தேடுதல்

ஆப்கானிஸ்தானில் திறந்தவெளியில் கல்வி பயிலும் பெண் குழந்தைகள் ஆப்கானிஸ்தானில் திறந்தவெளியில் கல்வி பயிலும் பெண் குழந்தைகள்  (ANSA)

வாரம் ஓர் அலசல் – பெண்குழந்தை, பெற்றோரின் தாய்

பெண் குழந்தைகளை கௌரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், அக்டோபர் 11ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சிகரங்களைத் தொட்டு ஆணுக்கு பெண் இணை என அவர்களே நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் அன்றே பாரதியார், 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்', என முன்னறிவித்துச் சென்றார்.

'மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்ற கவிமணியின் வரிகள் உண்மையாகி வருவதைப் பார்க்கும்போது, பெருமையில் உள்ளம் பூரிக்கத்தான் செய்கின்றது.

இதற்கேற்றாற்போல் ஒவ்வோர் ஆண்டும், அதாவது 2012ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளை கௌரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும், வரும் புதன்கிழமையன்று சிறப்பிக்கப்படவிருக்கும் இந்த உலக தினம், ஐ.நா நிறுவனத்தால் 2011ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக பெண் குழந்தைகள் நாளுக்காக இந்த ஆண்டு, ‘பெண்குழந்தைகளின் உரிமைகளில் முதலீடுச் செய்தல் : நம் தலைமைத்துவமும் நல வாழ்வும்’ என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

பெண் குழந்தை பிறந்தாலே செலவு, பெண் குழந்தை ஒரு சுமை, பெண்சிசுக் கொலை என்ற நிலை எல்லாம் மாறி, பெண்கள் சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சக்தி என்ற நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒரு செய்தியாகும். எல்லா துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த துறைகளில் கூட பெண்கள் காலடி வைத்து மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஆணிவேராக பெண் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி மற்றும் அவர்கள் உரிமைகளை வழங்க வேண்டியது கட்டாயமாகிறது. மாற்றம் என்பதை தனிநபரால் கொண்டு வர முடியாது. தனி நபர் என்பவர் ஒரு துவக்கப் புள்ளியாக இருக்கலாம், ஆனால், சமூகமாக நாம் ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் சமுதாய மாற்றங்கள் இடம்பெறுகின்றன.

குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொணர்தல், என்பதை 2012ஆம் ஆண்டின் உலக பெண் குழந்தைகள் தினத்திற்கான தலைப்பாகக் கொண்டுச் செயல்பட்டு, அதன்பின் தொடர்ச்சியாக, பெண்குழந்தைகள் கல்விக்கான புத்தாக்கம்,  இளம்பெண்ணுக்கு அதிகாரமளித்து வன்முறை சக்கரச் சுழற்சியை முடிவுக்குக் கொணர்தல், இளம்பெண்ணின் சக்தி 2030க்கான எதிர்நோக்கு,  பெண்களின் முன்னேற்றம், நெருக்கடிகளை சமாளிக்க பலமளித்தல், திறன்வாய்ந்த பெண்குழந்தைகளின் சக்தி, பெண்குழந்தைகளின் சக்தி எழுத்தில் வடிக்கமுடியாதது மற்றும் நிறுத்தப்பட முடியாதது, என் குரல் நம் சரிசம வருங்காலம், இலக்கமுறை தலைமுறை நம் தலைமுறை, நம் நேரம் நம் உரிமைகள் நம் வருங்காலம், எனத்தொடர்ந்து பல தலைப்புக்களை ஆய்வு செய்து செயல்படுத்த முனைந்துள்ள ஐ.நா. அவை, இவ்வாண்டிற்கான தலைப்பாக, "பெண்குழந்தைகளின் உரிமைகளில் முதலீடுச்செய்தல் : நம் தலைமைத்துவமும் நல வாழ்வும்" என்பதை எடுத்துள்ளது.  

