு தினம்

முதல் உலக உணவு தினம் அக்டோபர் 16, 1981 அன்று கொண்டாடப்பட்டது, 1945இல் FAO நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று உலக உணவு தினம் சிறப்பிக்கப்படுகிறது.

பசி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளாவிய தளமாக இந்நாள் செயல்படுகிறது, மில்லியன் கணக்கான மக்கள் இன்னும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசியால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மக்களுக்கு நினைவூட்டுகிறது. உலக உணவு தினம் நீடித்த விவசாய நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, இது நீண்டகால உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விவசாயத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும் முக்கியமானது.

இது உணவை மட்டும் அணுகாமல், சத்தான மற்றும் சீரான உணவுகளை அணுகுவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது. உலக உணவு தினம் பல்வேறு பின்னணிகள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ஒரு பொதுவான இலக்கை நோக்கி வேலை செய்கிறது, பசியை முடிவுக்குக் கொண்டுவருகிறது. உணவுப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் அரசுகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் முயற்சிகளை மதிப்பாய்வு செய்யவும், விவாதிக்கவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது, இது கொள்கை மேம்பாடுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பசியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதிக அர்ப்பணிப்புக்கு வழிவகுக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், உலக உணவு தினம் என்பது பசிக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், நிலையான விவசாயம் மற்றும் ஊட்டச்சத்துக்காக வாதிடுவதற்கும், அனைவருக்கும் பாதுகாப்பான, சத்தான மற்றும் போதுமான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய கூட்டு நடவடிக்கையை அணிதிரட்டுவதற்கும் ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

உலக உணவு தினம் 2023ல் ‘நீர்தான் உயிர், தண்ணீரே உணவு’ என்ற கருப்பொருளில் கவனம் செலுத்துகிறது. இந்த தலைப்பு, பூமியில் உள்ள உயிர்களுக்கு நீர் மற்றும் நமது உணவின் அடித்தளமாக இருக்கும் முக்கிய பங்கை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நீர் இருப்பை அச்சுறுத்துவதால், தண்ணீரை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதற்கான முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது முயல்கிறது.

உலகம் முழுவதும் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பல நாடுகளில் பட்டினி என்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. அதையும் தாண்டி ஊட்டச்சத்து உணவுகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது இதன் குறிக்கோளாகும். உலகளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 9-ல் ஒருவர் பசியில் இருக்கிறார். மூன்று பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை அளிக்கிறது புள்ளிவிவரம். ஒருபுறம் உணவின்றி ஒருசாரார் தவித்துவரும் நிலையில் மறுபுறம் உணவு வீணாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது.

2020 ஆம் ஆண்டில் கணக்கீட்டின் படி, உலகளவில், ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குன்றியுள்ளனர், பலருக்கும் போதிய ஊட்டச்சத்து இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், கடந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடக்கத்தக்கது.

நகரமயமாதல் போன்ற காரணங்களால் விவசாயங்கள் அழிந்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவு என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது. குறைந்த காலங்களில் அதிக மகசூல் வேண்டி இயற்கைக்கு எதிராக உணவுபொருட்களை விளைவிப்பதும், உணவு விஷமாகும் ஆபத்துதான் எனவும் கூறப்படுகிறது. ஆரோக்கியமான உணவு என்பது அளவை பொறுத்தது இல்லை எனக்கூறும் மருத்துவர்கள், வயிறு முட்ட ஊட்டச்சத்து இல்லாத உணவை உண்பதைக் காட்டிலும், சீரான இடைவெளியில் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ளுதலே பயன் தரக்கூடியவை என்றும் அறிவுரை கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தின் அச்சாணியே உணவு. ஆனால் வயிற்றை நிரப்பி பசியை போக்க மட்டுமே உணவு என்ற நிலை வந்துவிட்டதாகவும், இதுவே ஊட்டச்சத்து குறைபாடான தலைமுறையை உருவாக்கி வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள், கீரை வகைகள் என ஊட்டச்சத்து அதிகம் உள்ள இயற்கை உணவுகளை உட்கொள்ளுதல், துரித உணவுகளை தவிர்த்தல், நொறுக்குத் தீனிகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், முடிந்தவரை வீட்டில் சமைத்து உண்ணுதல் போன்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதே உண்மை.

WFP என்னும் உலக உணவு திட்டத்தின் கீழ், தேவைப்படும் அனைவருக்கும் உதவ ஆண்டுக்கு சுமார் ரூ.1.60 இலட்சம் கோடி தேவை. ஆனால் தற்போது ரூ.82 ஆயிரம் கோடி முதல் ரூ.1.15 இலட்சம் கோடி மட்டுமே நிதி இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இதை கூட எட்ட முடியாமல் இந்த ஆண்டு சுமார் ரூ.41 ஆயிரம் கோடி மட்டுமே உலக உணவு திட்டத்திற்கான நன்கொடை நிதி கிடைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று, உக்ரைன் போர் மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள், மனிதாபிமான தேவைகளின் உச்சத்தை எட்டச் செய்துள்ளது. ஆனால் நிதி மிக மிக குறைந்துள்ளது. போதிய நிதி இல்லாததால் ஆப்கானிஸ்தானில் வழங்கப்படும் உதவிகள் 66 சதவீத மக்களுக்கு குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு உலக பசி தரவரிசையில் 101வது இடத்திலிருந்த இந்தியா, 2022ஆம் ஆண்டு 107வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2022ம் ஆண்டுக்கான உலக பசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 136 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தரவில் 121 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளனர். அந்த 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.