மக்கள் மற்றும் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு மற்றும் சம உரிமை கிடைப்பதை உறுதிசெய்வது, பாலின சமநிலையை மேம்படுத்துவது, பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது என்ற நோக்கத்தோடு சிறப்பிக்கப்படும் இந்த நாள் தன் பாதையில் சாதித்தவைகள் குறித்து நாம் சிறிது சிந்திக்க வேண்டும். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் இன்றும் அளவில்லாதவை. சிறு குழந்தைகள்கூட கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் பத்திரிகைகளில் வாசிக்கின்றோம். ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கான எதிர்ப்புக்கும் மற்றும் சம உரிமை போராட்டத்துக்கும் தாக்கப்படுகிறாள் என்று பல முன்னணி தன்னார்வ அமைப்புகளின் ஆய்வுகள் கூறுகின்றன. பெண் குழந்தைகளை வேட்டையாடும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம். வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம். நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 19% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 3% கூட இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் மீட்கும் ஆலோசனைகள்கூட சரியாகக் கொடுக்கப்படுவதில்லை. பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல, குழந்தைத் திருமணம், பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள் என இன்றும் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும், இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஆப்கானிஸ்தானில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும் என்ற அடிப்படை உண்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும். பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல், பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், உரிமைகளை காத்தல், மற்றும், சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவை அடிப்படையானவை, அத்தியாவசமானவை. உலக பெண் குழந்தைகள் தினம் குறித்து நாம் தெள்ளத் தெளிவாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது பெண்களை வலிமையாக்குவதற்கு அல்ல. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ள வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கே இந்த முயற்சிகள்.

இன்றைய உலகில் ஆண்-பெண் விகிதம் குறித்த விவரங்களை நாம் பார்த்தோமானால், சில விடயங்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். கத்தார் நாட்டில்தான் இந்த விகிதம் மிகவும் மோசமாக உள்ளது. அதாவது, மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் என்ற எண்ணிக்கையில்தான் ஆண்-பெண் விகிதம் உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் அரபு ஐக்கிய அமீரகத்தில் 222 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற விகிதம் உள்ளது. ஓமன் நாட்டிலோ இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதம் உள்ளது. இவ்வளவு தூரம் வித்தியாசம் இல்லையெனினும், இந்தியாவிலும் பெண்களைவிட ஆண்கள் அதிகமாகவே இருந்து வருகின்றனர். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 111 ஆண்களுக்கு 100 என்ற விகிதம் இருந்தது. 2015-16 ஆய்வில் 109 ஆண்களுக்கு 100 பெண்கள் என்றும், 2019/21 புள்ளிவிவரங்களின்படி 108க்கு 100 என்றும் படிப்படியாக முன்னேறிவருகிறது.

தாய் நாடு என்றும், தாய்மொழி என்றும், தாய் பூமி என்றும், இயற்கை அன்னை என்றும் அழைக்கிறோம். வளம் தரும் நதிகளைக்கூட பெண்ணாகத்தான் காண்கிறோம். அதேவேளை, பெண்களை சக்தியாகப் போற்றுகிறது ஆன்மிகம். வீட்டிற்கு வந்த மருமகளை, ‘வீட்டுக்கு வந்த மகாலட்சுமி’ என்று போற்றிக் கொண்டாடுகிறோம். அதேபோல்தான், ஆண் குழந்தை பிறந்தால், ‘சிங்கக்குட்டி பொறந்திருக்கான்’ எனும்போது, பெண் குழந்தை பிறந்துவிட்டால், ‘நம்ம வீட்டுக்கு மகாலட்சுமியே மகளா வந்து பொறந்திருக்கா’ என்று பெருமிதம் கொள்கிறோம்.

சாயல்களால் நிறைந்த இந்த உலகத்தில், உங்கள் மகளிடம் உங்களுடைய அம்மாவைக் காண்கிறீர்கள், அம்மாவாகவே அவர்களைப் பார்க்கிறீர்கள்’’ என்கிறார் தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அதனால்தான் ஒருகட்டத்தில், ‘என் தாயீ’ என்று பெண் குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் தேவதைகள் நடமாடுவதாக ஐதீகம். பெண்குழந்தை பிறந்தாலே மகாலட்சுமி பிறந்து விட்டதாகவே நினைத்து பலரும் கொண்டாடுகின்றனர். ஆண் குழந்தைகள் அன்பாக இருப்பார்கள், ஆனால் பெண்குழந்தைகள் மட்டும்தான் இன்னொரு அம்மாவாக இருப்பார்கள் என்று கூறுவதுண்டு. அந்த பெண் குழந்தைகளை சரிநிகர் உரிமைகளுடன் நடத்துவோம். அவர்களின் திறமைகளை அங்கீகரித்து, ஊக்கமளிப்போம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2023, 14:07