உலக பசி குறியீடானது ஒரு நாட்டு மக்கள் சராசரியாக எடுத்துக் கொள்ளும் கலோரியின் அளவு (Undernourishment), ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை அதன் வயதுக்கு ஏற்ற உயரம் உள்ளதா (Child stunting), ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை உயரத்திற்கு ஏற்ப எடை உள்ளதா (Child wasting), ஐந்து வயதிற்கு முன்னதாக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை (Child mortality)  ஆகிய 4 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

குறிப்பாக, 2014ம் ஆண்டுக்கு முன்பாக உலக பசி பட்டியலில் இந்தியா 55வது இடத்தில் இருந்துள்ளது. அந்த ஆண்டில் 76 நாடுகளைக் கொண்டு அத்தரவரிசை பட்டியலிடப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் பசி விகிதம் அதிக அளவில் அதிகரித்துள்ளது. 2015ம் ஆண்டு 104 நாடுகளில் 80வது இடத்திலும், 2016ம் ஆண்டு 118 நாடுகளில் 97வது இடத்திலும் எனத் தொடர்ந்து பின்னடைவினையே சந்தித்து வந்தது. 2022ம் ஆண்டின் உலக பசி தரவரிசை பட்டியலில் ஏமன் நாடு கடைசி இடமான 121வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை (64), நேபாளம் (81), பாகிஸ்தான் (99) ஆகியவை, இந்தியாவை விட தரவரிசையில் முன்னேறி உள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் 2021-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி புள்ளிவிவரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அத்தகவலின்படி இந்தியாவிலுள்ள குழந்தைகளில் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் 35.5 விழுக்காடு, உயரத்திற்கேற்ப உடல்  எடை இல்லாதவர்கள் 19.3 விழுக்காடு, மற்றும் குறைவான எடை உள்ளவர்கள் 32.1 விழுக்காடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக பசி தரவரிசையில் இந்தியாவின் நிலை பின்னடைவில் இருப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து அரசு தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டியுள்ளதை அறிவுறுத்துவதாகவே உள்ளது. 

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஒரு நபருக்கு 50 கிலோ என்ற அளவில் உணவு வீணடிக்கப்படுகிறது. இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது

அக்டோபர் 17. உலக வறுமை ஒழிப்பு நாள்

1990க்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், உலக வறுமைக்கோட்டுக்கு கீழே (தினசரி வருமானம் சுமார் 1.90 டாலர்) வாழும் மக்களின் எண்ணிக்கை 1.9 பில்லியனில் இருந்து 735 மில்லியனாகக் குறைந்துள்ளது.

2015ல் உலகின் ஏழைகளில் பாதி பேர் ஐந்து நாடுகளில் - இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, பங்களாதேசில் இருந்தனர்.

சமீபத்திய கணிப்புகளின்படி அதிக மக்கள் ஏழ்மையில் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை விட நைஜீரியா முந்திவிட்டது அல்லது முந்தும் நிலையில் உள்ளது என தெரிய வந்துள்ளது. ஏழ்மைக்கு எதிரான போரில் பல ஆப்பிரிக்க நாடுகள் நல்ல முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், 2030 ஆம் ஆண்டுக்குள் தினம் 1.90 டாலர் அல்லது அதற்கு குறைவன வருவாய் உள்ள 10 பேரில் 9 பேர் சஹாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொலைநோக்கு வளர்ச்சி இலக்கு.

மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை தான். யாரும் விரும்பாத வறுமை, வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் உருவாக்கப்பட்டது. வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை என சொல்லப்படுகிறது. பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்து வரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன.

“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.”

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை என்கிறார் வள்ளுவர்.

ஏழ்மை நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க அக்கறை இல்லாததே மேலும் ஒரு காரணம்.

நாம் விருப்பமான உணவை சாப்பிட ஆசைப்படும் அதே வேளையில், பலர் சாப்பிட ஏதாவது இருந்தால் போதும் என்ற படியில் நிற்கின்றனர் என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும். நம்மால் உதவ முடியவில்லையே என நினைக்கும் பலர், தான் வீணாக்கும் உணவையும், செல்வத்தையும் வழங்க முன்வந்தாலே பலருக்கு பசிப்பிணி போகும் என்பதுதான் உண்மை. வளர்ச்சியை நோக்கி செல்லும் நாம் பசி-பட்டினி இல்லை, வறுமை இல்லை என்று சொல்லும் நாளே வறுமை ஒழிக்கப்பட்ட நாள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2023, 15:14